Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !

சுட்டிகளுக்குக் கதை சொல்கிறார் சிவகார்த்திகேயன் !கே.யுவராஜன்

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !
##~##

விடுமுறை குஷியில் ஏற்கெனவே ஜாலியாகக் குதித்துக்கொண்டு இருக்கும் சுட்டிகளுக்கு, ரொம்ப ஜாலியான ஒருவர் கதை சொன்னால், கலகலப்புக்கு சொல்லவா வேண்டும்?  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''வெல்கம் அங்கிள்'' என்று கோரஸாக வரவேற்ற சுட்டிகளைப் பார்த்து, ''என்னது அங்கிளா? அண்ணானு கூப்பிடுங்கப்பா. நான் இப்பத்தான் டென்த் எக்ஸாம் எழுதிட்டு வர்றேன்'' என்று ஆரம்பத்திலேயே கலகலப்பின் உச்சத்தைத் தொட்டார் சிவகார்த்திகேயன் அண்ணா.

''டென்த் எக்ஸாமா? எத்தனையாவது வருஷமா எழுதிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டான் ஜோதி பிரகாஷ். ''இந்த முறையாவது பாஸ் பண்ணுவீங்களா?'' -இது சுபாஷ்.

''என்னை ரொம்ப டேமேஜ் பண்றீங்க. வேற சப்ஜெக்ட்டுக்குப் போயிருவோம். லீவுல எங்கே எல்லாம் போகிற பிளான் வெச்சு இருக்கீங்க?'' என்று கேட்டார் சிவகார்த்திகேயன்.

சுட்டிகள் தங்களது விடுமுறைத் திட்டங்களை அடுக்கினார்கள். ''உங்களுக்கு லீவு இல்லையா அங்கிள்?'' என்று கேட்டாள் ஜனனி.

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !

''மறுபடியும் அங்கிளா... நான் கோவிச்சுக்கிட்டுக் கிளம்பறேன்ப்பா'' என்று எழுந்தார்.

''ஐயையோ ஸாரி! அண்ணா... அண்ணா... அண்ணா'' என்றார்கள்.

''ம்... அப்படித்தான். இன்னொரு முறை யாராவது அங்கிள்னு கூப்பிட்டா, நூறு முறை இம்போசிஷன் எழுத வெச்சுடுவேன். சரி, இப்போ  பாடத்துக்குப் போகலாமா?'' என்றார்.

''என்னது பாடமா?'' என்று சுட்டிகள் அலற, ''ஓ ஸாரி... கதை சொல்ல வந்து இருக்கேனோ... சரி, நான் கதை சொல்லும்போது குறுக்கே பேசக் கூடாது. அப்படிப் பேசினா, வெளியே முட்டிபோட வெச்சுருவேன்'' என்றார்.

''கதையில் சந்தேகம் வந்தா?'' என்று கேட்டாள் பிரீத்தி.

''எதுவா இருந்தாலும் இப்பவே கேட்டுரு.''

''கதையைச் சொல்றதுக்கு முன்னாடியே எப்படிக் கேட்கிறது?'' என்றான் பாரதிராஜா.

''ஓகோ அப்படி ஒண்ணு இருக்கோ? சந்தேகமே வராத மாதிரி நான் கதை சொல்றேன். பயப்படாதீங்க... சோகம், சென்டிமென்ட் கதை கிடையாது. ரொம்ப ஜாலியான கதைதான். ஒரு ஊரில் ஒரு மீனவன் இருந்தான்'' என்றதும், ''மீனவன்னா... அவன் பேரு என்ன?'' என்று கேட்டான் உதயசங்கர்.

''கதையை ஒரு வரிகூட சொல்லலை அதுக்குள்ளே சந்தேகமா? நீங்களே ஒரு பேரை வைங்கப்பா'' என்றார்.

''கொசக்கி பசப்புகழ்'' என்றான் ஸ்ரீதர். மற்ற சுட்டிகளும் அதை ஏற்றுகொண்டார்கள்.

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !

''சரி, அதையே வெச்சுப்போம். இந்தக் கதையில் ஒரு ஜமீன்தார் வருவாரு. அவருக்கு ஸ்ரீதர் பேரை வெச்சுப்போம். இப்போ கதையைச் சொல்றேன். வேற எந்த டவுட்டா இருந்தாலும் கடைசியில கேளுங்க. நடுவுல புகுந்தா...'' என்று சொல்லி நிறுத்த, ''முட்டிபோட வெச்சுருவீங்க'' என்றார்கள்.

''அதேதான்'' என்று ஆமோதித்த சிவகார்த்திகேயன், கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ''நம்ம கொசக்கி பசப்புகழ், அதாவது மீனவனுக்கு அந்த ஊரில் இருக்கிற ஆறு, குளம், ஏரியில் மீன் பிடிச்சு விற்கிறதுதான் தொழில். அதே ஊரில் ஸ்ரீதர்னு ஒரு ஜமீன்தார் இருந்தார். ரொம்பப் பணக்காரர். அவருக்கு பெரிய தோட்டம் ஒண்ணு இருந்துச்சு. அங்கே நிறையக் காய்கள், பழங்கள் எல்லாம் இருக்கும். தோட்டத்துக்கு நடுவில் ஒரு குளமும் இருந்துச்சு. கொசக்கி பசப்புகழுக்கு அதில் மீன் பிடிக்கணும்னு ரொம்ப நாளாகவே ஆசை. ஆனால், ஜமீன்தார் பெர்மிஷன் தர மாட்டாரே... அதனால், ஒரு நாள் ராத்திரி வலையை எடுத்துக்கிட்டு, கையில் ஒரு விளக்குடன் கிளம்பினான். சுவர் ஏறிக் குதிச்சு, அந்தத் தோட்டத்துக் குளத்தில் வலையை வீசி, மீனுக்காகக் காத்திருந்தான். தோட்டத்துக்கு எதிரில்தான் ஜமீன்தார் வீடு இருந்தது. அவர் மொட்டை மாடியில் படுத்துக்கிட்டு இருந்தார்''

''எதுக்கு மொட்டை மாடியில் படுத்து இருந்தாரு?'' என்று கேட்டாள் ரோஹிணி.

''இது என்ன கேள்வி? சம்மர் டைம்... வீட்டுல பவர் கட் இருந்திருக்கும். அதனால, மேலே வந்து இருப்பாரு. கரெக்ட்டா அண்ணா?'' என்று கேட்டான் உதயசங்கர்.

''நல்லா எடுத்துக் கொடுக்கிறியே வெரிகுட்! நீ இன்னும் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக்க'' என்ற சிவகார்த்திகேயன், கதையைத் தொடர்ந்தார்.

''பவர் கட் ஆனதால், மொட்டை மாடியில் ஜமீன்தார் படுத்துக்கிட்டு இருந்தார். யதேச்சையாக எழுந்து பார்த்தபோது, தோட்டத்துக்குள் யாரோ இருக்கிறது தெரிஞ்சது. உடனே பதறி அடிச்சுக்கிட்டு வெளியே வந்தார். தோட்டத்துக்கிட்ட வந்து, வெளியே காவலுக்குப் படுத்து இருந்த ஆட்களை உலுக்கி எழுப்பினார். 'அடேய் தூங்குமூஞ்சிப் பயல்களே... இதுக்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன். தோட்டத்துக்குள் எவனோ நுழைஞ்சு இருக்கிறான். போய் அவனை இழுத்துட்டு வாங்கடா’னு கத்தினார். காவலாளிகள் தீவட்டிகளுடன் தோட்டத்துக்குள் நுழைஞ்சாங்க. ஜமீன்தார் போட்ட கூச்சல் உள்ளே இருந்த நம்ம கொசக்கி பசப்புகழ் காதிலும் விழுந்துச்சு. 'ஆஹா... இனி ஓடவும் முடியாது. மாட்டிக்கிட்டா மரத்தில் கட்டிவெச்சு தோலை உரிச்சுருவாங்க. புத்திசாலித்தனமா நிலைமையைச் சமாளிக்கணும்’னு முடிவுசெய்தான்''

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !

''அப்படியும் இப்படியுமாப் பார்த்தான். ஒரு பக்கமாக சாம்பலைக் குவிச்சு வெச்சுருக்கிறது தெரிஞ்சது. உடனே ஒரு யோசனை வந்துச்சு. வலையை உடலில் சுற்றிக்கொண்டான். சாம்பலை எடுத்து உடல் முழுசும் பூசிக்கொண்டான். கையில் விளக்குடன் ஒரு மரத்தின் கீழே கண்களை மூடி உட்கார்ந்துட்டான். அங்கே வந்த வேலையாட்கள் திகைச்சுட்டாங்க. ஒருத்தன், ''ஹேய் யாரப்பா நீ? உள்ளே எப்படி வந்தே?'' என்று அதட்டலுடன் கேட்டான். மீனவன் கண்களைத் திறக்கலை. அவனை ரொம்பவும் அதட்டுவதற்கும் வேலையாட்களுக்குப் பயமாக இருந்துச்சு. ஏன்னா, சாமியார் மாதிரி இருக்கார். சாபம் ஏதாச்சும் கொடுத்துட்டா என்ன செய்றதுனு பயம். 'நமக்கு எதுக்கு வம்பு? நீ இங்கேயே இரு. நான் போய் முதலாளியைக் கூட்டிட்டு வர்றேன். அவர் ஆச்சு. இவர் ஆச்சு’னு சொல்லிட்டு ஒருத்தன் போனான். ஜமீன்தாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கையோடு அழைச்சுட்டு வந்தான். அங்கே வந்த ஜமீன்தாருக்கும் மீனவனை மிரட்டி எழுப்புறதுக்குப் பயமாக இருந்துச்சு. கிட்டக்கப்போய் 'ஐயா... ஐயா... சாமி’னு பணிவோடு கூப்பிட்டார்''

''ஏன் அண்ணா... ஜமீன்தார் தோட்டத்தில் நாய் வெச்சு இருப்பாரே... மீனவன் தோட்டத்துக்குள்ளே வந்தப்பவே அது கடிக்கலியா?'' என்று கேட்டான் சுப்பிரமணி.

''யாருடா இவன்... கதை இன்ட்ரஸ்ட்டா போறப்பப் புதுசா ஒரு கேரக்டரைக் கொண்டு வர்றான். இவனை முட்டிபோட வைங்க அண்ணா'' என்றாள் கவிதா.

''வேணாம்... மன்னிச்சுவிட்டுருவோம். அங்கே நாய் எல்லாம் கிடையாது'' என்ற சிவகார்த்திகேயன் தொடர்ந்தார். ''ஜமீன்தார் அப்படிக் கூப்பிட்டதும் மீனவன் மெதுவாக கண்களைத் திறந்து, 'என்ன அப்பனே?’னு கேட்டான். 'நீங்க யாருங்க? இங்கே எப்படி வந்தீங்க?’னு இவர் கேட்டார். 'அப்பனே... என் பெயர் விளக்குச் சாமியார். இந்த உலகத்து மக்களிடம் இருக்கும் அக இருளைப் போக்குவதற்காக ஊர் ஊராகச் சென்று உபதேசம் செய்வேன். அப்படியே உன் ஊருக்கும் வந்தேன். உன் தோட்டத்தைப் பார்த்தேன். இது தெய்வம் குடி இருக்கும் அற்புதமான இடம். இங்கேயே இருந்து ஊர் மக்களுக்கு உபதேசம் செய்யப் போகிறேன். நீ காலையில் ஊருக்குள் சென்று, மக்களிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வா. இப்போது நான் தவம் செய்ய வேண்டும். தொந்தரவு செய்யாதே’னு சொல்லி, நம்ம கொசக்கி பசப்புகழ் மீண்டும் கண்களை மூடிக்கிட்டான். ஜமீன்தாருக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம தோட்டத்துக்குச் சாமியார் வந்து இருக்கார். நமக்கு இன்னும் செல்வம் கொட்டும்னு மீனவனை வணங்கிவிட்டு, வேலையாட்களோடு வெளியே வந்துட்டார். வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னார். அவரோட மனைவி, 'இருளைப் போக்குவதற்கு விளக்கு சரி, உடம்பில் எதுக்காக வலையைச் சுற்றிக்கொண்டு இருந்தார்?’னு கேட்டாங்க. ஜமீன்தார் யோசிச்சு, 'அதுவா... மக்களின் மனம் என்னும் குளத்தில் இருக்கும் தீயவற்றைப் பிடித்து வெளியேற்றுவதற்கு’னு அவரா ஒரு தத்துவத்தை அடிச்சுவிட்டார். காலையில் ஊருக்குள் செய்தி போய், எல்லோரும் அங்கே வந்துட்டாங்க. ஜமீன்தாரும் குளிச்சுட்டு மனைவியுடன் தோட்டத்திற்கு வந்தார். ஆனால், அங்கே சாமியாரும் இல்லை... விளக்கும் இல்லை, வலையும் இல்லை.''

ஒரே ஒரு ஊரிலே...இருட்டில் வந்த விளக்குச் சாமியார் !

''ஆளு எஸ்கேப்பு'' என்றார்கள் சுட்டிகள்.

''கரெக்ட்! ஜமீன்தாருக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை. ஊருன்னு இருந்தா அங்கே ஒரு பெருசு இருப்பார் இல்லியா? அவர், 'நீங்க நேற்று இரவு சாமியாரின் தவத்தைக் கலைச்சுட்டீங்க. அதனாலதான் அவர் கோபிச்சுக்கிட்டுப் போயிட்டார். இதனால், நம்ம ஊருக்கு என்ன தீங்கு நடக்குமோ?’னு கோபமாகச் சொன்னார். ஜமீன்தாருக்கும் பயம் வந்துருச்சு. அப்போது, கூட்டத்தோடு நின்னுட்டு இருந்த நம்ம மீனவன் முன்னாடி வந்தான். 'ஐயா... அவர் பேர் விளக்குச் சாமியார்னுதானே சொன்னீங்க? கவலையை விடுங்க... அவரை எனக்குத் தெரியும். அவர் இமயமலையில் இருந்து வர்றார். நான் இமயமலைக்குப் போய் அவர்கிட்டே பேசி, இதுக்கு என்ன பரிகாரம்னு கேட்கிறேன்’னு சொன்னதும், ஜமீன்தாருக்கு ரொம்ப சந்தோஷம். 'ஊருக்குப் போகக் கொஞ்சம் பணம் வேணும். ஒரு பத்தாயிரம் கொடுத்தீங்கன்னா, நல்லா இருக்கும்’னு இழுத்தான் மீனவன். ''பத்தாயிரம் என்ன... அம்பதாயிரமே தர்றேன். சாமியார் கோபமாகப் பேசினாலும் நீ பொறுமையோடு இருந்து பரிகாரம் கேட்டுட்டு வா’னு சொல்லிப் பணத்தைக் கொடுத்தார். அப்புறம் என்ன? மீனவன், குடும்பத்தோட ஊரைவிட்டுப் போய் வேற ஊர்ல செட்டில் ஆயிட்டான்'' என்று முடித்தார் சிவகார்த்திகேயன்.

''அண்ணா... இந்தக் கதையில் இருந்து என்ன கருத்து சொல்றீங்க?'' என்று கேட்டாள் பிரின்ஸி.

''கதையை மட்டும்தான் நான் சொல்வேன். கருத்தை நீங்களே ஃபில்-அப் பண்ணிக்கோங்க'' என்றார்.

''ஏமாளியாக இருக்கக் கூடாது. அப்படி நாம இருந்தால், ஏமாத்துறவங்களும் இருப்பாங்க. இது ஓகேவா?'' என்றான் ஸ்ரீதர்.

''அடடா... அருமையாகக் கருத்தைச் சொன்ன நம்ம கருத்து கபாலிக்கு, ஒரு 'ஓ’ போடுங்கப்பா'' என்று சிவகார்த்திகேயன் சொல்ல, அவருடன் சேர்ந்து மற்ற சுட்டிகளும் உற்சாகத்துடன் 'ஓ’ போட்டார்கள்.