Published:Updated:

புரிஞ்சுக்குவோம் புல்லியிங் !

சரா

##~##

அதிரடி, சாகச சினிமாவுக்களுக்கு மத்தியில், சுட்டிகளுக்கான விழிப்பு உணர்வு ஆவணப் படம் ஒன்று, அமெரிக்காவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 'புல்லி’ (Bully)என்ற அந்தப் படத்தை, சுட்டிகளும் பெற்றோர்களும் பார்த்தே ஆகவேண்டும் என்று நற்சான்று தருகிறது, பிரபல 'டைம்’ இதழ்.

அப்படி என்னதான் இருக்கிறது, அந்த 'புல்லி’யில்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏதோ ஒரு வகையில் தன்னைவிட பலவீனமான சக மனிதரை உடல் ரீதியாகவும், மனது அளவிலும் துன்புறுத்துவதையே புல்லியிங் (Bullying) என்கிறோம். பள்ளிகள் அளவில் மாணவர்கள் இடையே நடக்கும் இது போன்ற தொல்லைகளையும் புல்லியிங் என்றே சொல்வார்கள்.

சேட்டைக்காரச் சுட்டிகள் சிலர், தன் வகுப்பு மற்றும் பள்ளியைச் சேர்ந்த சக சுட்டிகளைக் கிள்ளுவது, அடிப்பது, கேலி செய்வது, திட்டுவது போன்ற வேண்டாத நிகழ்வுகள் இன்றைக்கு உலக அளவில் நடக்கின்றன. அதிலும் அமெரிக்காவில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறதாம். பெற்றோர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்ல முடியாத அளவுக்குக்கூட சுட்டிகள் பலர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதனால்,  சோர்வு, தனிமை, வருத்தம் முதலியவற்றுடன், படிப்பிலும் ஆர்வம் செலுத்த முடியாத நிலைக்குச் சுட்டிகள் தள்ளப்படுகிறார்கள்.

புரிஞ்சுக்குவோம் புல்லியிங் !

இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் புல்லியிங் பிரச்னையால் 1.3 கோடி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக்கூடும் என ஆய்வுக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தன்னைத் துன்புறுத்தும் சக மாணவர்களுக்குப் பயந்து, பள்ளிக்கு ஆப்சென்ட் ஆகும் சுட்டிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளதாம்.  இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எடுக்கப்பட்ட ஒன்றரை மணி நேர ஆவணப்  படம்தான் 'புல்லி’.

அமெரிக்காவின் ஐந்து முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிச் சுட்டிகளைப் பின்தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளே அதிகம். குறிப்பாக, மூன்று பள்ளிகள், ஐந்து சுட்டிகள்,  அவர்களது குடும்பங்களை ஓர் ஆண்டு முழுவதும் ஃபாலோ செய்து, 'புல்லி’ படத்தை உருவாக்கி இருக்கிறார், இயக்குனர் லீ ஹிர்ஷ் (Lee Hirsch)..

11 முதல் 17 வயது வரையிலான ஐந்து சுட்டிகள், புல்லியிங் பிரச்னையால் அடைந்த பாதிப்புகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டு இருக்கிறது. சுட்டிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் இந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் 'புல்லி’ அழகாகச் சொல்கிறது.

ஆவணப் படத்துடன் நின்றுவிடாமல், இது குறித்த விழிப்பு உணர்வை ஓர் இயக்கமாக வலுப்படுத்துவதற்கு, www.thebullyproject.com என்ற வலைத்தளமும்  உருவாக்கி உள்ளனர்.

இயக்குனர் லீ, சிறுவனாக இருந்தபோது, புல்லியிங் பிரச்னைக்கு ஆளானவர்தான். அதன் பாதிப்பு குறித்து அவரது பெற்றோர்கூடக் கவலைப்படவில்லை. அப்போதுதான் 'பெரியவனாக வளர்ந்து திரைப்படத் துறையில் இயக்குனராகி, 'புல்லிங்’ பிரச்னையை படமாக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். புல்லியிங் இல்லாத பள்ளிகள் உருவாக துணைபுரிய வேண்டும்’ என்று  உறுதிமொழி எடுத்தார். அதன்படியே, இப்போது 'புல்லி’ படத்தை எடுத்து, அமெரிக்க மக்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த 'புல்லி’ படம், 'இனி யாரையும் துன்புறுத்தக் கூடாது,’ என்ற எண்ணத்தைச் சுட்டிகளிடையே உருவாக்குவதால், இயக்குனர் லீ அங்கிளுக்கு, இங்கே இருந்தே ஒரு ஃப்ளையிங் கிஸ் அனுப்பலாம்!

 நம் நாட்டில் எப்படி ?

புரிஞ்சுக்குவோம் புல்லியிங் !

நம் நாட்டில் உள்ள 'புல்லியிங்’ பிரச்னை பற்றி கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திர பாபு சொல்கிறார், ''சக மாணவர்களைத் துன்புறுத்துவது, இங்கே  உள்ள பள்ளிகளிலும் நடக்கிறது. ஆனால், மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், வேறு விதமாக இருக்கும்.

தனக்கு முன்பு உட்கார்ந்து இருக்கும் மாணவனைச் சீண்டுவது, கிள்ளுவதில் தொடங்கி, மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும்  வகையில் சிறுமைப்படுத்திப் பேசுவது வரை நடக்கிறது. குறிப்பாக, உடல் குறைபாடுகளை மையமாக வைத்துக் கேலி செய்வது மிகுதியாக இருக்கிறது. பயந்த குணமும், உடல் பலவீனமும் உள்ள மாணவனை, இன்னொரு மாணவன் துன்புறுத்துவதும் அதிகமாக உள்ளது. 'ஹோம் வொர்க், நோட்ஸ் எழுதுவது போன்ற விஷயங்களைச் செய்து கொடு’ என்று மிரட்டுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதற்கு நம் சினிமாவும் ஒரு தூண்டுகோலாக உள்ளது. சினிமா நகைச்சுவைக் காட்சிகளில், பலவீனமானவர்களைக் கிண்டல் செய்வது, அடிப்பது, உதைப்பது போன்றவற்றின் மூலம் சிரிப்பூட்டப்படுகிறது. இதை ஹீரோக்களே செய்கிறார்கள். இதைப் பார்க்கும் சுட்டிகள், நாமும் அதுபோல் செய்வதுதான் நம்மை ஹீரோவாக உயர்த்தும் என்று தவறாக நம்புகிறார்கள். தனக்குள் ஒரு வில்லன் உருவாவது, அவர்களுக்குத்  தெரிவது இல்லை. இந்த விஷயத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கண்காணிப்பு மிக முக்கியம்'' என்கிறார்.