அதிக மதிப்பெண்கள்
கூடுதல் புத்துணர்ச்சி
ஸ்பெஷல்
Published:Updated:

அவதார்

ஒளவைக் கோட்டத்தில் பிள்ளைப் பாட்டிகள் !கே.குணசீலன், எஸ்.சிவபாலன் முத்து கரு.முத்து, கே.ஆர்.ராஜமாணிக்கம்

##~##

'காணக் கண்கோடி வேண்டும் அம்மா’ என்ற வரிகளைத்தான் அன்று திருவையாறு மக்கள் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டார்கள். காரணம், அன்று திரும்பிய திசை எல்லாம் ஒளவைப் பாட்டிகள், கூன் விழுந்த முதுகோடு கையில் கோல் ஏந்தி நரைத்த தலையுடன் நடந்துகொண்டு இருந்தார்கள். ஆத்திச்சூடி தந்த முதியவளான ஒளவையை, அன்று இளம்பிஞ்சாக, சின்னஞ்சிறுசாக, மூன்று மற்றும் நான்கு அடிகள் உயரத்துக்குப் பார்க்கக் கிடைத்தால், பார்த்த விழிகள் பாக்கியம் செய்தவைதானே! இந்த எல்லா ஒளவைகளையும் நாம் பார்த்தது திருவையாறில் உள்ள, ஒளவை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில்.

எல்.கே.ஜி படிக்கும் தம்பி ஒளவையைக் கையில் தூக்கிவரும் அக்கா ஒளவையார், திருநீறு பூசி வெண்மையாக்கப்பட்ட தலையுடன் சிணுங்கியவாறே அன்னையின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து வரும் ஒளவையார், அன்னையின் கைபிடித்து அழகு மிளிர வரும் ஒளவையார் என்று பள்ளித் திடல் முழுவதும் பாங்குடன் மிளிர்ந்தது, 60-க்கும் அதிகமான ஒளவைகளின் கேட்வாக்.

யார் ஆண்? யார் பெண்? என்று இனம் கண்டறிய முடியாத நிலையில் அத்தனை குழந்தைகளுமே அப்படியே அச்சு அசலாக ஒளவையாராகக் காட்சி அளித்தனர். விக், வண்ணப் பூச்சு, விபூதிப் பூச்சு என்று தலையை வெள்ளையாக்க யுத்தமே நடந்து இருந்தது. பஞ்சை வாங்கி அழகாகக் கோத்து, வெண்பஞ்சுத் தலையை உருவாக்கி இருந்தார்கள் சில அன்னைகள். கையில் ஓலைச்சுவடி, சிலர் கையில் அவர்களை விட உயரமான கோல், சிலர் புடவை, சிலர் வேட்டி, சிலர் துண்டு, எல்லோர் தோளிலும் கட்டாயமாகக் கொலுவீற்று இருந்தது ஒளவையின் தோள்பை.

அவதார்

தயாராகி வந்திருந்த ஒளவையார்கள் எல்லோரும் ஓர் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு குட்டி ஒளவை மட்டும் பெற்றோர் நிற்கும் திசையில் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தச் சுட்டிக்கு அம்மாவின் முகம் தெரிந்ததுதான் தாமதம், ''எம்மோவ், தண்ணீ...'' என்று கேட்டாள்.  சொன்னது காதில் விழுந்ததோ இல்லையோ என சந்தேகப் பட்டு, வாயிலும் கையை வைத்து, தண்ணிக்கு சிக்னல் காட்டினாள்.

மாடியில் மேக்-அப் போட்டு முடித்ததும், புடவைக் கட்டோடு கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி. அவளை அப்படியே பொம்மைப் போல தூக்கி வந்தார்கள், அவள் வகுப்புத் தோழர்கள் இருவர்.

எல்லோரும் வந்ததும், ''வாங்க... எல்லோரும் ஒளவைக் கோட்டம் கோயிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துவிடுவோம்'' என்றார் தாளாளர் கண்ணகி கலைவேந்தன்.

அவதார்

எல்லா ஒளவைகளும் கிளம்பினார்கள்.  யாரோ ஓர் ஒளவை, ஷூ போட்டு இருப்பது தரையில் உராயும் ஒலி மூலம் கேட்டது. எல்.கே.ஜி படிக்கும் ஹரிஷ்குமார்தான் வழக்கம்போல் ஷூ போட்டு வந்திருந்தான். அவனது அம்மா, அதனைக் கழட்டிவிட்டார். தோள்பை நழுவ, அதனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு, இன்னொரு கையில் கோலைப் பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கூன் போட்டது போல் அந்த ஒளவை நடக்க ஆரம்பித்தார்.

அவதார்

ஒளவைக் கோட்டத்தின் முன்னால் நின்று எல்லா ஒளவைகளும் ஒரே குரலில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி ஆகியவற்றில் சில பாடல்களைப் பாடி வழிபட, அதைத் தொடர்ந்து ஒளவை தொடர்பான நிகழ்வுகளை நடித்துக் காட்டினார்கள்.மன்னன் அதியமானாக,  விநாயகராக... சில சுட்டிகள்வேடமிட்டுக்  கலக்கினார்கள்.

அவதார்

காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சிகள், மதியம் 1 மணியைத் தாண்டியும் தொடர்ந்து நடக்க, பசி தாங்காத ஒளவைகள், வேஷத்தைக் கூட கலைக்க நேரம் இல்லாமல், அப்படியே உணவை அருந்தினார்கள். தாயின் மடி அமர்ந்து ஒளவை உணவு அருந்துவது சாதாரணமான காட்சியா என்ன? மொத்தத்தில் சங்க காலத்துக்கு நம்மை அழைத்துப் போனார்கள் ஒளவைப் பள்ளி மாணவர்கள். பள்ளியைவிட்டு நகர்ந்தாலும் ஒளவைகள் ஒலித்த நல்வழிப் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.


சங்க காலம் எனக் குறிக்கப்படுகிற காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெண் புலவர், ஒளவையார். ஆத்திச்சூடி தந்த அன்னை இளம் வயதிலே தமிழில் பாடல்கள் பல புனைந்தவர். எளிய மொழியிலும், அதே சமயம் மனதுக்கு நெருக்கமானதாகவும் ஒளவையாரின் பாடல்கள் அமைந்தன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூரை (இன்றைய தர்மபுரியை) ஆண்ட அதியமானுடனும், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியுடனும் நெருங்கிய நட்புக்கொண்டு இருந்தார். நீண்ட காலம் வாழ வைக்கும் நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்து, ''தமிழ் நீடித்து வாழ வேண்டும்'' என்றார் அதியமான். அந்த அளவுக்கு தமிழில் ஆழ்ந்த அறிவு ஒளவைக்கு இருந்தது. போரில் ஒளவையின் நண்பர் பாரி, மூவேந்தர்களால் கொல்லப்பட, ஒளவையார் துக்கம் பொங்க எழுதிய பாடல்கள், இன்னமும் கண்ணீர் வரவைப்பவை. ஒளவையாரின் பல்வேறு பாடல்கள் அகநானூறிலும் புறநானூறிலும் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் காணப் படுகின்றன. அவர் ஊர் ஊராக நடந்தே சென்று ஏழை மக்களைப் பற்றி பாடுவார். அவர்கள் வீட்டில் உணவு அருந்துவார். முருகர் மீது மிகுந்த பக்திகொண்டவர். மன்னர்கள் கொடுக்கும் பரிசுகளை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், நாடோடி வாழ்க்கை வாழ்ந்த வித்தியாசமான தமிழ் பாட்டி ஒளவை.

திருவையாறில் உள்ள ஒளவையார் மழலையர் பள்ளி, ஒளவையாரின் அறநெறிகளைப் பரப்புவதற்காக 1993-ல் துவக்கப்பட்டது. பள்ளி முழுவதும் ஒளவை சொன்ன அழகு வரிகள், கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு இருக்கின்றன. காலைப் பிரார்த்தனையே, ஒளவையின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி ஆகியவைதான். பள்ளியின் முகப்பில், ஒளவைக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள், அறநெறிகளை மனனம் செய்வதோடு, அதனை வாழ்விலும் கடைப்பிடிக்க, வழிமுறைகளும் கற்பிக்கப்படுகிறது. பல்வகைத் திறன்களை வளர்க்க அறிவியல், ஓவியம் மற்றும் படத்தொகுப்புக் கண்காட்சியும், இசை, பேச்சுப் பயிலரங்கமும் நடத்தப்படுகிறது. உடற்பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. ஒளவையின் அறநெறிகளை நினைவுபடுத்திக்கொள்வதற்காக, மௌன வழிபாடும் உண்டு. ஒளவையாருக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவில், அனைவருக்கும் நெல்லிக்கனிகள் வழங்கப்படுகின்றன. 5-ஆம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுபவருக்கும் அவரது பெற்றோருக்கும் பரிசு வழங்கப்படுகிறது.