ஸ்பெஷல்
Published:Updated:

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

எஸ்.ராஜாசெல்லம் க.தனசேகரன் ஒருங்கிணைப்பு: கே.ஆர்.ராஜமாணிக்கம்

 

##~##

தன் அறிவில் உதித்த அபார ஞானங்களை எழுத்தாணி வழியே ஓலைச்சுவடியில் இறக்கிய மகாஞானி, திருவள்ளுவர். ஒரு திருவள்ளுவரே நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் உலக இலக்கியம் படைத்து இருக்கையில், பல திருவள்ளுவர்கள் வந்தால்...

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப் பட்டியில் இயங்கும் 'பரம்வீர் மெட்ரிக்’ பள்ளி சுட்டிகள், அய்யன் வள்ளுவர் வேடத்தில் கதராடையில் தாடியைத் தடவியபடி கண்கொள்ளாக் காட்சியோடு நின்றனர். ஆசிரியரான முத்துக்கிருஷ்ணன் ஓர் ஒப்பனைக் கலைஞர். அவர்தான் இந்தச் சுட்டிகளைத் திருவள்ளுவராக்கி இருந்தார்.

வள்ளுவர் அவதாரத்தில் இருந்த சுட்டிகள் செய்த சேட்டைகள் குபீர் சிரிப்பு ரகம். ஓலைச்சுவடிக்காகக் கொடுத்த பனை ஓலையில், காற்றாடி செய்து சுழற்றிக்கொண்டு இருந்தாள் நான்காம் வகுப்பு ஸ்ரீமதி. வியர்வை அரிப்பில் இருந்து தப்ப, ஆறாம் வகுப்பு ஹரீஷ் தலைப்பாகையையும், மீசையையும் கழற்றி ஓரம் வைத்துவிட்டு தாடியுடன் நின்றவனை நண்பர்கள் வம்புக்கு இழுத்தனர்.  

காலையில் அம்மா வைத்த ரோஜாவை எறிய மனம் இல்லாமல் தலைப்பாகையில் சொருக முயன்றுகொண்டு இருந்தாள் ஐந்தாம் வகுப்பு பிருந்தா. நான்காம் வகுப்பு அரவிந்திடம் ஆசிரியர்,  ''உனக்குக் கொடுத்த எழுத்தாணி எங்கேப்பா?'' என்று கேட்க, தாடிக்குள் இருந்து  'அருவா’ ஸ்டைலில் சரக்கென்று உருவி மிரட்டினான். தனக்குக் கொடுத்த ஓலைச்சுவடிக்கு ஒரு கண்டு நூலைச் சுற்றி, சுவடிகளே தெரியாதபடி மறைத்துவிட்டான் ஏழாம் வகுப்பு விஸ்வநாத்.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

எல்லா வள்ளுவர்களும் தயாரானதும் பள்ளி வளாகத்துக்குள் அணிவகுப்பு நடத்தி, மற்ற சுட்டிகள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பினர். அணிவகுப்பு எல்.கே.ஜி வகுப்பறையைக் கடந்தபோது ஒரு குட்டி சிறுவன், ''இவங்க பாரதியார்தானே மிஸ்'' என்று கேட்டதும் எல்லோருக்கும் சிரிப்பு. அந்த ஆசிரியை, வகுப்பு முழுமைக்கும் திருவள்ளுவர் பற்றிப் பாடம் நடத்தினார்.

குரூப் போட்டோவுக்கு மொத்த வள்ளுவர்களையும் ஓர் இடத்தில் நிறுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு நவீனின் ஒட்டு மீசை முடிகள் கிச்சுக்கிச்சு மூட்டி தும்மலை வரவழைத்தது. அதனால், மீசையை அடிக்கடி முறுக்கிக் கொண்டே இருந்தான்.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

குரூப் போட்டோ முடித்து, ஒவ்வொரு வகுப்புக்கும் வள்ளுவர்கள் செல்ல, அங்கே இருந்த சுட்டிகள் இருகரம் கூப்பி மரியாதை செய்தனர். பதிலுக்கு வள்ளுவர்களும் ஆசி வழங்கினர். நண்பர்கள் சிலர், ''உங்களுக்கு இன்னைக்கு நேரம்தான். ஆசிர்வாதமா பண்றீங்க. இதுக்கு எல்லாம் நாளைக்கு இருக்கு...'' என்று முணுமுணுத்தனர்.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

அப்போது, ஏழாம் வகுப்பு 'வள்ளுவர்’ ஜெயசூர்யாவைக் காணவில்லை. அனைவரும் பதறிப்போய் தேட, தனியாகப் போய் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து ஓலைச்சுவடியில் ஆணியால் எழுதிக்கொண்டு இருந்தான். ஆசிரியர்கள், ''ஆளைக் காணோமேனு நாங்க தேடுறோம். இங்கே என்னடா பண்றே?'' என்று அதட்டினார்கள். அப்போதும் அசராமல், ''இந்த வேஷம் கலைக்கிற வரை, நான் உலகத்து நீதி சொன்ன அய்யன் திருவள்ளுவர். என்னை மிரட்டுறது தப்பு'' என்று டபாய்த்தான்.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

''வள்ளுவர் வேடத்தில் நீங்கள் விரும்புற காரியங்களைச் செய்யலாம். ஃபுல் பெர்மிஷன்''  என்று பள்ளி முதல்வர் சித்ரா சொன்னதுதான் தாமதம், ஒரு வள்ளுவர் வகுப்பறை ஒன்றில் நுழைந்து பாடம் எடுக்கத் துவங்கிவிட்டார். இன்னும் சில வள்ளுவர்கள் கம்ப்யூட்டரில் அனிமேஷன் படம் பார்த்தனர். இன்னொரு டீமோ, ஃபுட்பால் விளையாட்டில் கலக்கத் தொடங்கினர். மற்ற சில வள்ளுவர்களிடம் ''நீங்க கிளாஸ் ரூமில் உட்கார்ந்து ஆளுக்கு ஐந்து திருக்குறள்களை வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுங்க பார்க்கலாம்'' என்றதும், அந்த வள்ளுவர்கள் எழுத்தாணிகளை ஓரமாக வைத்துவிட்டு எடுத்தனர் பேனாவை.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

இறுதியாக வள்ளுவர்களை பஸ்ஸில் ஏற்றி, வளாகத்துக்குள் ஒரு மினி ட்ரிப் ஏற்பாடு செய்தனர். அனைவரும் இருக்கையில் உட்கார்ந்துகொள்ள, நான்காம் வகுப்பு நந்தவர்மன், பஸ்ஸின் உள் கூரையில் இருக்கும் கம்பிகளில் வெளவால் போல் தொங்க ஆரம்பித்தான். ரவுண்டு முடித்து ஒவ்வொரு வள்ளுவராக இறங்கியபோது சசிகா என்ற சுட்டியின் காலில் கொலுசு இருப்பதைப் பார்த்த தோழிகள், ''உலகத்திலேயே கொலுசு போட்ட வள்ளுவர் நீ ஒருத்திதான்'' என்று கலாய்த்தனர்.

அவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் !

வள்ளுவர் அவதாரம் கலைந்தபின் சுட்டிகளிடம் பேசியபோது, ''வள்ளுவர் வேஷம் போடச் சொன்னதால் நிறையக் கேள்வி கேட்பாங்கனு நினைச்சு திருக்குறள் மனப்பாடம் பண்ணிட்டு வந்தோம். ஆனா, கேள்வி எதுவும் கேட்கலை. இருந்தாலும் திருக்குறள் எங்க மனதில் ஆழமாப் பதிஞ்சிருச்சு'' என்றனர்.

சுட்டிகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.