Published:Updated:

மகாத்மாவை தேசத் தந்தை என்று சொன்னது யார் ?

ஆர்.ஷஃபி முன்னா

மகாத்மாவை தேசத் தந்தை என்று சொன்னது யார் ?

ஆர்.ஷஃபி முன்னா

Published:Updated:
##~##

சுட்டிகளின் மனதில்தான் எத்தனை விதமான கேள்விகள்? எல்லாவற்றுக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் பதில் சொல்வது கஷ்டமான காரியம்தான். ஆனால், இதில் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் கடமை நம் அரசாங்கத்துக்கும் இருக்கிறது.

இதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right To Information Act-RTI)இருக்கிறது. இதில், கேள்விகள் கேட்க சுட்டிகளுக்கும் உரிமை உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சுட்டி ஐஸ்வர்யா பராஷர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் வசிக்கும் 10 வயது சுட்டி ஐஸ்வர்யா பராஷர். இங்கே உள்ள சி.எம்.எஸ் பள்ளியின் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஐஸ்வர்யா, கடந்த பிப்ரவரியில், 'நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்திக்கு அளிக்கப்பட்ட பட்டமான 'தேசத் தந்தை’ (Father of the nation)என்ற உத்தரவின் நகலைக் கேட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ-ன் கீழ் ஒரு கடிதம் எழுதினார்.

மகாத்மாவை தேசத் தந்தை என்று சொன்னது யார் ?

இதற்கு உடனடியாக பதில் அளிக்க முடியாத பிரதமரின் மத்திய பொதுத் தகவல் அதிகாரி, ஐஸ்வர்யாவின் ஆர்.டி.ஐ கடிதத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அங்கும் பதில் கிடைக்காமல், டெல்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்துக்கு  கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் தேசத் தந்தை என மகாத்மாவுக்கு பட்டம் அளித்தது யார் என்பது தெரியாமல் போனது. வேறு வழி இல்லாமல், 'நேரில் வந்து நீங்களே வரலாற்று நூல்களைப் படித்து ஆய்வறிந்து, தகவல் அறிந்துகொள்ளுங்கள்’ என ஐஸ்வர்யாவுக்கு பதில் கடிதம் அனுப்பினார்கள். இது குறித்து ஐஸ்வர்யாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

''எனது வகுப்பில் மகாத்மா காந்தி பற்றிய பாடம் நடந்தது. காந்திக்கு, தேசத் தந்தை பட்டம் அளித்தது யார்? அப்படி அவரை முதன் முதலில் அழைத்தது யார்? என அறிய விரும்பினேன். அதை எனது ஆசிரியையிடம் கேள்வியாக எழுப்பினேன். அவருக்குத் தெரியவில்லை. இன்டர்நெட்டில் கூகுள் சர்ச்சிலும் தேடிப் பார்த்தேன். வீட்டுக்கு வந்து அதே கேள்வியைக் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் எனது தந்தை, சஞ்சய் சர்மாவிடம் கேட்டேன். பதில் இல்லை. ஆர்.டி.ஐ பற்றிய சமூக சேவை செய்து வரும் எனது தாய் ஊர்வசி, எனக்கு இந்த யோசனை தந்தார். அதன்படி, நான் ஆர்.டி.ஐ போட்டும் பதில் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. இப்போது எனக்கு பரீட்சைகள் நடக்கின்றன. இவற்றை முடித்துவிட்டு, விடுமுறையில் டெல்லியின் இந்திய தேசிய ஆவணக் காப்பகம் செல்வேன். அங்கே உள்ள வரலாற்று நூல்களைப் படித்து, மகாத்மாவுக்கு தேசத் தந்தை பட்டம் வந்தது குறித்து அறிய முயல்வேன்'' என நம்பிக்கையுடன் பேசும் ஐஸ்வர்யா, ஆர்.டி.ஐ போடுவது முதன் முறை அல்ல.

மகாத்மாவை தேசத் தந்தை என்று சொன்னது யார் ?

''எனது பள்ளியின் அருகே குப்பைகள் ஒழுங்காக அள்ளப்படாமல் இருந்தது.  'இந்தக் குப்பைகள் ஏன் அள்ளப்படாமல் உள்ளது?’ எனக் கேட்டு உ.பி.யின் முதல் அமைச்சருக்கு ஒரு ஆர்.டி.ஐ போட்டேன்.  உடனடியாக குப்பைகள் அள்ளப்பட்டதுடன், ஒரு பெரிய குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டது. இப்போது உடனுக்குடன் அள்ளப்படுகிறது'' என்கிற ஐஸ்வர்யாவுக்கு பள்ளியிலும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

மகாத்மாவைப் பற்றிய இந்தக் கேள்வியால் பத்திரிகைகள் மற்றும் டி.வி சேனல்களிலும் ஐஸ்வர்யாவின் பேட்டிகள் வெளியாகின. இவர் எழுப்பிய கேள்வி குறித்து வரலாற்று பேராசிரியரும், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுமான துஷார் காந்தியிடமும் இது பற்றி கேட்கப்பட்டது. ''முதன் முதலாக மகாத்மா காந்தியை தேசத் தந்தை என அழைத்தவர் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இதை அவர், பிப்ரவரி 22, 1944-ல் கஸ்தூரிபா இறந்தமைக்காக, அதே வருடம் ஜூன் 4-ல் வானொலியில் பேசிய அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டார். பிறகு, கவிக்குயில் சரோஜினி நாயுடு ஏப்ரல், 28 1947-ல் ஒரு மாநாட்டில் பேசியபோது, மகாத்மா காந்தியை தேசத் தந்தை எனக் குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து பலரும் இதுபோல் குறிப்பிட, தேசத் தந்தை பட்டம் நிலைத்து இருக்கலாம். காந்திஜியின் மறைவை அறிவித்து நேருஜி பேசியபோதும் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார்'' என்று சொல்கிறார் துஷார் காந்தி.

ஒரு ஆர்.டி.ஐ போட்டு அகில உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய ஐஸ்வர்யா, அத்துடன் தனது பணியை முடித்துவிடவில்லை.

''இன்று நம் நாடு முழுவதும் பாலித்தீன் ஓர் அரக்கனாக இருந்து பொதுமக்களுக்கு பெரும் தீமையை விளைவித்து வருகிறது. அதை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக, பாலித்தீனை எதிர்த்துப் போராடுவேன். இதற்காக,  ஆர்.டி.ஐகளும் போட்டு நம் அரசை விழிப்படையச் செய்வேன். எனது நண்பர்களும் இதற்கு  உறுதுணையாக இருப்பார்கள்'' என்கிறார் ஐஸ்வர்யா உறுதியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism