Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே...

கடவுள் சொன்ன செய்தி !சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் சாலமன் பாப்பையா !கே.கே.மகேஷ் முத்து எஸ்.கிருஷ்ணமூர்த்தி

##~##

'அன்புப் பெரியோர்களே... அருமைத் தாய்மார்களே... எல்லோருக்கும் வணக்கம்' என்று  பெரியவர்களுக்காக மட்டுமே பேசிக்கொண்டு இருந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, முதன் முறையாக சுட்டிகளுக்குக் கதை சொல்கிறார்.

மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு வந்த அவரை, 'வணக்கம் அய்யா' என்று தமிழ் மணக்க வரவேற்றார்கள் சுட்டிகள். 'வணக்கம் புள்ளைங்களா... அத்தனை பேரும் என் பேரப் புள்ளைங்க மாதிரியே இருக்கீங்க' என்று உற்சாகமான பாப்பையா தாத்தா, 'சரி, எதுக்காக நாம இங்கே வந்து இருக்கோம் சொல்லுங்க?' என்று கேட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'பழக வந்திருக்கோம்'' என்று குறும்பு செய்தான் கணேஷ் ராம்சுந்தர். சத்தமாய் சிரித்த பாப்பையா, 'பொடியன் உடைசலைக் குடுக்கிறான் பாரு. சரிய்யா, நீங்க எல்லாம் எந்தப் பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க?' என்று கேட்டார்.

'மதுரை ஸ்ரீ வித்யாலயம் பதின்ம மேல்நிலைப் பள்ளி அய்யா' என்றாள் சாரு பவித்ரா.

'பரவாயில்லையே, ஆங்கிலப் பள்ளி புள்ளைங்களா இருந்தாலும், அழகாத் தமிழ்ல சொல்றீங்களே' என்றவரிடம், 'அய்யா, இந்த மகாலைப் பத்திச் சொல்லுங்கய்யா' என்று கேள்வி மழையைத் தொடங் கினாள் சுந்தரவர்ஷினி.

ஒரே ஒரு ஊரிலே...

'இது மன்னர் திருமலை நாயக்கரோட அரண்மனை. தமிழ்நாட்டுல மிச்ச சொச்சம் இருக்கிற அரண்மனை களிலேயே இதுதான் அழகானது. இப்ப நீங்க பார்க்கிறது கால்வாசிதான். முக்காப் பகுதி அழிஞ்சுபோச்சு. பழமையைப் போற்றுகிற பழக்கம் நம்மிடம் குறைவு. இதைக் கட்டினவரே அவரோட பேரை எழுதிவைக்கலை. ஆனா, இப்போ சில பேர் பேரைக் கிறுக்குறான். கூடாதுல்ல... ஆமாய்யா. அந்த மாதிரி எல்லாம் எழுதக் கூடாது. அது ஒரு மாதிரி மனக் கிறுக்கு' என்றதும், சிரித்து ஆமோதித்தார்கள் சுட்டிகள்.

'உங்க நிஜப் பேரே சாலமன் பாப்பையாதானாய்யா?' -இது பர்வேஸ் முஷரப்பின் கேள்வி.

'ஆமாய்யா... நிஜப் பேருதான். அப்பா பேரு சுந்தரம். அம்மா பாக்கியம். என்கூடப் பிறந்தவங்க எட்டுப் பேர். நான் ஒன்பதாவது ஆளு.'

'அடேங்கப்பா, ஒன்பது பேரா?' என்று சாரு பவித்ரா வியப்பாகக் கேட்டாள். குறுக்கிட்ட ரமேஷ், 'அடுத்து என்ன படத்துல அய்யா நடிக்கிறீங்க?' என்றான்.

ஒரே ஒரு ஊரிலே...

'முதல்ல ஷங்கரோட 'பாய்ஸ்’ படத்தில் நடிச்சேன். ரஜினி நம்ம நண்பர். அவர் சொன்னதால 'சிவாஜி’யிலயும் நடிச்சேன். ஆனா, எங்க வீட்டுல நான் நடிக்கிறதை விரும்பலய்யா. வீட்ல உத்தரவு போட்டாச்சுனா  மீறக் கூடாதுல்ல? இனி அவ்வளவுதான்' என்றார் வருத்தமாக.

'உங்க சின்ன வயசைப் பத்திச் சொல்லுங்கய்யா' என்று தாத்தாவைக் குழந்தையாக்க முயன்றாள் சுந்தரவர்ஷினி.

'அப்போ எல்லாம் உங்களை மாதிரி அழகான சட்டை போட்டது கிடையாது.  தனத்தாலதான் ஏழையே தவிர, மனத்தால ஏழை கிடையாது'

ஒரே ஒரு ஊரிலே...

'மனத்தால் ஏழைன்னா என்னய்யா அர்த்தம்?'- இது காயத்ரியின் சந்தேகம்.

'எவ்வளவு பணம் இருந்தாலும், யாருக்கும் உதவ மாட்டாங்க' என்று சொல்லி முடிக்கும் முன்பே, 'ஓ... கஞ்சப் பிசுனாறியா?' என்றாள் காயத்ரி.

'அய்யா உங்களோட மறக்க முடியாத ஃப்ரெண்ட் யாரு?'- இது மோனிஷா.

'நிறையப் பேரு இருக்காங்க. நான் எம்.ஏ. படிக்கிறதுக்காக என் ஃப்ரெண்டு ஒருத்தன், தன்னோட சைக்கிளை வித்து, ஃபீஸ் கட்டினான். அவன் பேரு தியாகராஜன். நட்புங்கிறது பெரிய விஷயம். நட்புக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை. நட்பை விளக்குற கதைதான் இன்னிக்கு நான் சொல்லப் போறேன்' என்றதும், 'ஐ... ஜாலி' என்று கூச்சல் போட்டார்கள் சுட்டிகள்.

'ஒரு ஊர்ல ஜலீல்னு ஒரு பையன் இருந்தான். அவங்க அப்பா ஆசாத், பெரிய வியாபாரி. குடும்பமும் வசதியான குடும்பம். அவங்க அம்மாவும் ரொம்ப வசதியான வீட்டுல இருந்து வந்தவங்க. சொல்லவா வேணும்? செல்வம் கொட்டிக்கிடக்குது. ஆனா, வீட்டு வேலை செய்றதுக்கு ஆள் இல்லை. ஒரு வேலையாள் இருந்தா நல்லா இருக்கும்னு அந்த அம்மா யோசிக்குது. ஆனா, வெளியாட்களை வேலைக்குச் சேர்க்கிறதுக்கும் பயம். நியாயம்தானே... எதையாவது எடுத்துட்டுப் போயிட்டா?'

'அப்புறம் என்ன செஞ்சாங்க?' என்றான் சிவக்குமார் ஆர்வமாக.

'அதே தெருவுல ஜலீலோட ஸ்கூல் ஃப்ரெண்டு ருக்மணியோட வீடு இருந்துச்சு. அவங்க அப்பா, ரிக்ஷா வண்டி ஓட்டுறவரு. வீடே புறம்போக்கு நிலத்துலதான் இருக்குது. குடிப் பழக்கம் வேற. வரக்கூடிய வருமானமே குறைச்சல். அதுல இவர் வேற தண்ணி போட்டார்னா வீட்டுக்கு என்ன கொண்டு வர முடியும்? ருக்மணியோட அம்மா லட்சுமி, நாம ஏதாவது வேலைக்குப் போனாத்தான் குடும்பத்தைக் கரையேத்த முடியும்னு யோசிக்கிறாங்க.''

'அய்யோ பாவம்'' என்றாள் அமிர்தவர்ஷினி.

ஒரே ஒரு ஊரிலே...

'இதுக்கிடையில, நம்ம தெருவுலேயே வேலைக்கு ஒரு ஆள் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க ஜலீலோட அம்மா. அதனால, தெருக் கோடியில் இருக்கிற ருக்மணி வீட்டுக்குப் போய், தயங்கித் தயங்கி லட்சுமிகிட்ட கேட்டாங்க. அவங்க தப்பா நினைச்சிடுவாங்களோன்னு பயம். ஆனா, 'கடவுள் நமக்கு ஒரு வழியைத் திறந்திட்டார்’னு சந்தோஷப்பட்ட லட்சுமி, ''என் வீட்டுக்காரர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு கண்டிப்பா வர்றேன்மா''னு சொல்லிச்சு.

அன்னைக்கு ராத்திரி பார்த்து, வீட்டுக்காரர் தண்ணியைப் போட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட பேச்சை ஆரம்பிச்சதும்  ''நீ எது கேட்டாலும் இப்ப எனக்குப் புரியாது. காலைல கேளு''னு சொல்லிட்டுப் படுத்துட்டாரு. காலையில எந்திரிச்சதும், ஒரு டீயைக் கொடுத்து, மெதுவா கேட்டா லட்சுமி. ''ஏன்யா... நீ தப்பா நினைக்கலைனா உன்னோட சம்மதத்தோட... பிள்ளைகளுக்காக நானும் ஒரு வேலைக்கு...'' என்று

ஒரே ஒரு ஊரிலே...

இழுத்தாள்.

''என்ன வேலை பார்த்திருவ நீயி?'' அப்படின்னான் அவன்.

''இல்லைய்யா, நம்ம பாப்பா கூட படிக்கிறானே ஜலீலு, அந்தப் பையனோட அம்மா, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டாங்க. நான் போகட்டுமா?''னு கேட்டா.

''பணக்காரங்க வீட்டுல பத்தும் கிடக்கும். நான் கஞ்சி இல்லாம இருப்பேனே தவிர, என் பேர்ல பழியைச் சுமந்துட்டு இருக்க மாட்டேன். ஏன்னா, நான் மானஸ்தன். பார்த்துக் கவனமா நடந்துக்க’னு சொல்லி, சம்மதிச்சான் அவன்.

அந்தம்மா சந்தோஷமாக மறு நாளே வேலைக்குப் போனாங்க. நல்லா வேலை பார்த்தாங்க. பிள்ளைங்களைப் பிரச்னை இல்லாமக் கரையேத்திப்புடலாம்னு கனாக் கண்டாங்க. ஆனா, ஒரு நாள் காலையிலேயே தண்ணியப் போட்டுட்டான் ரிக்ஷாக்காரன். ரிக்ஷா ஓட்டிட்டுப் போகும்போது, எதிர்த்தாப்ல...'

'லாரி வந்துச்சு' என்றான் ராம்சுந்தர்.

'ஆமா. லாரி மோதி, ஆன் த ஸ்பாட்லேயே எல்லாம் முடிஞ்சுபோச்சு. ஆள் செத்துட்டாரு'

''அய்யய்யோ அப்புறம்?'' பதறினாள் ராகவி.

ஒரே ஒரு ஊரிலே...

'லட்சுமியோட குடும்பம் நிராதரவா நிற்குது. ஆண் துணையும் கிடையாது. வீட்டுல வறுமை. யாரு உதவி செய்றது? செய்றதா இருந்தா யார் செய்யலாம்?' என்று கேட்டார் பாப்பையா.

'ஜலீலோட அம்மா' என்றார்கள் கோரஸாக.

'அந்த அம்மாகிட்ட பணம் இருக்கு. ஆனா மனம் இல்லியே! அதனால, எதுவும் கொடுக்கலை. ஒரு நாள் பண்டிகையும் அதுவுமா, அப்பா கூட தொழுகைக்குப் போயிட்டு வந்தான் ஜலீல். வந்ததும், அம்மாகிட்டப் போனான். ''அம்மா, நம்ம வீட்டு வேலைக்கு ஒரு அக்கா வர்றாங்களே... அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க. ஏன் நாம அவங்களுக்கு உதவி செய்யக் கூடாது? கஷ்டப் படுறவங்களுக்கு உதவணும்னு அல்லாஹ் சொல்லி இருக்காரே''னு கேட்டான்.

அந்தம்மா ஒரு நிமிஷம் அவனையே பார்த்தாங்க. ''ஏன், உன்கிட்ட சொன்னாரா அல்லாஹ்?'' என்று கேட்டாங்க. அதுக்கு அவன், ''அல்லாஹ் நேரா நம்மகிட்ட சொல்ல மாட்டார்மா. தொழுகையின்போது, ஒருத்தர் மூலமா ஏழைகளுக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னாரு. அவரோட வாய் பேசிருச்சு. என் காது கேட்டு, மனசுல அது பதிஞ்சிருச்சு. ஆனா, எடுத்துக் கொடுக்கிறதுக்கு என் கையில எதுவும் இல்லையேம்மா. நீங்க கொடுக்கக் கூடாதா?''ன்னான் ஜலீல்.

சட்டுனு மனம் மாறிட்டாங்க அம்மா. ''நம்ம வீட்டுலயும் ஒரு மகான் பிறந்திட்டார்''னு சொல்லி,

ஒரே ஒரு ஊரிலே...

ஜலீலை கட்டிப்புடிச்ச அம்மா, ருக்மணியோட குடும்பத்துக்கும், அவளோட படிப்புக்கும் தாராளமா உதவி பண்ணுனாங்க.'

பாப்பையா கதை சொல்லி முடித்ததும், குழந்தைகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். கிளம்பும்போது, 'ஆசிரியர்களுக்கு கீழ்ப்படியணும். பெற்றோருக்கு அடங்கி இருக்கணும். என்னதான் இருந்தாலும் தாய் நாடு, தாய் மொழிப்பற்றை மட்டும் என்னைக்கும் விட்டுரக் கூடாது சரியா?' என்றுகேட்டுக் கொண்டார் பாப்பையா.

விடைபெறும் போதும், 'மறுபடியும் நாளை சந்திப்போமா?' என்று கேட்டு, பாப்பையாவைச் சிரிக்கவைத்தான் ராம்சுந்தர்.