Published:Updated:

சிங்கம், புலி, யானை

எங்கள் செல்லப் பிராணிகள் !தத்தெடுக்கிறார்கள் சுட்டிகள் !கே.யுவராஜன் வி.செந்தில்குமார்

##~##

சுட்டிகளுக்கும் விலங்குகளுக்குமான நெருக்கம், எப்பவுமே ஸ்பெஷல்தான். மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி, பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிற நரி, சிங்கம், முயல் என அனைத்துமே... சுட்டிகளின் கதை உலகில், சூப்பர் ஸ்டார்கள்.

''உங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போலவே, காடுகளில் இருக்கும் விலங்குகளையும் நேசிக்கணும். அதுக்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த விலங்குகள் தத்தெடுப்புத் திட்டம்'' என்கிறார் உயிரியலாளர், டாக்டர் ஏ. மணிமொழி.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வண்டலூரில் இருக்கும் விலங்குகள், பறவைகளின் ஒரு நாளுக்கான உணவுத் தொகையைக் கொடுத்து, தத்து எடுக்கலாம் என்ற செய்தியை அறிந்து, சுட்டிகளுடன் ஆஜரானோம். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்ற மணிமொழி, ''வாங்க, பூங்காவை வலம் வந்துகொண்டே இதைப் பற்றி பேசலாம்'' என்றார்.

பேட்டரி காரில் பயணம் தொடங்கியது. ''இங்கே, மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கு அங்கிள்?'' என்று கேட்டாள் தான்யஸ்ரீ.

சிங்கம், புலி, யானை

''விலங்குகள், பறவைகள், ஊர்வன என 1,400 இருக்கின்றன. இது, இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா.'' என்றார்.

முதலில், காட்டு எருமைகள் இருந்த பகுதிக்குச் சென்று நின்றது பேட்டரி கார். ''இங்கே, மொத்தம் 9 காட்டு எருமைகள் இருக்கு. இயற்கையான சூழலில் இங்கே இருக்கும் புல், இலை, தழைகளை மேயும். இது தவிர, ஊறவைத்த கொண்டைக் கடலை, அவித்த கொள்ளு போன்றவற்றையும் கொடுப்போம்'' என்றார் மணிமொழி.

''இவ்வளவு சுதந்திரமாக உலவும் சிங்கம், புலிகள் இங்கே இருக்கும் மான்களைக் கொன்று சாப்பிடுறாதா?'' என்று கேட்டான் விஜயராஜ்.

''இல்லை. அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையைச் சுற்றி இருக்கும் தடுப்புகள், கால்வாய்கள் போன்ற  பாதுகாப்பு அரணைத் தாண்டி வர முடியாது.  ஊன் உண்ணிகளுக்குத் தேவையான உணவை, முழுக்க முழுக்க நாங்களே ஏற்பாடு செய்கிறோம். ஒரு புலிக்கு, ஒரு நாளைக்கு ஏழு கிலோ மாட்டு இறைச்சியை அளிப்போம். தவிர, கோழிகளையும் கொடுப்பது உண்டு.'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பேட்டரி கார் வெள்ளைப் புலிகள் இருந்த இடத்தை அடைந்தது.

சிங்கம், புலி, யானை

அங்கே இரண்டு புலிக் குட்டிகள், ஒன்றை ஒன்று சீற்றத்துடன் பார்த்து, 'கிர்...கிர்’ என சத்தம் போட்டவாறு மோதிக்கொண்டன. ''ஏன் அங்கிள் இப்படி சண்டை போட்டுக்குது?'' என்று கேட்டாள் ராஜலஷ்மி.

''இது சண்டை இல்லை, சும்மா விளையாடுதுங்க. இவற்றைப் பராமரிக்கும் கீப்பர்கள் ஒரு குரல் கொடுத்தால் அமைதியாகிடும்'' என்றார்.

அங்கே வந்த கீப்பர், ''ராமா, சந்திரா அமைதியா இருங்க!'' என்றதும் பிரிந்து சென்றன.

''இந்த விலங்குகளுக்குப் பேரும் உண்டா அங்கிள்?'' என ஆச்சர்யப்பட்டான் பாலாஜி.

''சிங்கம் முதல் சிட்டுக் குருவி வரை எல்லாவற்றுக்கும் பெயர் இருக்கு. அவை, கீப்பர்களின் குரல்களை அடையாளம் கண்டுகொள்ளும்.'' என்றார்.

சிங்கம், புலி, யானை

''இப்படி, நகத்தால் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு விளையாடுதே... இதனால் காயம் ஏற்படாதா?'' -குட்டிப் புலிகளின் சண்டையை இன்னும் மறக்காத கோகுல் கேட்டான்.

''சில சமயம் காயம் ஏற்படும்தான். கால்நடை மருத்துவர்கள் எப்பவும் தயாராக இருப்பார்கள். அடிபட்ட விலங்கை பாதுகாப்பாகப் பிரித்து, மருந்து கொடுப்பார்கள். காயத்தின் தன்மைக்கு ஏற்ப ஊசியோ, மருந்தோ தடவுவோம். அறுவை சிகிச்சை செய்யும் ஆபரேஷன் தியேட்டர் வசதியும் இங்கே இருக்கு. வாங்க, அவற்றுக்கு உணவை எப்படிக் கொடுக்கிறோம் என்பதைப் பார்க்கலாம்'' என்றார்.

மற்ற பார்வையாளர்கள் எல்லாம் இந்தப் பக்கம் இருக்க, சுட்டிகளை மட்டும் ஸ்பெஷலாக, புலிகள் இருக்கும் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, பலமான இரும்புக் கதவுக்குப் பின்னால், வரிசையாக ஆறு கூண்டுகள் இருந்தன. ''மொத்தம் ஐந்து புலிகள் இருக்கு. ஒவ்வொரு புலியையும் ஒவ்வொரு கூண்டில் அடைத்த பிறகு, காலியாக இருக்கும் கூண்டில் உணவை வைப்போம். பிறகு, ஒவ்வொரு கூண்டையும் திறந்துவிடுவோம். ஒரு புலி வந்து சென்றதும் அடுத்த புலிக்கு உணவை வைப்போம்'' என்றார் மணிமொழி.

பிறகு, விலங்குகள் தத்தெடுப்பு பற்றி பேச்சு தொடங்கியது. ''இந்தத் திட்டம் எந்த வருஷம் ஆரம்பிச்சது?'' என்று கேட்டாள் தான்யஸ்ரீ.

சிங்கம், புலி, யானை

''2008-ல் ஆரம்பிச்சோம். ஆனாலும், 2010-ல் இருந்துதான், முழு மூச்சோடு செயல்படுத்திட்டு இருக்கோம். வெளிநாடுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக இருக்கு. இந்த விலங்குகள் தத்தெடுப்புத் திட்டத்தின் நோக்கம், பணம் வசூலிப்பது கிடையாது. ஏன்னா, அரசு ஒதுக்கி இருக்கும் பணமே தாராளமாக இருக்கு. மக்களுக்கு, விலங்குகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படணும். மனிதனின் சுயநலத்தால், எத்தனையோ விலங்குகள் முற்றிலும் அழிஞ்சுபோச்சு. பல விலங்குகள், பறவைகள் அழிவின் விளிம்பில் இருக்கு. அதை உணரவே இந்தத் திட்டம்.'' என்றார்.

''இதை மக்களுக்கு எப்படித் தெரியப்படுத் துறீங்க?'' என்று கேட்டாள் ராஜலட்சுமி.

''நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறோம். அதைப் பார்த்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து எங்களைத் தொடர்புகொள்வார்கள். தனிப்பட்ட முறையிலும் வசதிபடைத்தவர்கள், பிரபலங்கள் தத்து எடுப்பார்கள். இப்படித்  தத்து எடுப்பதன் மூலம், அந்த விலங்கைப் பற்றிய விஷயங்களை ஆர்வத்துடன்              தெரிஞ்சுப்பாங்க. அதன் மீது நேசம் உண்டாகும். பொதுவாகவே, உயிரியல் பூங்காக்களின் நோக்கம் இதுதான். ஆனால், நிறையப் பேர் தீம் பார்க், சினிமா மாதிரி இதையும் ஜாலியான பொழுதுபோக்கா நினைச்சு வர்றாங்க. கூண்டுகளில் இருக்கும் விலங்குகளை போட்டோ எடுத்துக்கிட்டுப் போயிடுறாங்க. சிலர், சேட்டைத்தனமான விஷயங்களால் அவற்றுக்குத் தொல்லையும் கொடுத்துட்டுப் போறாங்க. அது எல்லாம் தப்பு'' என்றார் மணிமொழி.

சிங்கம், புலி, யானை

''புரியுது அங்கிள். நாங்ககூட முன்னாடி எல்லாம், ஜூவுக்கு வர்றதைப் பொழுதுபோக்காத்தான் நினைச்சுட்டு இருந்தோம்'' என்றாள் வினிதா.

''நாங்களும் இந்த தத்தெடுப்புத் திட்டத்தில் பங்குபெற என்ன செய்யணும்?'' என்று கேட்டான் விஜயராஜ்.

''ரொம்ப சிம்பிள், இங்கே இருக்கிற எல்லா விலங்குகள், பறவைகள் பற்றிய லிஸ்ட் இருக்கு. அதில் ஒரு நாள் உணவுக்கான செலவு, ஒரு மாதத்துக்கான செலவு என இருக்கு. உதாரணமாக, யானைக்கான ஒரு நாள் உணவுச் செலவு 520 ரூபாய். புலி அல்லது சிங்கத்துக்கு 525 ரூபாய். உங்களுக்கு விருப்பப்பட்ட விலங்கு அல்லது பறவைக்கான தொகையைக் கொடுக்கலாம். அது 10 ரூபாயாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்'' என்றார் மணிமொழி.

சுட்டிகள் உற்சாகத்துடன் அந்த லிஸ்ட்டைப் பார்த்து, ''எனக்கு சிங்கம், எனக்கு யானை, எனக்கு புலி, எனக்கு மயில்'' என பட்டியல் போட்டார்கள்.

''ரொம்ப சந்தோஷம். ஒவ்வொரு மனிதனுக்கும் இப்படி மற்ற உயிரினங்கள் மீது அன்பு ஏற்பட்டுவிட்டால், உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். நீங்க மற்ற இடங்களையும் பார்த்துட்டு, ஆபீஸ் ரூமுக்கு வாங்க. பணத்தை எப்படி செலுத்துவது எனத் தெரிஞ்சுக்கலாம்'' என்றார் மணிமொழி.

பேட்டரி கார், பயணத்தைத் தொடர்ந்தது. இப்போது, சுட்டிகள் விலங்குகளைப் பார்த்த பார்வையில் உற்சாகத்துடன், அன்பும் கருணையும் மிளிர்ந்தது!