Published:Updated:

அவதார்

கப்பல் ஓட்டிய சுட்டிகள் !பி.ஆண்டனிராஜ், கே.ஆர்.ராஜமாணிக்கம், இ.கார்த்திகேயன் எல்.ராஜேந்திரன்

##~##

அவதார் நிகழ்ச்சிக்காக பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள மேக்தலின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியைகளும்  உற்சாகத்தில் உச்சத்தில் இருந்தனர்.

வ.உ.சி.யாக வேடம் அணிந்த சுட்டிகள், பெற்றோருடன் பைக்கிலும், சைக்கிள்களிலும் வந்து இறங்கினர். சில வ.உ.சி.க்கள் வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்டோ பிடித்து வந்தனர். ''காலையில சீக்கிரமா ஸ்கூலுக்குப் போகணும்னான். சரின்னேன், ராத்திரி அஞ்சு தடவை முழிச்சு, மணி என்னன்னு கேக்கான், விடிஞ்சிருச்சான்னு. கண்ணுல பொட்டுத் தூக்கம் இல்லே. இப்பக் கொண்டாந்து விட்டுட்டேன்... இனி போய்தான் நான் தூங்கணும்'' என்றார் ஒரு சுட்டியின் அப்பா, சலிப்பும் சந்தோஷமுமாக. பள்ளியின் தலைமை ஆசிரியை மார்கரெட் செல்வராஜும், தாளாளர் செல்வராஜும் பள்ளி வளாகத்தின் முகப்பில் நின்று, வ.உ.சி.க்களை வரவேற்றனர்.

பள்ளியில் வேடம் அணிந்துகொள்ளலாம் என்று வந்த சுட்டிகளுக்கு, அவர்களின் அம்மாக்களும், ஆசிரியைகளும் வேட்டி, கோட், தலைப்பாகை கொண்டு, வ.உ.சியாக மாற்றும் முயற்சியில் தீவிரமானார்கள்.

அவதார்

முதலில், அனைத்துச் சுட்டிகளுக்கும் வேட்டி கட்டப்பட்டது. பின்னர், கோட் அணிவித்து, அதனைத் தொடர்ந்து தலைப்பாகை. தலைப்பாகை கட்டுவது மிஸ்களுக்கு புதுசு என்பதால், வ.உ.சி தலைப்பாகை ரொம்பவே முரண்டு பிடித்தன. அப்போது ஒரு பெரியவர், ''தலையில எல்லாருக்கும் பனை ஓலைப் பொட்டியை வச்சிக் கட்டினா, அப்புடியே நிக்கும்'' என்று சொல்ல, ''ஆமா... அப்புடியே கொஞ்சம் கொழுக்கட்டை மாவையும் புடிச்சு வெச்சா, வெந்துரும்'' என்று ஒரு பாட்டியம்மா கிண்டல் அடிக்க, அங்கே வெடிச் சிரிப்பு பெரிதாய் எழுந்து சிதறியது. தலை ஆட்டி, கால் ஆட்டி குறும்பு செய்யும் சுட்டிகளுக்கு ஒரு வழியாய் தலைப்பாகை கட்டி முடித்தனர்.

உடை தயாரான பிறகு, வ.உ.சி போல மீசை வரையும் பணி நடந்தது. அதில் பெற்றோரும் ஆர்வத்துடன் இறங்கினர். வ.உ.சி படத்தைக் காட்டி, அதேபோல மீசை இருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியை சொல்ல, சிலர் பென்சில்களாலும், சிலர் கண் மையைக் கொண்டும் வரைந்தனர்.

அவதார்

ஒரு சுட்டி, அருகில் இருந்த தனது நண்பனிடம், ''எனக்கு வ.உ.சி மீசை சரியா வரலைடா. நீ கொஞ்சம் வரைஞ்சு குடுடா' எனக் கேட்டான்.

அப்போது, அருகில் இருந்த இன்னொரு சுட்டி, ''என்னடா வ.உ.சி மீசை வரையச் சொன்னா... பாரதி மீசை வரைஞ்சிருக்கே' என்று வெறுப் பேற்றினான். இன்னொரு சுட்டி அதையே, ''ஏ... மக்கா இது மதுரை வீரன் மீசை மாதிரி இருக்குடா' என சீண்டவும், இரண்டு கைகளாலும் முகத்தை மறைத்துக்கொண்டான், அந்தச் சுட்டி. இதை தூரத்தில் இருந்து கவனித்த தாளாளர், அவன் அருகில் சென்று, ''உனக்கு நான் வ.உ.சி. மீசை அழகா வரைஞ்சு தர்றேன், என்று சொல்லி, வரைந்து கொடுக்க, சந்தோஷத்தில் குதித்தான். சற்று நேரத்தில் பள்ளி வளாகத்தில் எங்கு திரும்பினாலும் கப்பலோட்டிய தமிழன்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும் ராம்பிரசாத், வெயிட் லிஃப்டிங் அறைக்குள் சென்று பளுவைத் தூக்கி விளையாட, உடன் இருந்த சுட்டி அவனிடம், ''வ.உ.சி வெயிட் லிஃப்டரா என்ன? கீழே போடுடா' என்று அதட்டினான். அதற்கு, அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, ''கத்தாதேடா! ஏதோ, இன்னைக்குதான் இதை எல்லாம் கையால தொட முடிஞ்சது... கெடுத்துடாதே'' என்றான். அதற்குள் மிஸ் வரும் சத்தம் கேட்கவே, அந்த இடத்தைவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.

அவதார்

சில வ.உ.சி.-க்கள், பேப்பரில் கப்பல் செய்து, அருகில் இருந்த தொட்டியில் மிதக்கவிட்டனர். ''அன்று அந்த வ.உ.சி சிரமப்பட்டு கப்பல் ஓட்டினார். ஏதோ எங்களால் முடிந்தது, பேப்பர் கப்பலைச் செஞ்சோம்' என்றார்கள்.

பிறகு, மதிய உணவு நேரம் வந்தது. சாப்பிடும் போது, ஒரு சுட்டிக்கு அவரது தாய் உணவு ஊட்டிவிட்டார். அப்போது அந்த வ.உ.சி., தனது தாய்க்கு உணவு எடுத்து ஊட்டியது நெகிழ்வாக இருந்தது. நாம் போட்டோ எடுப்பதைப் பார்த்த இன்னொரு தாய், ''இன்னிக்குனு பார்த்து நான் சுடிதார் போட்டுட்டு வந்துட்டேன் சார்... இவனைப் பாருங்க, 'வ.உ.சியோட அம்மா  சேலைதானே கட்டி இருப்பாங்க?’ங்கறான்'' என நெளிந்தார்.

அவதார்

''நாம் எல்லோரும் இப்போ வ.உ.சி மணிமண்ட பத்துக்குப் போகப்போறோம்' என்று தாளாளர் சொன்னதும், சுட்டிகளிடம் டூர் மூடு வந்து சேர்ந்தது. ஆளாளுக்கு அடித்துப் பிடித்து வேனில் ஏறினார்கள். ''ஏலே தாரிக் எனக்கு ஜன்னல் சீட்டை விட்டுக் குடுறா...' என ஒரு சுட்டி கெஞ்சினான்.  

மணிமண்டபத்தில் இருந்த, வ.உ.சி வரலாறு கூறும் படங்களை ஆர்வமுடன் பார்த்த சுட்டிகள், அங்கு இருந்த செக்கைப் பற்றிக் கேட்க, பள்ளி முதல்வர் விளக்கினார். உடனே சில சுட்டிகள், செக்கை இழுக்க முயற்சி செய்தும் அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

அவதார்

''அடேங்கப்பா.... வ.உ.சி. எப்படித்தான் செக்கை இழுத்தாரோ? நம் சுதந்திரத்துக்காக அவர் பட்ட கஷ்டங்களை நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவருக்கு நன்றி செலுத்த, இப்போ போட்டுகிட்டு இருக்கிற இந்த டிரெஸ்ஸையே எப்பவும் யூனிஃபார்ம்மா போட்டுக்கிடலாம்னு தோணுது'' என்று ஒரு சுட்டி சொல்ல, அத்தனை பேர் முகங்களிலும் நெகிழ்ச்சி.