ஸ்பெஷல்
Published:Updated:

அவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம், இ.கார்த்திகேயன் படங்கள்: ஏ.சிதம்பரம்

##~##

நமது புண்ணிய பூமியான இந்த பாரத நாட்டைத் தாய் எனப் போற்றி வணங்குவது நமது பண்பாடு. பாரத மாதா சிறுமிகளாய் அவதாரம் எடுத்து வந்தால் எப்படி இருக்கும்?

''நாங்கள் ரெடி'' என்றார்கள், கோவில்பட்டி கஸ்தூரிபா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி மாணவிகள். வண்ண வண்ண வளையல்கள், கழுத்துக்குத் தங்கச் சங்கிலிகள், காதணிகள், கொலுசுகள் எனச் சகலமும் கொண்டுவந்து இருந்தார்கள் சுட்டிகளின் அம்மாக்கள். மறந்துபோன பொருள்களை வாங்கிவந்து கொடுப்பதற்கு அப்பாக்கள் விரைந்துகொண்டு இருந்தார்கள். யூனிஃபார்மில் வந்து சலித்துப்போன குட்டீஸ்களோ... ''யாரும் நகை போட்டுக்கிட்டு வரக் கூடாதுனு கண்டிஷன் போடுகிற பிரின்ஸி மேடம் இன்னிக்கு என்ன சொல்லுவாங்க?'' என்பது போல் அப்பப்போ மேடம் பக்கம் பார்த்தனர். இப்படி அலங்காரம் நடந்துகொண்டு இருந்தபோது... யூனிஃபார்மில் இருந்த ஒரு சுட்டி, சேலை கட்டிக்கொண்டு இருந்த சுட்டியைப் பார்த்து, ''நீ என்ன கஸ்தூரிபாயா?'' என்று கேட்க, ''நான்தான் பாரத மாதா. இங்கே பாரு... கிரீடமும் கொடியும் தெரியலையா?'' என்றாள்.

நீளமான முடியுடைய சிறுமியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே... தன் மொட்டைத் தலையைத் தடவிப் பார்த்த ஒரு சிறுமி, அவள் அம்மாவிடம் ''இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், லீவுல மொட்டை போடலாம்னு.  என் பேச்சை யாரு கேட்டீங்க?'' என்றாள். மொட்டைச் சுட்டியின் சொல் பேச்சுக் கேட்காத அம்மா முகம் வாடியது. இதைப் பார்த்த இன்னொரு அம்மா ''இதுக்குப் போயிக் கோபமா... இந்தா இந்த முடியை வெச்சுக்கோ'' என்று டோபா முடியைக் கொடுக்க, அழுகை போய்ச் சிரிப்பு வந்தது.

அவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் !

''இந்த வளையல் எனக்கு வேண்டாம். கொஞ்சம்கூட மேட்சிங்காவே இல்லை'' என்று சொல்லி, வளையல்களைக் கழற்றி வீசினாள் ஒரு சுட்டி. உடனே பிரின்சிபால் மேடம், ''கொடிக் கலர் வளையல் கேட்கிறாளா? நான் தர்றேன்'' என்று சொல்லி, மூவண்ண வளையல்களைக் கையில் மாட்டிவிட்டதும்,  ''ஹைய்ய்'' என்று அம்மாவிடம் கைகளை ஆட்டி வளையலோசையால் பதிலடி கொடுத்தாள்.

எல்லா சுட்டீஸும் மேக்கப் போடுவதில் மும்முரமாக இருக்க, ஒரு சுட்டி மட்டும் ஸ்கூல் கேட் வாசலிலேயே நின்றுகொண்டு இருந்தாள்.  ''என் அம்மா டெய்லர்கிட்ட போயிருக்காங்க... இன்னும் வரலே'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆட்டோவில் வந்து இறங்கினார் அவள் அம்மா.

''எல்லோரும் ரெடி ஆயிட்டாங்க, வா சீக்கிரம்...'' என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மேக்கப் ஹாலுக்கு ஓடினாள் அந்தச் சுட்டி. ஒரு வழியாக எல்லாச் சுட்டிகளும் தயார் ஆனார்கள்.

அவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் !

''இன்னைக்கு 'அவதார் நிகழ்ச்சி’னு ஸ்கூல் டைரியில் எழுதிக் கொடுத்து விட்டாங்க... ஆனா, வாசல்ல ஒரு கோலம்கூடப் போடக் காணோமே'' என்று இரண்டு அம்மாக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக் கேட்ட ஒரு சுட்டி பாரதமாதா, ''நானே கோலம் போடுறேன்'' என்று சொல்லி விறுவிறு என்று கோலம் ஒன்றைப் போட்டார். ''இது என்னடி தாமரைப் பூ போடுறே?'' என்று உடன் இருந்த சுட்டி கேட்க, ''நம்மளோட தேசிய மலர் இதுதான், எனக்கு ரொம்பப் பிடிச்ச பூவும் இதுதான்'' என்றாள்.

''ஸ்டூடன்ட்ஸ்! எல்லாரும் வேன்ல ஏறுங்க. 'கதிரேசன் மலைக்குப் போகலாம்'' என்றார் ஒரு மிஸ். ''அப்போ இன்னைக்கு டெஸ்ட் இல்லையா? ஜாலி!'' என்று சந்தோஷமாக எகிறிக் குதித்தார்கள் சுட்டிகள்.

மலை உச்சிக்குச் சென்ற பாரத மாதாக்கள் கோவில்பட்டியின் 'ஏரியல் வியூ’வைப் பார்த்து ரசித்தனர். எல்லா பாரத மாதாக்களும் அங்கே இருந்த பாறை மேல் ஏறி நின்று ''தாயின் மணிக் கொடி பாரீர்...'' என்று பாடினார்கள்.

அவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் !

பாறையில் இருந்து இறங்கி வந்த சுட்டிகள், மலைப் பாதையில் அணிவகுப்பு நடத்தினர். இதைக் கண்ட மலையடிவார மக்கள், ''ஏதோ சினிமா ஷூட்டிங் போல'' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஸ்கூல் புரோகிராம் என்று தெரிந்ததும் பாரத மாதாவாக இருந்த சுட்டிகளைக் கண் இமைக்காமல் ரசித்தனர்.

அவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் !

''சின்னச் சின்னப் பொடிசுகளுக்கு சேலை கட்டுனா நல்லாத்தேன் இருக்கு'' என்றார் ஒரு தாத்தா சந்தோஷமாக. மலையில் இருந்து இறங்கிய சுட்டிகள், வேனில் வந்து பள்ளியில் இறங்கியபோது, அங்கே டிஃபன் பாக்ஸ்களோடு காத்துக்கொண்டு இருந்தார்கள் பாரத மாதாக்களின் பாச மாதாக்கள். ''சீக்கிரம் வாடி... மணி மூணு ஆச்சு'' என்று ஒரு அம்மா சொல்ல,  ''வாடி போடின்னு கூப்பிடாதேம்மா, நான் இப்போ பாரத மாதா'' என்றாள் கனிவான கண்டிப்புடன்.

பதிலுக்கு அம்மா சிரித்துக்கொண்டே ''வாங்கம்மா சீக்கிரம்'' என்றதும் கோடை மழையைப் போல் ஒலித்தது, அனைவரின் சிரிப்பு!