Published:Updated:

தானே கண்காட்சியில் சுட்டி ஓவியர்கள் !

கே.யுவராஜன் கே.கார்த்திகேயன்

##~##

தானே துயர் துடைக்கும் திட்டத்தில், விகடன் பல்வேறு வகைகளில் களம் இறங்கி, பணியாற்றி வருவதை சுட்டிகளும் அறிந்து இருப்பீர்கள். அதன் ஒரு கட்டம்தான் மாபெரும் ஓவிய விற்பனைக் கண்காட்சி.

சென்னை, லலித் கலா அகாடமியில் மார்ச் 5 முதல் 10 வரை இந்த ஓவியக் கண்காட்சி நடந்தது. தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 275 ஓவியர்கள், தங்கள் ஓவியங்களை அளித்திருந்தார்கள். மொத்தம் 357 ஓவியங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர், மாண்புமிகு ரோசய்யா அவர்களிடம் கேட்டபோது, மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். கூடவே, ஆளுநரின் தனிச் செயலாளர் சீராளன் அவர்களின் ஓவியத்தையும் கொடுத்து, கண்காட்சிக்கு சிறப்பு சேர்த்தார். லலித் கலா அகாடமியின் மண்டல இயக்குனர் பழனியப்பன் அவர்களும்  இரண்டு ஓவியங்களை அளித்தார்.

தானே கண்காட்சியில் சுட்டி ஓவியர்கள் !

இப்படி அனைவரின் நெகிழ்ச்சியான பங்களிப்புடன் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் ஆளுநர் ரோசய்யா. ''இயற்கைச் சீற்றத்தால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது எல்லாம் விகடன் தனது வாசகர்களுடன் இணைந்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து இருக்கிறது. 2003-ஆம் ஆண்டில், காவிரி டெல்டா விவசாயிகள் தவித்தபோது, தஞ்சைக் கிராமங்களைத் தத்து எடுத்தது, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவியது ஆகியவை சில உதாரணங்கள். அதுபோல், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ வேண்டும் எனக்  களம் இறங்கினோம். பிறகுதான் இதில் நாம் செய்ய வேண்டியதும் செல்ல வேண்டிய தூரமும் அதிகம் என்பது புரிந்தது. இது வரை ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வாசகர்களிடம் இருந்து உதவித் தொகை வந்து இருக்கிறது. இந்த ஓவியக் கண்காட்சியின் மூலம் வருகிற பணமும் தானே துயர் துடைப்பில் பங்குபெறும்'' என்றார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன்.

இந்தக் கண்காட்சிக்கு ஓவியங்களை அளித்த பல்வேறு ஓவியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். பிரபல ஓவியர் பத்மவாசனின் மகன்கள், பிரணவ் மற்றும் லோகப்ரியன். எட்டாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்மவாசன் ஓவியத்தை அளித்தபோது, இந்த சுட்டி ஓவியர்களும் தங்கள் பங்களிப்பாக ஓவியங்களைக் கொடுத்தார்கள்.

தானே கண்காட்சியில் சுட்டி ஓவியர்கள் !

ஆறு நாட்கள் நடந்த கண்காட்சிக்கு, பிரபலங்கள், பெரியவர்கள் மட்டும் அல்லாமல், சுட்டிகளும் ஆவலுடன் வந்து இருந்தார்கள். ஓவியர் வாகை தர்மாவின் ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்தில் பயிலும் சுட்டி ஓவியர்கள் படையுடன் வந்தார்.

''இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது ரொம்ப உற்சாகமாக இருக்கு. பல நாட்கள் வகுப்பில் கற்றுக்கொள்கிற விஷயத்தை இந்த மாதிரி ஒரு கண்காட்சியில் சில நிமிடங்களில் கற்றுக்கொள்ள முடிகிறது.'' என்றான் சேரலாதன் என்ற சுட்டி.

''உண்மைதான். எத்தனை விதங்களில் எவ்வளவு நுணுக்கமாக வரைஞ்சு இருக்காங்க. நாமும் பெரியவங்களாகி இது மாதிரி ஓவியங்களை வரைஞ்சு இது மாதிரி நல்ல விஷயங்களுக்குக் கண்காட்சியாக வைக்கணும்'' என்றாள் தான்யஸ்ரீ.

''அதென்ன பெரியவங்களாகி? திறமையும் உழைப்பும் இருந்தால், இப்பவே வைக்கலாம்'' என்ற கார்த்திகேயன் குரலில் நம்பிக்கை மிளிர்ந்தது.

தானே கண்காட்சியில் சுட்டி ஓவியர்கள் !

''இந்தக் கண்காட்சியை எதுக்காக வெச்சு இருக்காங்க தெரியுமா?'' என்று கேட்டாள் பிரியவதனா.

''தெரியாமல் என்ன? கடலூர், புதுச்சேரியில் தானே புயல் அடித்ததில் முந்திரி மாதிரியான லட்சக்கணக்கான மரங்கள் முறிஞ்சுபோச்சு. வீடுகள், சாலைகள் பாதிச்சு இருக்கு. அவங்களுக்கு உதவி செய்யறதுக்கு கோடிக்கணக்கில் பணம் வேணும்'' என்று சித்தார்த் சொன்னபோது, தானே புயலின் துயரம், சுட்டிகளின் மனசு வரை எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பது புரிந்தது.

''நாங்கள் சும்மா ஓவியக் கண்காட்சியை சுற்றிப் பார்க்க மட்டுமே வரவில்லை. இந்த தானே துயர் துடைப்பில் எங்களால் முடிந்த பங்களிப்பையும் செலுத்த நினைக்கிறோம். அதற்காக, ஒரு தொகையை கொண்டு வந்து இருக்கிறோம். இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி கண்காட்சியிலேயே நிதியை அளித்தார்கள்.

சுட்டிகளின் அன்பு உள்ளத்தைப் பார்த்து, அங்கே இருந்த அத்தனை ஓவியங்களும் சில நிமிடங்களுக்கு உயிர் பெற்றன!