Published:Updated:

பிங்க் தேவதை அர்மடில்லோ !

ரேஞ்சர் மாமா

##~##

செவ்வெறும்புகளைப் பிடித்துச் சாப்பிடும் ஒரு சில விலங்குகளில் அர்மடில்லோ இனமும் ஒன்று. இந்த வகையில் இவை, மனித சமூகத்துக்கு நன்மையே செய்கின்றன. அர்மடில்லோ என்றால் கவசம் என்று பொருள். வளை தோண்டும் பிராணியான இதற்கு, வளை தோண்டும்போது காயம் ஏற்படாமல் இருக்க, தலைப் பகுதியில் ஹெல்மெட் போன்ற சிறிய கவசம் இருப்பதால்தான் இந்தப் பெயர் வந்தது.  

இருபதுக்கும் மேற்பட்ட வகைகொண்ட ஆர்மடில்லோ வகையில், 'பிங்க் தேவதை அர்மடில்லோ’ என்ற இனம்தான் மிகச் சிறியது. இதன் விலங்கியல் பெயர் Chlamyphorus truncates.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீர்மூழ்கிக் கப்பலைப் போன்ற சிறு வடிவம் இது. அரை அடி உயரமே உள்ள இவை, வால் நீங்கலாக  நான்கு அங்குலம் வரை மட்டுமே நீலமும் பிங்க் வண்ணமும்  கொண்டவை. இவற்றின் பற்களில் எனாமல் இருக்காது. கோரைப் பற்களோ, வெட்டுப் பற்களோ இல்லை. நீளமான வால் உண்டு. ஆனால், தன் வாலைத் தூக்க முடியாது. உடலின் மேல் பகுதி, கவசம் போன்ற கெட்டியான பொருளால் மூடப்பட்டு இருக்கும். கீழ்ப் பகுதியில் உரோமங்கள் நிறைந்து இருக்கும்.  

மத்திய அர்ஜென்டினா பகுதியில் இது வசிக்கிறது. புல்வெளிகளிலும் கள்ளி மற்றும் முட்புதர்கள் நிரம்பிய பகுதிகளிலும் வசிக்கும். எறும்புப் புற்றுகளுக்குப் பக்கத்திலேயே வளை தோண்டி வசிக்கும். இதற்குக் காரணம், இதன் முக்கிய உணவு எறும்புகள் என்பதுதான். இருந்தாலும் தாவரங்களின் வேர், சிறு புழுக்கள், பூச்சிகள், நத்தைகள் போன்றவற்றையும் தின்னும்.

பிங்க் தேவதை அர்மடில்லோ !

எதிரிகள் அருகில் வந்தால், சில வினாடிகளுக்குள்  குழி தோண்டி, அதற்குள் பதுங்கிவிடும். முன்னங் கால்களால் மண்ணைத் தோண்டிக் குவிக்கும். பின்னங்கால்கள் மூலம் தோண்டிய மண்ணை அள்ளி வீசும்.

நெடு நேரம் தரைக்குக் கீழேயே பொழுதைக் கழிப்பதால், இதற்கு 'மணல் நீச்சல்காரன்’ என்ற பெயரும் உண்டு. இதன் கால்களில் உள்ள கூரிய நகங்கள், தண்ணீரைக் கிழித்து நீச்சல் அடிப்பதைப் போல், மணலைக் கிழித்துக்கொண்டு விரைவாக வளை தோண்ட உதவுகின்றன.

எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஆச்சரியப்படத்தக்க வேலை ஒன்றையும் இது செய்யும். வளைக்குள் இறங்கிக்கொண்டு, வளையின் துவாரத்தை  உடலால் கார்க் போல அழுத்தி, சீல் வைத்துவிடும். இரவில் மட்டுமே வெளியில் வந்து வேட்டையாடும். தனது இணையைக் கண்டுபிடிக்கும் வரை தனியாகவே வாழும். ஒரே ஒரு குட்டிதான் போடும். குட்டியின் ஓடு, அது வளர்ந்த பிறகுதான் கெட்டியாகும்.

இதன் வாழிடம் அழிக்கப்படுவதால், இந்த இனமே உலகில் இருந்து மறைந்துபோகக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.