பிரீமியம் ஸ்டோரி

சல்யூட் MFPA !

சுட்டி ஸ்டார்ஸ் !
##~##

மாற்றுத் திறனாளிகள் பலர் இன்று பல சாதனைகளைப் படைக்கின்றனர். கைகளை இழந்தோர் வாயாலும் கால்களாலும் ஓவியம் வரைகின்றனர். அப்படிப்பட்ட கலைஞர்களின் சங்கம்தான் MFPA (Mouth&Foot Painting Artists).  போலியோவால் பாதிக்கப்பட்டு, வாயால் வரையும் கலைஞர் ஒருவர் எரிச் ஸ்டீக்மான் (Erich Stegman). 1956-ல் எட்டு ஐரோப்பியக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு சங்கம் நிறுவினார். அதற்கு MFPA என்று பெயரிட்டார்.

நம் நாட்டில் 1980-ல் IMFPA தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இன்று 74 நாடுகளில் 700 கலைஞர்களோடு பல படைப்புகளைக் கொடுத்து IMFPA ஒளிர்கிறது. விலங்குகள், பறவைகள், குழந்தைகள், தெய்வங்கள், மலர்கள், கலைகள், இயற்கை, கோட்டோவியம் எனப் பல வகையான தலைப்புகளில் அவர்களின் ஓவியங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்க வேண்டுமா? www.Imfpa.co.in என்ற இணையதளத்துக்கு வாங்க.

சுட்டி ஸ்டார்ஸ் !

  உனக்குப் பின்...

பாலைவனத்தில் ஒருவர் சென்றுகொண்டு இருந்தார். தண்ணீர்த் தாகம் வாட்டி எடுத்தது.  அப்போது தூரத்தில் ஓர் குடிசை தெரிந்தது. ஆவலுடன் அங்கே சென்றார். ஆனால், அந்த வீட்டில் யாரும் இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தார். சிறிது தூரத்தில் ஒரு மரம். அதன் அடியில் ஓர் அடிகுழாயும் பக்கத்தில் ஒரு பெரிய தண்ணீர் ஜாடியும் இருந்தது. ஜாடி நிறையத் தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அவசரமாகக் குடிக்கச் சென்றார். அப்போதுதான் மரத்தில் தொங்கிய ஒரு வாசகத்தைக் கண்டார்.

'அடிகுழாயில் உடனே தண்ணீர் வராது.  ஜாடியில் உள்ள நீரைவிட்டு, அடிகுழாயை அடித்து, அந்த நீரை நீங்கள் குடியுங்கள். பிறகு ஒரு ஜாடி நீரைப் பிடித்துவையுங்கள். அப்படிச் செய்வதால், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் நீர் அருந்த முடியும்’ என்று எழுதி இருந்தது. அவரும் அவ்வாறே செய்தார். மனநிறைவுடன் சென்றார்.

சுட்டி ஸ்டார்ஸ் !

 இப்படிக்கு இவர்கள் !

தனது 13-ஆவது வயதில் வேலை தேடி லண்டன் நகருக்குப் போனான் ஓர் இளைஞன். அங்கே மாமிசம் விற்கும் கடையில் எடுபிடியாக இருந்தான். பிறகு, நாடக அரங்கில் நாடகம் பார்க்க வருகிறவர்களின் குதிரைகளைப் பாதுகாக்கும் காவல்காரனாகப் பொறுப்பை மேற்கொண்டான். இவ்வாறு பல பணிகளைச் செய்த இளைஞன்தான் பிற்காலத்தில் உலகத்தையே தன் வசம் இழுத்த ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர்.

சுட்டி ஸ்டார்ஸ் !

இளமையில் டப்ளின் நகரத்தில் ஒரு ஜமீன்தாரிடம் மாதம் 18 ஷில்லிங் சம்பளத்துக்குக் கணக்கராகப் பணியாற்றியவர்தான், பின்னால் உலகப் புகழ்பெற்ற பல நாடகங்களைத் தந்த அறிஞர் பெர்னாட்ஷா.

இளமையில் வறுமை காரணமாக செருப்புக் கடையில் வேலை, மூட்டை தூக்கும் வேலை, துறைமுக வேலை, நாடகக் கம்பெனியில் நடிப்பு, என அவர் செய்யாத வேலையே கிடையாது. அவர்தான் 'தாய்’ என்னும் நாவல் மூலமாக உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி.

சுட்டி ஸ்டார்ஸ் !

  இயற்கை விநோதம் !

சுட்டி ஸ்டார்ஸ் !

 யோஸ்மைட் தேசியப் பூங்கா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இங்கே இருக்கும் அருவிக்குக் 'குதிரை வால் அருவி’ என்று பெயர். மலை முகட்டில் இருந்து  நேர்கோடாகத் தண்ணீர் தரையில் விழும். பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இரண்டே இரண்டு வாரங்களுக்கு சூரியன் மிகச் சரியாக, இந்த அருவியின் தலைப் பக்கமாக அஸ்தமன நேரத்தில் வரும். அப்போது, சிவப்பான சூரியக் கதிர்கள் பட்டு அருவி செந்நிறமாக மாறும். ஏதோ எரிமலை நெருப்புக் குழம்பு பொங்கி வழிவதுபோல் தோன்றும். இரண்டே நிமிடங்களில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிடும். வானம் தெளிவாக இருந்து, அருவியில் தண்ணீர் கொட்டினால்தான் இந்தக் காட்சி சாத்தியம். இதைப் படம் பிடிக்க உலகம் முழுவதிலும் இருந்து புகைப்படக்காரர்கள் வந்து தவம் கிடப்பார்கள்.

சுட்டி ஸ்டார்ஸ் !

உயரமான கோபுரம் !

சுட்டி ஸ்டார்ஸ் !

ஜப்பான் நாட்டில் சுமிடா (sumida)என்ற இடத்தில் கட்டப்பட்டு உள்ள 'டோக்கியோ ஸ்கை ட்ரீ’ (tokyo sky tree) என்ற உலகின் மிக உயரமான கோபுரம், மே 22 -ஆம் தேதி திறக்கப்பட்டது. தரையில் இருந்து 634 மீட்டர் உயரம் உடைய இந்தக் கோபுரத்தைக் கட்டும் பணி 2008-ல் தொடங்கப்பட்டு பிப்ரவரி 2012-ல் நிறைவு பெற்றது. 450 மீட்டர் உயரத்தில் 445-ஆவது தளத்தில் உள்ள டெம்போ கேலரியாவில் இருந்து 450-ஆவது தளம் வரை கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட ட்யூப் போன்ற அமைப்பின் வழியாக நடந்து செல்லும்போது வானத்தில் நடப்பது போன்ற பரவச உணர்வை ஏற்படுத்தும்.

இங்கு ரெஸ்ட்டாரென்ட், ஷாப்பிங் மால் என எல்லாம் உண்டு. இந்த டவரில் இருந்து ஜப்பான் நாட்டின் டி.வி. மற்றும் ரேடியோக்களின் தரை வழி ஒளிபரப்பும் நடைபெறுகின்றது.

சுட்டி ஸ்டார்ஸ் !

கற்றுது கையளவு !

ஒரு மன்னர் நிறையப் படிக்கக்கூடியவர். அண்டை நாட்டு அரசர்களிலேயே தான்தான் அதிகம் படித்தவன், பெரிய அறிவாளி என்று பெயர் எடுக்கும் ஆசை அவருக்குத் தோன்றியது.

உடனே அமைச்சரவையைக் கூட்டினார். தன்னுடைய ஆசையைத் தெரியப்படுத்தினார். ''அரசே! நமது நூலகத் தில் உலகக் காவியங்களும் தத்துவ நூல்களும் இல்லை. அவற்றைச் சேகரிக்க ஒரு தனிக் குழுவை அமைத்து ஆட்களை அனுப்ப வேண்டும்'' என்றார் ஒரு அமைச்சர்.

சுட்டி ஸ்டார்ஸ் !

''அதற்கு என்ன? நூல்களைச் சேகரிக்க ஆட்களை அனுப்புங்கள். பணி முடிந்ததும் தொடர்புகொள்ளுங்கள்'' என்றார் மன்னர்.

வருடங்கள் உருண்டோடின. புத்தகம் சேகரிக்கச் சென்றவர்கள் நாடு திரும்பிய செய்தியைக் கேட்டு ஆசையோடு நூலகத்துக்கு வந்தார் மன்னர். மாமலைபோல் குவிந்து இருந்த நூல்களைக் கண்டார். ''அடடா... இவை அனைத்தையும் படிக்க ஒரு யுகம் ஆகுமே'' என்றார்.

''மன்னா! நீங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து படிக்கத் தொடங்கி இருந்தாலும் உங்களுடைய எண்ணம் இதுவாகவே இருக்கும். ஏனெனில், கற்றது கையளவு கல்லாதது உலக அளவு'' என்றார் அமைச்சர்.

மன்னரின் ஆணவம் நீங்கியது.

சுட்டி ஸ்டார்ஸ் !

நோ நட்சத்திரம் ! 

சுட்டி ஸ்டார்ஸ் !

சமீபத்தில் 3D வடிவில் வந்த டைட்டானிக் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். முந்தைய படத்தையும் இதையும் நுணுக்கமாகப் பார்த்தவர்களுக்கு ஒரு வித்தியாசம் தெரிந்து இருக்கும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 15-ஆம் தேதியில் அதிகாலை 4.20 மணி அளவில் கடலில் மூழ்கியது. அந்த நேரத்தில் நட்சத்திரங்கள் வானில் தெரியாது. ஆனால், ஜேம்ஸ் கேமரூன் தனது டைட்டானிக் படத்தில் நடசத்திரங்கள் இருப்பதைப் போல் காண்பித்து இருப்பார். இதை ஒரு விஞ்ஞானி ஜேம்ஸ் கேமரூனுக்குச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். டைட்டானிக்கை 3D ஆக மாற்றியபோது கிராஃபிக்ஸில் வானில் இருந்த நட்சத்திரங்களை அழித்துவிட்டார் கேமரூன்.

சுட்டி ஸ்டார்ஸ் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு