பிரீமியம் ஸ்டோரி
பசுமைக்குப் புதிய முழக்கம்
##~##

''கவிதா... கிளம்பிட்டியா? உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸ் போயிடுறேன்'' என்கிறார் அப்பா.

''பைக்ல வேணாம்பா. கொஞ்ச தூரம்தானே நடந்தே போயிக்கிறேன்'' என்கிறாள் கவிதா.

அந்தக் கவிதா போன்றவர்களின் பங்களிப்பால்தான் நம் சுற்றுச்சூழல் இன்னும் காக்கப்பட்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அனைவரும் சில கிலோ மீட்டர்கள் தூரத்துக்குச் செல்ல நச்சுப் புகையை வெளியிடும் வாகனங்களைத் தவிர்க்கத் தொடங்கினால், புவி வெப்பம் அடைவதை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது உண்மை.

இப்படிச் சின்னச் சின்னப் பங்களிப்புகளால்கூட சுற்றுச்சூழலைக் காத்திட முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்வதற்காகவே ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிமனிதனின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது, இந்தத் தினம்.  

பசுமைக்குப் புதிய முழக்கம்

கடந்த ஆண்டு முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய இந்தியா, காடுகள் காக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியது. இந்த ஆண்டு பிரேசில் தலைமை ஏற்று நடத்துகிறது. இதற்கு புதிய முழக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'பசுமைப் பொருளாதாரம்: உங்களையும் உள்ளடக்கியதா?’ (Green Economy: Does it include YOU?)என்பதே அந்தப் புதிய முழக்கம்.

சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதை மிகவும் குறைத்துக்கொண்டு, இயற்கை வளங்களைச்  சிக்கனமாகப் பயன்படுத்தி, சமூகத்தில் எல்லாத் தரப்பினருக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனும் கொள்கையைப் பின்பற்றுவதே பசுமைப் பொருளாதாரம்.

இது ஏதோ அரசாங்கங்களுக்கும் தொழில் நிறுவனங் களுக்கும்தான் பொருந்தும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். பசுமைப் பொருளாதாரம் என்பதை நம் வீட்டிலும் கடைப்பிடிக்க முடியும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை (Eco-Friendly) நிறையவே வந்துவிட்டன. புத்தகங்கள் தொடங்கி புதுச் சட்டைகள் வரை எக்கோ ஃபிரண்ட்லி பொருட்கள் கிடைக்கின்றன. அத்தகைய பொருட்களை வாங்குவதும் வாங்க வலியுறுத்துவதுமே பசுமைப் பொருளாதாரத்தை உள்ளடக்கிய விஷயம்தான்!

 சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய 10 உறுதிமொழிகள்...  

1. தண்ணீர் வீணாவது தெரிந்தால், குழாயை மூடிவிடுவேன்.

2. தேவைப்படாத மின் சாதனங்களை உடனே நிறுத்திவிடுவேன்.

3. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ மட்டுமே செல்வேன்.

4. ஏ.சி., பிரிட்ஜ், ஹீட்டர்களைக் குறைந்த அளவீடுகளில் பயன்படுத்துவேன்.  

5. டிவி, டிவிடி பிளேயரை 'ஸ்டாண்ட்பை’ நிலையில் வைக்க மாட்டேன்.

6. பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்துவிடுவேன்.

7. குண்டு பல்புகளை மாற்றிவிட்டு சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தச் சொல்வேன்.

8. சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைக்கச் சொல்வேன்.

9. என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் நடுவேன்.

10. சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு