Published:Updated:

நெருப்புக் கோழி

ரேஞ்சர் மாமா

 ##~##

உலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச். இதை நெருப்புக் கோழி என்றும் சொல்வார்கள். ஆனால், நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல் எதிரிகள் தாக்க வரும்போது, தலையைத் தாழ்த்திக்கொள்ளுமே தவிர, மணலில் புதைத்துக்கொள்ளும் என்பது தவறான நம்பிக்கை.

இவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. விலங்கியல் பெயர் ஸ்ட்ருதியோ கேமெலஸ் (Struthio camelus). கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுமார் 8 அடி உயரமும் 105 கிலோ எடையும் கொண்டது. இதன் பெருத்த உருவம் பறப்பதற்குத் தடையாக இருந்தாலும், வேகமாக ஓடக்கூடியது. இதன் வேகம், மணிக்கு 64 கி.மீ. பறவைகளில் வேகமாக ஓடக்கூடியதும் இதுதான்.

இதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில், மென்மையான பொதி போல் இருக்கிறது. இதன் இறக்கையில் இன்னொரு வித்தியாசமான அமைப்பும் உண்டு. இறக்கையின் முடிவில் இரண்டு கொக்கிகள் போன்ற நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.

நெருப்புக் கோழி

தாவர உணவுகளையே உண்டாலும், சில சமயங்களில் சிறிய புழு, பூச்சி, ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் சாப்பிடும். நான்கு வயதில் முட்டையிடும் பருவத்தை அடையும். 30 முதல் 70 வருடங்கள் வரை வாழும்.

இதன் முட்டை உலகிலேயே மிகப் பெரியது. ஒரு முட்டை சராசரியாக 1.4 கிலோ எடை இருக்கும். இது, 40 கோழி முட்டைகளின் அளவுக்குச் சமம்.

முட்டைகளை, இரவில் ஆண் பறவையும் பகலில் பெண் பறவையும் அடைகாப்பது இந்த இனத்தின் சிறப்பு. இதற்கும் ஒரு சுவாரசியமான காரணம் இருக்கிறது. ஆண் பறவையின் சிறகுகள், ஏறக்குறைய சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். இரவில் முட்டைகளைத் தின்ன வரும் எதிரிகளுக்கு, எளிதில் அவை தென்படாது. அதேபோல, பெண் பறவையின் இளம் பழுப்பு நிறச் சிறகுகள், சுற்றிலும் இருக்கும் புல்லின் நிறத்தை ஒத்திருப்பதால், பகலிலும் முட்டைகளுக்குப் பாதுகாப்பு. 45 நாட்கள் அடைகாக்கப்பட்ட பிறகு, குஞ்சுகள் பொரிக்கும்.

இவற்றின் சிறகுகள் தொப்பிகள் செய்யவும், தோல் அலங்காரப் பொருட்கள் செய்யவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது.

குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் போன்றவற்றைப் பூட்டி, வண்டிகளை இழுக்கச் செய்வதும் மேலை நாடுகளில் சகஜம். ஆஸ்ட்ரிச்களுக்கான ஓட்டப் பந்தயமும் பிரபலமானது.