Published:Updated:

ஆறு பேர் ஆடலாம் அசத்தல் செஸ் !

சரா

ஆறு பேர் ஆடலாம் அசத்தல் செஸ் !

சரா

Published:Updated:
##~##

உங்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் தெரியும் தானே? சுமார் 49 வருடங்களாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வாய் பேசவும், நகரவும் இயலாமல் போராடும் அவர், அறிவியல் துறையில் உலக அளவில் வியத்தகு சாதனைகள் புரிந்தவர்.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ஹாஃக்கிங்கை தனது ரோல்மாடலாகக்கொண்ட ஒரு சுட்டியின் படைப்பாற்றலை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒன்பது வயது சுட்டி ஹிருதயேஷ்வர் சிங் பாட்டி. மரபியல் சார்ந்த நோய்ப் பாதிப்புக் காரணமாக, மூளை இடும் கட்டளைக்குத் தகுந்தபடி, அவனது தசைகள் செயல்படாது.

சக்கர நாற்காலியில் மட்டுமே வலம்வர முடிந்த ஹிருதயேஷ்வர், தனது குறைபாட்டை நினைத்து   சோர்ந்துபோனது இல்லை. மாறாக, எந்தநேரமும் ஆக்கப்பூர்வமாக இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்றே விரும்புவான்.

ஆறு பேர் ஆடலாம் அசத்தல் செஸ் !

2010-ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில்... ஹிருதயேஷ்வர் தன்னுடைய தந்தை சரோவர் சிங் பாட்டி-யுடன் செஸ் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது, அங்கு வந்த நண்பன் ஒருவன், 'நானும் விளையாட்டில்  சேர்ந்துகொள்ளலாமா?' என்று கேட்டான். 'வா... எங்களோடு விளையாடு,' என்று ஹிருதயேஷ்வர் அழைக்க, 'செஸ் ஆட்டத்தை இருவர் மட்டும்தானே விளையாட முடியும்!' என்றார் அப்பா.

அப்போதுதான் ஹிருதயேஷ்வருக்கு, 'செஸ் போட்டியை ஒரே நேரத்தில் பலர் ஏன் ஆடக் கூடாது? அதற்கு ஏற்றபடி புதிய செஸ் போர்டையும், ஆட்டத்தையும் உருவாக்கலாமே’ என்ற எண்ணம்  தோன்றியது.

வெறும் யோசனையுடன் நின்றுவிடாமல், அதற்கு வடிவம் கொடுப்பதற்கான முயற்சிகளில்  இறங்கினான் ஹிருதயேஷ்வர்.

தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, ஒரே நேரத்தில் ஆறு பேர் விளையாடும் வகையில் புதிய செஸ் ஆட்டத்தையே கண்டுபிடித்துவிட்டான். அதுதான், 'சர்க்குலர் செஸ்’.

ஆறு பேர் ஆடலாம் அசத்தல் செஸ் !

சாதாரணமாக செஸ் போர்டில் கறுப்பு, வெள்ளை நிறக் காய்கள் மட்டும்தானே இருக்கும். ஹிருதயேஷ்வர் வடிவமைத்து இருக்கும் செஸ் போர்டில், ஆறு வண்ணக் காய்களுடன் விளையாடலாம்.

கணித ஆசிரியரான தன் தந்தையின் உதவியுடன், ஓர் ஆண்டு கால சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, இந்தக் கண்டுபிடிப்பில் முழுமை அடைந்தான். இந்த சர்க்குலர் செஸ்  கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் பெற்றுவிட்டான். இதன் மூலம், 'சக்கர நாற்காலியில் வலம் வந்தபடி, காப்புரிமை பெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்’ என்ற உலகச் சாதனைக்கும் சொந்தக்காரனாகி இருக்கிறான் ஹிருதயேஷ்வர்.

ஒரே நோக்கத்தில் மனதை ஒருமுகப்படுத்தி முயன்றதன் விளைவாக, இந்த அசாத்திய சாதனையைப் புரிந்திருக்கும் ஜீனியஸ் ஹிருதயேஷ்வர், 'ஒருவர் எவ்விதத் தடைகளாலும் முடங்கிவிடக் கூடாது, அவற்றைத் தகர்க்கும் வரை போராட வேண்டும்,' என்கிறான் முழு நம்பிக்கையுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism