Published:Updated:

அவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் !

படங்கள் : ஏ.சிதம்பரம்கே.ஆர்.ராஜமாணிக்கம், இ.கார்த்திகேயன்

##~##

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் உள்ள மாளவியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் பக்கமாக அன்று போனவர்கள் எல்லோரும் 'அட’ என ஆச்சரியத்தோடு புன்னகைத்தார்கள். காரணம் குட்டிக் குட்டி  புத்தர்கள்!

''ஏலே, அங்க என்ன நடக்கு? ஸ்கூலுதான் லீவு விட்டாச்சே...'' என்று ஒரு பெரியவர் வழிமறித்துக் கேட்டார். குட்டிப் புத்தருடன் வந்த ஒரு அப்பா, அந்தப் பெரியவருக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்க, ''இது என்னலே பொம்பளைப் புள்ள மாதிரி தலையில கொண்டை போட்டிருக்கே... காவி கட்டி இருக்கே... என்ன முருகர் வேஷமா?'' என்று பெரியவர் வியப்பாகக் கேட்க, ''உங்க முருகர் இப்புடித்தான் இருப்பாரா? காது முருகருக்கு இம்பாந்தண்டி இருக்குமா? இது, புத்தர் வேஷம்'' என்று சொல்லிச் சிரித்தான் குட்டிப் புத்தன். தாத்தா வுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் !

பள்ளிக்குள் சிறுவர்கள் பலரைப் புத்தர்களாய் மாற்றும் முயற்சியில் ஆசிரியைகள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். கூந்தலை வாரிக்கட்டி, வட்டமாய் உச்சியில் நிறுத்தி, மெல்லிய வலைப் பின்னலைப் போட்டார்கள். இடுப்புக்கும் தோளுக்கும் காவி உடுத்தியதும் புத்தரின் தோற்றம் தெரிய ஆரம்பித்தது. அதற்குள் ஒரு சுட்டி, எனக்கு லிப்ஸ்டிக் வேண்டும் என்று அழ, அவனைச் சமாதானப்படுத்த முடியாமல் ஒரு மிஸ் அல்லாட, அதைக் கண்ட அவன் அம்மா ஒடிவந்து, ''புத்தர் லிஃப்ஸ்டிக் போட மாட்டாருயா. நீ ஆம்பளையாச்சே... கல்ச்சுரல் புரோக்கிராம்ல பொண்ணு வேஷம் போட்ட ஞாபகம் வந்துருச்சு எங்க அய்யாவுக்கு...'' என்றதும் அங்கே இருந்தவர்கள் சிரித்தனர்.

பிறகு, புத்தருக்கு இருப்பதைப்போல் வளத்தியான  காதுகளுக்காக ஒட்டுக் காதுகளை வைத்தார்கள்.அவ்வளவுதான்... அசல் புத்தர்களாகவே அனைவரும் மாறிவிட்டனர். அடுத்த நிமிடம் நடந்ததுதான் பெரிய காமெடி. ''மிஸ்... மிஸ், அவன் என் காதைப் பிடிச்சி பலூன் ஊதுறான் மிஸ்.'' என்று ஒரு சுட்டி புகார் பண்ண, பள்ளி வளாகமே சிரிப்பால் அதிர்ந்தது.

அவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் !

ஒரு புத்தர், பபுள்கம்மை மென்று ஃபுட்பால் அளவுக்கு பெரிய்ய்ய பலூன் ஊதிக்கொண்டு இருந்தான். ஒரு மிஸ், ''அதைக் கொடுடா'' என்று அவனிடம் நெருங்கியபோது, பலூனை அந்த புத்தர் இன்னும் பெரிதாக ஊத, அது உடைந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவன் அதை முகத்தில் இருந்து எடுக்க முடியாமல் சிரமப்பட, அந்த நேரம் காது போச்சு என்று புகார் கொடுத்த புத்தர் கை தட்டிச் சிரிக்க, சில மிஸ்கள் செல்லமாய்த் திட்ட, சில மிஸ்கள் புதிய காது செய்யும் முயற்சியில் இறங்க... அந்த இடமே அதகளம் ஆனது.

''எல்லாரும் புத்தர் வேஷம் போட்டதாலோ என்னவோ, இன்னிக்குக் கொஞ்சம் கூடுதலான அமைதியா இருக்காங்க. இல்லைனா ரொம்பச் சேட்டை செய்வாங்க'' என்றார் தாளாளர் வேலு. அப்போது, ''வழக்கமா லஞ்ச் சாப்பிடுற நேரம் தாண்டிருச்சு'' என்று பிரின்ஸிபால் மேடம் சொன்னதும், ''எல்லோருக்கும் பிஸ்கட், கூல்டிரிங்ஸ் கொடுங்க'' என்றார் தாளாளர். ''வேண்டாம், கோயிலுக்குப் போவோம்'' என்று குட்டீஸ் கோரஸாகச் சொன்னது ஆச்சர்யம். எல்லோரும் ஸ்நாக்ஸ் பிரேக் எடுத்துக்கொண்ட பிறகே, ஆதிநாதர் கோயிலுக்குப் புறப்பட்டனர்.

அவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் !

கோயிலுக்குள் சென்றதும், குறுகிய வழியின் வழியாக மேலே கோயிலின் விமான தளத்துக்குப் போனார்கள். இரண்டாய்ப் பிளவுபட்டுக் கிடந்த புளிய மரத்தைப் பற்றி ஒரு புத்தர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கோயில் அர்ச்சகர் ''இது பழமையான மரம். இது, பூக்கும்... காய்க்கும்... ஆனால், பழுக்காது. இதற்கு 'உறங்காப் புளி’ என்று பெயர்'' என்றார். அதோடு, நம்மாழ்வார் குழந்தையாக இருக்கும் போது தவழ்ந்துவந்து தங்கி இருந்ததாகவும் சொன்னார்.

அப்போது ஒரு புத்தர், ''நான் இதுக்கு உள்ளே போகட்டுமா?'' என்று கேட்க, ''ரொம்ப மெனக்கட்டு பெர்மிஷன் வாங்கி இருக்கோம்யா... வாங்க வந்த வழியே போயிருவோம்'' என்றார் தாளாளர். தரைத் தளத்துக்கு வந்ததும், ''ஹாய்... யானை, யானை'' என்று புத்தர்கள் யானையிடம் ஓடினர். தும்பிக்கையை ஆட்டியபடி அசைந்துகொண்டு நின்றது. யானைப் பாகனிடம், 'யானையின் பெயர் என்ன? என்ன சாப்பிடும்?’ என்று புத்தர்கள் கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு புத்தர் , ''இது ஆணா? பொண்ணா?'' என்றார். அதற்கு இன்னொரு புத்தர், ''இதுக்கு தந்தம் இல்லை. அதனால  பொண்ணுதான்'' என்றார் புத்திசாலியாய்.  

அவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் !

புத்தர்கள் எல்லோரும் சற்றுக் களைப்பாறுவ தற்காக அங்கே உள்ள மண்டபத்தில் அமர்ந்தனர். அப்போது, எல்லா புத்தர்களும் தியான நிலையில் அமர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களை வியக்கவைத்தனர். குட்டிக் குட்டி புத்தர்களைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தனர். ஒரு புத்தர், கோயில் அருகே வந்த ஓர் ஆட்டுக்கு வாழைப்பழம் தின்னக்கொடுத்து மகிழ்ந்தார். அறிவுக்கு உகந்த கருத்துக் களைக் கற்பித்து, மனிதர்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றச் சிந்தித்த புத்தரை நினைவுகூர்வோம்... மன நிறைவு பெறுவோம்.

  புத்தர்...

'ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று போதித்து, தன் வாழ்க்கையிலும் ஆசைகளைத் துறந்தவர் புத்தர். நேபாளத்தில் உள்ள லும்பினி (கபிலவஸ்து) என்ற இடத்தில் கி.மு. 563-ல் மே மாதத்தின் பௌர்ணமி நாளில் சுச்சாதனர் - மாயா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு 16-வது வயதில் மணம் முடிக்கப்பட்டது. செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்தததால் இன்ப நலன்களில் குறைவில்லை. எனினும், மனதில் எப்போதும் அதிருப்தி இருந்தது.  

மனிதர்களுள் பலர் வறுமையில் வாடுவதையும், நோய்களால் துன்புற்று இறப்பதையும் நேரில் கண்டு வேதனை அடைந்தார். தனது 29-வது வயதில் மனைவி யசோதரை, மகன் ராகுலன் உள்ளிட்ட உறவுகளையும் எண்ணற்ற உடைமைகளையும் துறந்து, அரண்மனையை விட்டு வெளியேறினார்.

பின்னர் நீண்ட காலம் சுற்றித் திரிந்தவர் தனது 35-வது வயதில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா எனும் இடத்துக்கு வந்தார். அங்கே போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி மாளவியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, 1952-ல் வித்யாபாரதி கல்வி அமைப்பினால் தொடங்கப்பட்டது. தேசிய தெய்வீகச் சிந்தனைகளோடு முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்குவது இந்தப் பள்ளியின் நோக்கம்.

பாரதிய கல்விச் சித்தாந்தத்தின் அடிப்படையில் நவீன கல்வியைப் புகட்டுவதில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. சமஸ்கிருதம், சங்கீதம், உடற்பயிற்சி, நீதி போதனை, யோகா ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. ''எங்கள் மாணவ மாணவிகள் பள்ளிக்குப் புறப்படும் முன் பெற்றோரை வணங்கிவிட்டுதான் வருவார்கள். பள்ளியில் தினமும் திருவிளக்கு ஏற்றிவைத்து வழிபடுகிறோம். குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குகிறோம்'' என்கிறார் பள்ளியின் தாளாளர் எம்.வேலு.