Published:Updated:

அவதார்

ஆளை அசத்திய சுட்டி கலாம்கள் !ந.வினோத்குமார், கே.ஆர்.ராஜமாணிக்கம் வி.செந்தில்குமார்

##~##

நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். 'நான் பெரிய ஆளா ஆனா அவரை மாதிரி வருவேன்... இவரை மாதிரி வருவேன்’னு உங்களுக்கு ஏகப்பட்ட ரோல்மாடல்கள் இருப்பாங்க இல்லையா..? அப்படி ஒரு ரோல்மாடல் உங்களை மாதிரி சுட்டிகளின் ரூபத்தில் அந்த ஸ்கூலுக்கு வந்திருந்தார்.

'ஹாய்... இன்னைக்கு ஸ்கூல்ல என்ன விசேஷம்?’னு ஒரு சுட்டிக்கிட்ட கேட்டோம். அந்தச் சுட்டி படுகம்பீரமா சொன்னான்...''நான் இன்னிக்கு அப்துல் கலாமா மாறப்போறேன்!''

'எப்படி... இன்னிக்கேவா?’ன்னு கேட்டதுக்கு, ''ம்... ம்...''னு சொல்லிட்டு, தன்னோட பாட்டிகிட்ட இருந்த கலாம் 'விக்’கைத் தூக்கிக்கொண்டு ஓடினான்.

சென்னை, வில்லிவாக்கத்தில் இருக்கிற பத்மா சாரங்கபாணி ஸ்கூல் சுட்டிகள் அன்று அப்துல் கலாமாக மாறி இருந்தார்கள்.

ஒரு சுட்டி ''பாட்டி இதை மாட்டிவிடு...'' என்றதும் பக்கத்தில் நின்ற அவன் பாட்டி பாசத்தோடு அந்த விக்கை அவன் தலையில மாட்டிவிட்டாங்க. அவன் போட்டிருந்த வெள்ளைக் கலர் பைஜாமாவுக்கும், குர்தாவுக்கும், தலையில மாட்டி இருந்த 'விக்’குக்கும் அப்படியே அவன் பார்க்குறதுக்குக் குட்டி அப்துல் கலாமேதான்!

அவதார்

இன்னொரு சுட்டி அவனை மாதிரியே ட்ரெஸ், விக் போட்டுக்கிட்டு பிஸ்கட் சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். நாம அவன்கிட்ட போய்... 'உங்க பேர் என்ன?’னு கேட்டோம். அதுக்கு அந்தச் சுட்டி ''ஐ ஆம் அப்துல் கலாம், ஐ ஆம் ஏ சயின்டிஸ்ட்!''னு உதட்டைச் சுழிச்சு, கண்ணை உருட்டி, உருட்டிச் சொன்னான்.

இதைக் கேட்டதும் பக்கத்தில் இருந்த அவனோட அம்மா பெருமையோடு அவனை வாரி அணைச்சு ஒரு கிஸ் கொடுத்தாங்க. 'ஸ்வீட் பாய்’னு சொல்லிட்டுத் திரும்புறோம்... எங்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

'என்ன?’ன்னு கேட்கறீங்களா... அடேங்கப்பா... ஒரு 40, 50 சுட்டிங்க... ஸாரி... அப்துல் கலாம்கள்... ஐயையோ... ஸாரி... குட்டி அப்துல் கலாம்கள் அந்த இடத்தில கூட்டமா நின்னு, ''அங்கிள் எங்களை போட்டோ எடுங்க...''ன்னு சொல்லி ரெடியா போஸ் கொடுத்து நிக்கிறாங்க.

அவதார்

அவங்க எல்லாம் போஸ் கொடுத்து நிக்கிற அழகைப் பார்த்து அவங்க அப்பா, அம்மா எல்லாம் 'என் ராசா!’ன்னு நெட்டி முறிக்கிறது, முத்தம் கொடுக்கிறது, இடுப்பில் தூக்கிவெச்சுக் கொஞ்சுறது, செல்போன்ல போட்டோ எடுக்கிறதுன்னு... ஒரே ஜாலிதான்.

எல்லோரும் மேக்கப் போட்டுக்கிட்டு இருக்கிற சமயத்துல ஒரு சுட்டியை, ஒன்பதாவது படிக்கிற அண்ணன் ஒருத்தர் சைக்கிள்ல கூட்டிட்டு வந்தாரு. தோள்ல ஸ்கூல் பேக் மாட்டிட்டு எல்லோரையும் பார்த்துக் கை அசைச்சுக்கிட்டே வந்தான்.

அவதார்

அவன் இறங்கினதும், அவனோட மிஸ் ''இன்னிக்குத்தான் ஸ்கூல் இல்லையே... அப்புறம் ஏன் ஸ்கூல் பேக்கைத் தூக்கிக்கிட்டு வந்தே?''னு கேட்டதுக்கு, ''அப்துல் கலாம் அங்கிள் சின்ன வயசுல ஒரு பக்கம் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கிட்டு, இன்னொரு பக்கம் கையில நியூஸ்பேப்பர் வெச்சுக்கிட்டு, தன்னோட ஊரில் இருக்கிற வீடுகளுக்கு எல்லாம் பேப்பர் போடுவாராம். அதான் நானும் ஸ்கூல் பேக் கொண்டு வந்தேன். நியூஸ்பேப்பர் எல்லாம் தீர்ந்துபோச்சு''னு சொன்னதும், அவனோட மிஸ் ''வெரிகுட்''னு சொல்லி அவனுடன் கைகுலுக்கினாங்க.

இன்னொரு சுட்டிக்கு ட்ரெஸ்ஸும், விக்கும் சரியாவே மேட்ச் ஆகவில்லை. உடனே அந்தச் சுட்டி 'எனக்கு இது வேணாம் போ..’என அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த ஒரு சுட்டி, 'இந்தா இதை நீ போட்டுக்கோ’ எனத் தன் குர்தாவையும் விக்கையும் கொடுத்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு முகமெல்லாம் சிரிப்போடு அதை வாங்கி அணிந்தாள். அந்தச் சுட்டியின் அப்பா, ''குட் கேர்ள்... சமர்த்து... இப்படித்தான் மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்'' எனத் தன் சுட்டிப் பெண்ணிடம் சொன்னார்.

அவதார்

ஸ்நாக்ஸ் டைம். சில சுட்டிகள் 'அம்மா... பிஸ்கட்ம்மா’ என சைகை காட்ட, அதைப் பார்த்த ஸ்கூல் பிரின்ஸிபால் மேடம், பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். பிஸ்கட் பாக்கெட் வாங்கிய ஒவ்வொரு குட்டிக் கலாமுக்கும் அவ்ளோ சந்தோஷம்.

ஸ்கூல் யூனிஃபார்மில் வந்திருந்த ஒரு சுட்டிக்கு, குட்டி அப்துல் கலாம் பிஸ்கெட் கொடுத்து ''நல்லாப் படிக்கணும்!'' எனச் சொல்லி, அப்துல் கலாம் மாதிரியே நடந்து காட்டினான்.

அப்புறம் எல்லா அப்துல் கலாம்களும் கிளாஸுக்குள் போனார்கள். அப்துல் கலாம் எப்படிப் படித்து முன்னுக்கு வந்தார் என்பதை விளக்கமாகச் சொன்னோம். ''உங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸை பார்க்கிறப்போ அப்துல் கலாம் அங்கிள் ஒரு விஷயம் சொல்வாரு... அது என்ன தெரியுமா?'' எனக் கேட்டதற்கு, ஒரு சுட்டி 'டக்’கென எழுந்து, ''எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்..'' என்றான்.

''என்னன்னு சொல்லு பார்ப்போம்..?'' எனக் கேட்டோம். அவன் சொன்னது... ''கனவு காணுங்கள்!''

''வெரிகுட்... சரி உனக்கு என்ன கனவு இருக்கு..?''

''அப்துல் கலாம் மாதிரி வரணும்!''

அப்துல் கலாம்

 அவுல் பக்கிர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்கிற முழுப் பெயர் கொண்ட கலாம், சுட்டிகள், இளைஞர்களின் கனவு நாயகர். ராமேஸ்வரத்தில் ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் படித்தவர். விமானி ஆக ஆசைகொண்டு அது நிறைவேறாமல், டி.ஆர்.டி.ஒ.வில்  மற்றும் இஸ்ரோவில் பணிபுரிந்தார். அப்போது, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆகாஷ், ப்ரித்வி, திரிசூல், அக்னி முதலிய ஏவுகணைகளை உருவாக்கி, இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை எனப் பெயர் பெற்றார். பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது. அதற்குப் பின், தனக்குக் கற்பிப்பதில் ஆர்வம் அதிகம் என அண்ணா பல்கலைக் கழக கௌரவப் பேராசிரியாகப் பணியாற்றினார். 2002-ல், நாட்டின் முதல் குடிமகன் ஆனார். ஜனாதிபதியாக சிறப்பாகப் பணியாற்றினார். கலாம் நன்றாக வீணை வாசிப்பார். கவிதையும் எழுதுவார். இவரது சுயசரிதையான 'அக்னி சிறகுகள்’ இன்னமும் விற்பனை யில் சாதனை படைத்துகொண்டு இருக்கிறது.

     -பூ.கொ.சரவணன்  

 சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளி, 1970-ஆம் ஆண்டு 30 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் வரதன். இப்போது, 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு சிறந்த கல்வி நிறுவனமாய்த் திகழ்கிறது. 10-ஆம் வகுப்பில் முழுத் தேர்ச்சி, விளையாட்டு மற்றும் சாரணர் சாரணியர் இயக்கத்தில் முதல் இடம்.  10-ஆம் வகுப்பில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வியும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தில், சென்னைப் புறநகர் பகுதி பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த முதல்வர்களுக்கு, 'பத்ம வித்யா சாகர்’ நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். பள்ளி முதல்வர், அனுராதா மற்றும் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ ஆகியோர், மாணவர்களின் திறன் அறிந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அவதார் நிகழ்ச்சியை ஆசிரியை கஜலட்சுமி சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.