Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

எரியும் தண்ணீரில் என்ன செய்யலாம் ?ஆ.அலெக்ஸ் பாண்டியன் ஜெ.வேங்கடராஜ்

சுட்டி விஞ்ஞானி

எரியும் தண்ணீரில் என்ன செய்யலாம் ?ஆ.அலெக்ஸ் பாண்டியன் ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

'எதிர்காலத்தில் தண்ணீரை எரிபொருளாகப் பயன்படுத்தும் நாள் வரும் என்று நம்பிக்கை உள்ளது’ என்று ஜூல்ஸ்வர்னெஸ் என்ற விஞ்ஞானி 1876-ல் கூறினார். அவர் கூற்றை நிரூபித்து இருக்கிறார் ஒரு சுட்டி விஞ்ஞானி.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அரக்கரை என்ற குக்கிராமத்தில் உள்ளது சீதாலெக்ஷ்மி உதவி நடுநிலைப் பள்ளி. இங்கே, ஆறாம் வகுப்பு மாணவியான ச. இராகவி, 'மின்னாற்பகுப்பு முறை’ மற்றும் 'நீராவிப் படுத்துதல்’ முறைகளின் மூலம் ஹைட்ரஜன் வாயுவை உண்டாக்கி,  எரிபொருளாகப் பயன்படுத்தும் உபகரணத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரக்கரை சீதாலெக்ஷ்மி உதவி நடுநிலைப் பள்ளிக்கு பேருந்து வசதியே கிடையாது. ஏறக்குறைய 2 கி.மீ. தூரம் நடந்து சென்றுதான் சந்திக்க முடிந்தது.

'எங்கள் அறிவியல் புத்தகத்தில் 'மின்னாற் பகுப்பு’ என்ற தலைப்பில் இருந்த கட்டுரையைப் படித்தேன். அதைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டேன். அவர் அதைப் பற்றி விளக்கமாகச்  சொன்னார்.அதை வைத்து, நீர் கந்தக அமிலம் கலந்த கலவையில் இருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தால் என்ன? என்ற ஒரு யோசனை வந்தது. அதை ஆசிரியரிடம் சொன்னேன். அவரும் உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார்'' என்கிறார் இராகவி.

இதற்காக பல மாதங்கள் உழைத்து இருக்கிறார். ஆரம்பத்தில் தோல்விகள் வந்தன. தொடர் முயற்சியில் தனது ஆய்வை முழுமைப்படுத்தி இருக்கிறார்.

சுட்டி விஞ்ஞானி

'எதைப் பற்றி சொன்னாலும், இது ஏன், எப்படி எனக் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாள். இராகவிக்குப் பதில் சொல்லியே நான் சோர்ந்துவிடுவேன்'' என்று சிரிப்புடன் சொல்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன். இவர்தான் இராகவியின் அப்பாவும்கூட.

''ஆரம்பத்தில் இருந்தே எந்தப் போட்டி என்றாலும் கலந்துகொள்ள ரொம்ப ஆர்வமா இருப்பாள். பரிசு வாங்க ஆர்வமும் தீவிரமும் காட்டுவாள். தோத்துப்போயிட்டா வீட்டுக்கு வந்து அழுவாள். 'இப்படி அழுவதால் பயன் இல்லை. ஏன் தோத்தோம்னு யோசி. இன்னும் கவனமாக அந்த விஷயத்தைச் செய். இன்றைக்குப் பல சாதனைகள் செய்து இருக்கிற எல்லோருமே தோல்விகளைச் சந்திச்சவங்கதான்’னு சொல்வேன். இந்தக் கண்டுபிடிப்பையும் பல நாட்களாக முயற்சி செய்துதான் சாதிச்சு இருக்கிறாள்'' என்று பெருமையுடன் சொல்கிறார் சரவணன்.

சுட்டி விஞ்ஞானி

''இராகவியின் கண்டுபிடிப்பு, நாகை மாவட்ட அளவிலும் விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் பாராட்டும் பரிசும் வாங்கி இருக்கு. எதிர் காலத்தில் இவளோட கண்டுபிடிப்புகள் எல்லாம் மக்களுக்குப் பயன்படணும்' என்கிறார் இராகவியின் அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார்.

அறிவியலில் ஆர்வம் காட்டும் இராகவிக்கு, மருத்துவ ஆராய்ச்சியில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

சுட்டி விஞ்ஞானி

'முதன் முதலாக இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி, எங்கள் வீட்டில் எல்லோரும் காபி போட்டுக் குடித்தோம். என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அப்பாவுக்கு அந்தக் காபிதான் நான் கொடுத்த பரிசு' எனக் கூறி, அப்பாவைப் பார்த்து புன்னகைக்கிறார் இராகவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism