Published:Updated:

ஸ்கூல் ஸ்டார்

சா.வடிவரசுக.கோ.ஆனந்த்

ஸ்கூல் ஸ்டார்

சா.வடிவரசுக.கோ.ஆனந்த்

Published:Updated:

பெயர்: எஸ்.விக்னேஷ்.
வகுப்பு: 11-ம் வகுப்பு
பள்ளி: வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, பல்லாவரம், சென்னை.
சாதனை: 16-வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவில்
சி.பி.எஸ் தடகளப் போட்டியில்
(லாங் ஜம்ப், டிரிபிள் ஜம்ப்)
தங்கப் பதக்கம்.

##~##

''கடினப் பயிற்சி, உழைப்பு, பெற்றோரின் ஊக்கம் இருந்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்'' என்கிறார் சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் விக்னேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டு தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே 16-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லி மீரட்டில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். தடகளப் பிரிவில் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தேசிய அளவில் தங்கம் பெற்றார் விக்னேஷ்.

''சின்ன வயசுல இருந்து நான் நீச்சல் போட்டி, கிரிக்கெட், கோகோ, கால் பந்து, வாலிபால், 100 மீட்டர் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் என எல்லாவற்றையும் விளையாடி வந்தேன். என் அப்பா, அம்மாவும் விளையாட்டு வீரர்கள்தான்'' என்கிறார்.

விக்னேஷின் அப்பா சுப்பிரமணியன், சென்னை விமான நிலைய ஆணையர். பொதுத் துறை நிறுவனம் சார்பில் பல்வேறு வாலிபால் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தென்மண்டல அணிக்காக  ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்றவர். தாய் சிவசாந்தி மாநில அளவிலான தடகள வீராங்கனை.

ஸ்கூல் ஸ்டார்

அதனால், இயல்பாகவே எல்லா விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தார் விக்னேஷ். அப்பா சொல்படி, நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதலில் முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். ''மும்முறைத் தாண்டுதலில் உலக சாதனையாளரான அமெரிக்காவின் ஜோனாதன் எட்வர்ட்ஸ், உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட், இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் பங்கேற்கும் போட்டிகளை மறக்காமல் பார்த்துவிடுவேன். ஜோனாதன் எட்வர்ட்ஸ் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளின் வீடியோக்களை டவுண்லோட் செய்து வைத்து இருக்கிறேன்'' என்கிறார் விக்னேஷ்.

''இந்த ஆண்டு ஜனவரியில், தேசிய அளவிலான சிபிஎஸ்இ அண்டர் 16 போட்டி ஆரம்பிச்சது. அதுக்காக டெல்லிக்குப் போனோம். அங்கே அடிச்ச குளிரில் என்னால் பயிற்சிகூட எடுக்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. உடல் அளவில் எனக்கு இருந்த பலம் போயிருச்சு. இருந்தாலும், மனதில் இருந்த நம்பிக்கையும், என் தந்தை தந்த ஊக்கமும் என்னை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது. குளிர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் வந்திருந்தாங்க. அவங்களோடு  போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. ஆனாலும், அண்டர் 16-ல் நான் கலந்துகொண்ட கடைசிப் போட்டி இதுதான். தேசிய அளவில் எந்த ரெக்கார்டும் செய்ய முடியலையேனு சின்ன வருத்தமும் இருக்கு'' என்கிறார் விக்னேஷ்.

ஆனாலும், நீளம் தாண்டுதலில் 6021 மீ தாண்டியும், மும்முறைத் தாண்டுதலில் 13.28 மீ தாண்டியும், தங்கப் பதக்கங்கள் வென்றார். 2010-ல் பழவந்தாங்கலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் நான்கு பதக்கங்களையும், 2011-ல் அம்பத்தூர் 'விவேகானந்தா வித்யாலயா’ பள்ளியில் நடைபெற்ற 'கிளஸ்டர் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். அப்போது, மும்முறைத் தாண்டுதலில் மாநில அளவிலான சாதனையை முறியடித்ததால், 'சிறந்த தடகள வீரர்’ என்ற விருதும் கிடைத்தது.

ஸ்கூல் ஸ்டார்

விளையாட்டைப் போலவே இசையிலும் விக்னேஷ் கலக்கக்கூடியவர். இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக மிருதங்கம் கற்றுவருகிறார். நடனமும் நன்றாகவே ஆடுவார், படிப்பிலும் புலிதான்.

''விளையாட்டில் இறங்கிவிட்டால் முழுக் கவனமும் அதில்தான் இருக்கும். அதேபோல மிருதங்கம் வாசிப்பதிலும் அப்படித்தான். இந்த ஈடுபாடுதான் அவனது வெற்றிக்குக் காரணம்'' என்று பெருமையுடன் சொல்கிறார் விக்னேஷின் அம்மா வசந்தி.

''விக்னேஷை விளையாட்டில் அடிச்சுக்க முடியாது. அவன் போட்டியில் கலந்துக்கப்போறதுக்கு முன்னாடியே கண்டிப்பா ஜெயிச்சிடுவான் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கும். அவன் இன்னும் நிறைய சாதிக்கணும் என்பதுதான் எங்க ஆசை'' என்கின்றனர் விக்னேஷின் சகோதரர்.

விக்னேஷின் நண்பர்களோ, ''விக்னேஷ் பல சாதனைகள் படைக்கிறது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அதையே வேற மாதிரிக் கொண்டாடுவோம். நாங்க சன் டி.வி.யில் இருந்து பேசுறோம். உங்களைப் பேட்டி எடுக்கணும் என்று புதுப்புது நம்பரில் இருந்து போன் செய்து கலாய்ப்போம்.'' என்கிறார்கள்.

''போட்டிகளில் வெற்றியையும் அதனால் கிடைக்கும் புகழையும் மட்டுமே மனதில் நினைச்சுக்கிட்டு களம் இறங்காமல், இது என்னுடைய பணி, இதைச் சிறப்பாகச் செய்ய வேண்டியது என் கடமை என்று நினைச்சு செயல்பட்டால்,  நிச்சயம் ஜெயிக்கலாம்'' என்று புன்னகை பூக்கிறார் விக்னேஷ்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism