ஸ்பெஷல்
Published:Updated:

அவதார்

குதிரையில் வந்த குட்டி நேதாஜிகள் !கே.யுவராஜன், ப.பிரகாஷ் எம்.விஜயகுமார்

##~##

''அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்!''

இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நெகிழ்ச்சியாகச் சொன்னார். காரணம், நேதாஜியின் 'ஜான்சி ராணி பெண்கள் படை’ கேப்டனாக இருந்த லட்சுமி ஷேகல் உட்பட தமிழ்நாட்டில் இருந்து பலரும் நேதாஜியின் படையில் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.

நாமக்கல் மாவட்டம், எளச்சிபாளையம், வித்ய பாரதி மேல்நிலைப் பள்ளியின் சுட்டிகள், நேதாஜி வேடத்தில் கம்பீரமாக வந்ததைப் பார்த்தபோது அவர் சொன்னது உண்மைதான் என்று தோன்றியது. அத்தனை பேருமே எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்புக்குள் படிக்கும் க்யூட் நேதாஜிகள்.

இந்தக் கம்பீர அணிவகுப்புக்கு முன்னதாக, அத்தனை சுட்டிகளும் பெற்றோர்களுடன் வந்து காத்திருந்தனர். நேதாஜிக்கான ஆடைகள் வரவில்லை. ''தமிழ்நாட்டின் 'பவர் கட்’ பிரச்னையால் எத்தனையோ பாதிப்புகள். அதில் இந்த சுட்டி நேதாஜிகள் உருவாவதும் தாமதம் ஆகுது. நேற்றே வர வேண்டிய ஆடைகள் பவர் கட்டால் தைக்க முடியாமல் போயிடுச்சு. நேதாஜிகளின் பெற்றோர்கள் கோவிச்சுக்காம கொஞ்ச நேரம் காத்திருக்கணும்'' என்று நகைச்சுவையுடன் சொன்னார் பள்ளி முதல்வர் சசிகலா.

அவதார்

சற்று நேரத்தில் நேதாஜிகளுக்கான ஆடைகள் வந்தன. 'பரபர’ என சுட்டி நேதாஜிகள் உருவாக ஆரம்பித்தார்கள். பெற்றோர்களுடன் சேர்ந்து, ஆசிரியர்களும் சீனியர் சுட்டிகளும் நேதாஜிகளைத் தயார்செய்தனர்.

சீனியர் சுட்டிகள் சட்டையைக் கழற்ற நெருங்கியதும், ''ம்ஹூம்... அம்மாகிட்டேதான் டிரஸ் பண்ணிப்பேன்'' என்றவாறு, வெட்கத்துடன் சில சுட்டிகள் ஓட ஆரம்பித் தார்கள். விடுவார்களா சீனியர் சுட்டிகள்? குஷியுடன் விரட்டிப் பிடித்து, தூக்கி வந்து ஆடைகளை மாற்றினார் கள். சற்று நேரத்தில் அந்த சீனியர் சுட்டிகளிடம் இவர்கள் பாசத்துடன் ஒட்டிக்கொண்டார்கள். பிறகு, நேதாஜி வேடத்தில் சீனியர் சுட்டிகளின் இடுப்பில் அமர்ந்தவாறு மைதானத்துக்கு வந்தார்கள்.

அவதார்

கச்சிதமான ராணுவ உடை, பொருத்தமான தொப்பி என நிஜமான நேதாஜிகளாகவே மாறிவிட்ட சுட்டிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் மட்டும் நேதாஜி போல் கிடைக்கவில்லையாம். அதனால் என்ன என்பதைப் போல் கறுப்பு மற்றும் வேறு வண்ணங்களில் கூலிங்கிளாஸ்களை அணிந்துகொண்டார்கள். அதுகூட பார்ப்பதற்கு கொள்ளை அழகுடனே இருந்தது.        

சுட்டி நேதாஜிகளுக்கான நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. குதிரை ஏற்றம் பயிற்சி கற்கும் சுட்டிகளுக்காக பள்ளியில் ஒரு குதிரை இருந்தது. அதில் அமர்ந்தவாறு கையில் தேசியக் கொடியை ஏந்தி, ''ஜெய்ஹிந்த்.... வந்தே மாதரம்'' என மழலைக் குரலில் முழங்கியவாறே வந்தான் ஒரு குட்டி நேதாஜி.

குதிரை அருகே வந்ததும் சில நேதாஜிகள் மிரண்டு, பின்னால் சென்றார்கள். எதற்கும் அஞ்சாத சில சுட்டி நேதாஜிகள், தாங்களும் குதிரையில் ஏற வேண்டும் என சொல்லி, குஷியுடன் ஏறிக்கொண்டார்கள். அத்துடன் குதிரைப் பயிற்சியாளரிடம் ''அங்கிள், கயிறை விட்டுடுங்க. நாங்களே ஒரு ரவுண்ட் போய்ட்டு வரோம்'' என்றார்கள்.

அவர் மெதுவாகக் கயிறை விட்டார். தன் மீது அமர்ந்து இருப்பவர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர் வேடம் அணிந்த சுட்டிகள் என்பது குதிரைக்குப் புரிந்ததோ என்னமோ, அலுங்காமல் குலுங்காமல் அமைதியாக பொடி நடைப்போட்டு மைதானத்தை வலம் வந்தது.

இதற்குள் மற்ற சுட்டிகளும் நேதாஜி வேடத்தில் வந்து சேர்ந்தார்கள். பள்ளி முதல்வர் அங்கே வந்ததும் எல்லோரும் வரிசையாக நின்று அழகாக சல்யூட் வைத்தார்கள். ''டியர் ஸ்டூடன்ட்ஸ்... உங்களுக்கு நேதாஜியைப் பற்றி தெரியுமா?'' என்று கேட்டார்.

''ஓ!'' என உற்சாகமாக குரல் வந்தது.

''யாராவது ஒருத்தர் இங்கே வந்து அவரைப் பற்றி சொல்லுங்க'' என்றதும் அத்தனைப் பேரும் 'கப்சிப்’ ஆனார்கள்.

அவதார்

பிறகு, ஒரு சுட்டி நேதாஜி மட்டும் தயங்கியவாறு முன்னால் வந்தான். வாயில் விரலைவைத்து அப்படியும் இப்படியுமா பார்த்து யோசித்தான். முதல்வர் அவன் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்து ''ம்.... சொல்லு. நேதாஜி என்ன சொன்னாரு?'' என்று கேட்டார்.

''வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!'' என்று சொல்லிவிட்டு 'குடுகுடு’ என ஓடிப்போய் கூட்டத்துடன் மீண்டும் சேர்ந்துகொண்டான்.

பிறகு, ''நீங்க சுதந்திர தினத்தின்போது நடக்கும் ராணுவ அணிவகுப்பை டிவியில் பார்த்து இருக்கீங்களா?'' என்று கேட்டார் ஒர் ஆசிரியர்.

சுட்டிகள் பலமாக தலையை ஆட்டினார்கள். ''அந்த மாதிரி இப்போ போகலாமா?'' என்று சொன்னதுமே, சில சுட்டிகள் 'லெஃப்ட், ரைட்’ போட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

''இருங்க... இருங்க! யாராவது ஒருத்தர் கையில் தேசியக் கொடியைப் பிடிச்சுகிட்டு முன்னாடி நடந்து வரணும். யார் பிடிச்சுக்கிறீங்க?'' என்று கேட்டார் ஆசிரியர்.

''நான் பிடிச்சுக்கிறேன் மிஸ். ஏன்னா, என் டிரஸ் கலர் எல்லோரையும்விட அழகா இருக்கு'' என்று லாஜிக் பேசி அசத்தினான் ஒரு சுட்டி.

அந்த சுட்டி நேதாஜியிடமே தேசியக் கொடியைக் கொடுத்தார் ஆசிரியர். அவன் கொடியுடன் கம்பீரமாக முன்னால் நடந்து வர, மற்ற சுட்டிகள் ''ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்'' என்று முழங்கியவாறு பின் தொடர்ந்தார்கள்.

 நேதாஜி...

அவதார்

ஒரிசாவின் கட்டாக் நகரில் பிறந்த சுபாஷ் சந்திரபோஸ், இளம் வயதிலேயே அடிமைத்தனத்தை எதிர்க்கிற குணம்கொண்டவராக இருந்தார். கல்லூரி படிக்கும்போதே இந்தியர்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளைச் சொன்ன ஆங்கிலேய பேராசிரியருக்கு எதிராகக் குரல் கொடுத்து, சிறைக்குச் சென்றார். ஐ.சி.எஸ். (இன்றைய ஐ,ஏ.எஸ்.) தேர்வில் தேறிய பின்பும், ஆங்கிலேயே அரசிடம் வேலை செய்ய விரும்பவில்லை. சித்தரஞ்சன் தாஸ் கொல்கத்தா மேயராக ஆனபோது, தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று, பல்வேறு அற்புதமான நிர்வாகப் பணிகளை திறம்பட செய்தார். 'ஆயுதங்களின் மூலமே ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்ட முடியும்’ என வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரில் கைதிகளான இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினார். அதில் பெண்களை முதன்முதலாகச் சேர்த்து புரட்சி செய்தார். 'ரத்தத்தைக் கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன்’ என முழங்கியவர், காந்தியோடு பல்வேறு விஷயங்களில் முரண்பட்டாலும், அவரை பெரிதும் மதித்தார். 'தேசப் பிதா’ என காந்தியை முதன் முதலில் அழைத்தவர் நேதாஜியே. காந்தியும், 'தேச பக்தர்களின் தேச பக்தர்’ என நேதாஜியை உணர்வு பொங்க அழைத்தார்.

                                         -பூ.கொ.சரவணன்

அவதார்

நாமக்கல் மாவட்டம், எளச்சிபாளையம், வித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2007-ம் ஆண்டு 199 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 1,700 மாணவர்கள் படிக்கிறார்கள். இதன் தாளாளர் சுதா ராஜேந்திரன். ''எங்கள் பள்ளி இருப்பது கிராமப் பகுதியில். கல்வி சம்பந்தமாக நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கின்ற அத்தனை சிறப்பான விஷயங்களையும் இவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் 2010-11ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளோம்'' என்கிறார்.

''படிப்புக்கு இணையாக விளையாட்டு மற்றும் பல்வேறு கலைகளிலும் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தவிர, தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, உளவியல் மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கிறோம். படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களின் மன ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் முக்கியம் ஆச்சே. அதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்'' என்கிறார் பள்ளி முதல்வர் சசிகலா