Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

இரா.வினோத் படங்கள் : சு.குமரேசன்

பெயர்: ட்விஷா
வகுப்பு: 7-ஆம் வகுப்பு
பள்ளி: கேந்திரிய வித்யாலயா
சாதனை: தேசிய அளவிலான கயாகிங்
போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்கள்.

##~##

பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான 'கயாகிங் சாம்பியன் (Kayaking champion)போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை சர்வ சாதாரணமாக வென்று, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார், 14 வயதான ட்விஷா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கயாகிங்’ என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே அறியப்படும் அற்புதமான நீர் விளையாட்டு. அதுவும் கடல், ஏரி, நதிகளில் கூர்மையான படகை துடுப்புகளால் வேகமாகச் செலுத்தி இலக்கை அடைய வேண்டும். இந்த விளையாட்டில், படகின் நீளத்துக்கு ஏற்றவாறு இருவரோ அல்லது மூவரோ பங்கேற்கலாம். கயாகிங் விளையாட்டில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை, 'கயாக்கர்’ என்று அழைக்கிறார்கள்.

பெங்களூருவில் கேந்திரிய வித்யாலயாவில்  ஏழாம் வகுப்பு படிக்கிறார் ட்விஷா. அப்பா கே.வி. பிரசாத், ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றவர்.  அம்மா, இல்லத்தரசி.

பெங்களூரு, அல்சூர் ஏரியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ட்விஷா, ''ஐந்து வயசு இருக்கும்போதே, அப்பாவுடன் தினமும் ஜாக்கிங் போவேன். ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் என்றாலே எல்லாப் பரிசும் எனக்குதான். அதே சமயம் படிப்பு என்று வந்துவிட்டால், எப்போதும் டாப் ரேங்க்தான்'' என்று கலகலவெனப் பேசுகிறார் ட்விஷா.

ஸ்கூல் ஸ்டார் !

'’எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, அப்பா நீச்சல் கிளாஸ்ல சேர்த்துவிட்டார். அப்போது, அப்பா மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப்பில் வாட்டர் கேம்ஸுக்கு இன்சார்ஜ்ஜா இருந்தார். என்னோட நீச்சல் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அப்பா போட்டிங் ட்ரெயினிங் கொடுத்தார். என்னோட வேகத்தைப் பார்த்து, கயாகிங் கற்றுக்கொள்ளச் செய்தார்' என்கிறார் ட்விஷா.

அவரது தந்தை கர்னல் கே.வி.பிரசாத், ''ட்விஷா சின்ன வயசில் இருந்தே ரொம்பத் தன்னம்பிக்கை உள்ள பிளேயர். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் அசாத்திய உழைப்பும், இலக்கு நோக்கிய துடிப்பும் ரொம்ப முக்கியம். ட்விஷாவுக்கு அது இயல்பாகவே அமைஞ்சது. இந்திய அளவில், ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் அங்கமான கயாகிங் விளையாட்டில் பங்கேற்க, விளையாட்டு வீரர்கள் இல்லாத சூழல். ட்விஷாவை கயாகிங் கிளாஸுக்கு அனுப்பினேன். அவளோட கடினமான உழைப்பினால்தான் இந்தச் சின்ன வயதில் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறாள்' என ட்விஷாவின் தோளைத் தட்டினார் அந்தப் பாசமான அப்பா.

ஸ்கூல் ஸ்டார் !

''என்னோட முதல் கயாகிங் போட்டி அனுபவம், சப் ஜூனியர் அளவில் 200 மீட்டர் போட்டிதான். கலந்துகொள்ளும்போது, ஒரே பரபரப்பாக இருந்தது. ஆனால், படகில் ஏறி அமர்ந்ததும், என்னுடைய

ஸ்கூல் ஸ்டார் !

கண்ணுக்கு இலக்கைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அந்தப் போட்டியில் நான்தான் முதல் பரிசு வாங்கினேன். அதன் பிறகு, கர்நாடக அரசு நடத்திய சப்-ஜூனியர் லெவல் 500 மீட்டர் கயாகிங் போட்டியிலும் முதல் பரிசு. அதே போட்டியில் நான் சப்-ஜூனியர் வயதாக இருந்தாலும், ஜூனியர்ஸ் லெவலில் நடந்த 1,000 மீட்டர் போட்டியிலும் கலந்துகொண்டேன். எல்லாரும் பெரிய பெரிய அண்ணன்களாக வந்து இருந்தாங்க. நான் மட்டும்தான் பொண்ணு. ஆனாலும், அங்கேயும் எனக்கு முதல் பரிசு மெடல். எனக்குள் பெரிய நம்பிக்கையை விதைத்ததே இந்தப் போட்டிதான்'' எனச் சிலிர்க்கிறார் ட்விஷா.

தொடர்ந்து... ''இந்த ஆண்டு நடந்த நேஷனல் சாம்பியன் கயாகிங் போட்டியில் 5 கோல்டு மெடல்கள் வாங்கியது என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஏனென்றால், போட்டியில் கலந்துகொண்டதிலே மிகவும் இளையவள் நான்தான். எந்த ஒரு ஸ்பான்ஸரும் இல்லாத சூழலில், அப்பாவின் வருமானத்திலே ஒன்றரை லட்சத்திற்கு புதுப் பெடல், புதுப் படகு எல்லாம் வாங்கி, இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். இந்தப் போட்டியில் எனக்கு எதிராகக் களம் இறங்கியவர்கள் எல்லாம் வெளிநாட்டு இலகு ரக பெடல் படகுகளைப் பயன்படுத்தியபோது, நான் மட்டும் விலை குறைந்த, எடை அதிகமான உள்ளூர்ப் படகைப் பயன்படுத்தினேன். ஜூனியர் லெவலில் மூன்று போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றேன். 14 வயதிலேயே நேஷனல் லெவலில் 5 கோல்டு மெடல்களை வாங்கியதால், 2014-ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்து இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் இந்தியாவுக்கு கோல்டு மெடல் வாங்கித் தர வேண்டும். அதுதான் என் லட்சியம், கனவு'' என்கிற ட்விஷா, தனது வெற்றிகளுக்கு காரணமான அப்பா, அம்மா கோச் ஹவில்தார் மகேஷ் ஆகியோருக்கு நன்றி சொல்கிறார்.

இந்த வெற்றிச் சுட்டியின் தங்கக் கனவுகள் கைக்கூட மனதார வாழ்த்துவோம்!