பிரீமியம் ஸ்டோரி
பென் டிரைவ் !
பென் டிரைவ் !
##~##

நீரூற்றுக்களைப் பார்த்து இருப்பீர்கள்... சாக்லேட் நீரூற்றைப் பார்த்தது உண்டா? லண்டனில் இருக்கும் வெஸ்ட் ஃபீல்டு எனும் ஷாப்பிங் சென்டரில் மிகப் பெரிய சாக்லேட் நீரூற்று ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் உயரம் 30 அடி. அகலம் 23 அடி. ஆயிரக்கணக்கான கிலோ சாக்லேட்டை உருகவைத்து, 20 டன் க்ரீமைப் பைப்புகள் வழியாக அனுப்பித் தண்ணீர்போல் கொட்டவைக்கிறார்கள். அத்துடன் இன்னிசையும் ஒலித்துக் காதுகளுக்கு இனிமை சேர்க்கிறது. இதைத் தயார் செய்தது சாக்லேட் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான கேட்பரீஸ்.

பென் டிரைவ் !

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், விரைவில் இரவு நேரங்களிலும் ஒளிரப்போகிறது தாஜ்மஹால். இனி தாஜ்மஹாலை 24  மணி நேரமும் பார்த்துப் பரவசமடையலாம்.

தாஜ்மஹாலைச் சுற்றி 8 கிலோ மீட்டருக்கு சைக்கிளில் வலம் வருவதற்காகப் பாதை அமைப்பது, யமுனா நதியில் உலா வந்தபடி அன்பின் சின்னத்தை ரசிக்க படகுப் போக்குவரத்து வசதியைச் செய்வது மற்றும் ஒட்டகச் சவாரிக்கான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாகும்.

தாஜ்மஹாலைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் துணைபுரியம் பசுமைப் பூங்காவை அமைக்கவும் திட்டம் ரெடி!

பென் டிரைவ் !

குக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைச் செயல்வழிக் கல்வி அளிக்கும் திட்டம், குஜராத்தில் உள்ள சுரேந்திர நகரில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அரசு நடத்தும் அங்கன்வாடிப் பள்ளி களில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுகிறது.

'சிசேம் ஒர்க் ஷாப் இந்தியா’ என்ற அமைப்பின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் கட்டமாக 150 அங்கன்வாடிப் பள்ளிகளில் செயல்படுத்தடுகிறது. ஒரு மொபைல் போனும் ஒரு புரொஜக்டரையும் வைத்து, மல்ட்டி மீடியா மூலம் குழந்தைகளுக்கான அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்படும். இதற்காக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படுமாம். சூப்பர்ல!

பென் டிரைவ் !

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வந்தர்களில் ஒருவரான கிளைவ் பாமர் முயற்சிகள் எடுத்துள்ளார். சீன அரசுக்குச் சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். இந்தக் கப்பல் தயாரிக்கும் பணி 2016-ல் முடிந்து கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்று கிளைவ் சொல்கிறார். வடிவமைப்பில் டைட்டானிக் கப்பலைப் போன்றே இருந்தாலும் இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு  பயணிகளைக் கவரும்வகையில் இந்தக் கப்பல் இருக்கும்.

பென் டிரைவ் !

ரெடிமேட் ஆடை விற்பனை நிறுவனமான 'குளோபல் தேசி’, கோடைகாலத் துணி ரகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில், சிறப்பான விஷயம்... ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இளம் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் உருவான ரெடிமேட் ஆடைகளையும் இடம் பெறச் செய்திருப்பதுதான்.

சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் 'அஸீமா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ், ரோஷினி, ரேஷ்மா மற்றும் ரூபினா ஆகியோர் உருவாக்கிய வண்ண குர்தாக்களும் டாப்ஸ்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறதாம்.

பென் டிரைவ் !

பூந்தொட்டிகளைப் பல்வேறு வடிவங்களில் பார்த்து இருப்பீர்கள்... அதில் உங்கள் முகமும் இருந்தால்? இதோ வந்துவிட்டது 'ஃபேஸ் பாட்ஸ்’.  கஜகஸ்தானைச் சேர்ந்த இகோர் மிடின் (மிரீஷீக்ஷீ விவீtவீஸீ) என்பவரின் ஐடியா தான் இது.

தனது போட்டோ ஸ்டூடியோவைப் பிரபலப்படுத்த நினைத்தார் மிடின். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரைத் தனது ஸ்டூடியோவுக்கு வரவைத்தார். சிரிப்பது, கோபப்படுவது, கேலி செய்வது எனப் பல்வேறு முகபாவங்களில் அவர்களை 'க்ளிக்’ செய்து, அந்த போட்டோக்களைப் பூந்தொட்டிகளில் ஒட்டினார். போட்டோ மீது தண்ணீர்படாமல் இருக்க பிளாஸ்டிக் ஷீட்டை மேலே ஒட்டிவிட்டார். இந்தப் பூந்தொட்டிகளை தனது ஸ்டுடியோ முன்பாக வைத்துவிட்டார். இதைப் பார்த்ததும் 'எங்களுக்கும் ஒரு ஃபேமிலி ஃபேஸ் பாட் பார்சல்’ என்று மிடின் ஸ்டுடியோ முன் கூட்டம் 'க்யூ’வில் நிற்கிறது.

பென் டிரைவ் !

முதல் முறையாக காமிக்ஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்து இருக்கிறார், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்!

சூப்பர் ஹீரோக்களுக்கான எந்த அம்சங்களும் இல்லை என்றாலும், காமிக்ஸ் வடிவிலான பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாகச் சுட்டிகளை ஈர்க்கும். திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக்கொண்டு, உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலை பெறும் அளவுக்கு வாழ்வில் உயர்ந்த பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை மகத்தானது.

கலர்ஃபுல்லான காமிக்ஸ் படங்களால் பில் கேட்ஸின் வாழ்க்கையை ஆங்கிலத்தில் சொல்லும் புத்தகத்துக்கு 'பில் கேட்ஸ்: கோ-ஃபவுண்டர் ஆஃப் மைக்ரோசாஃப்ட்’ (Bill Gates: Co-founder of Microsoft) எனத் தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் 'ப்ளு வாட்டர்’ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் மறைந்த ஆப்பிள் சி.இ.ஓ. ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரின் வாழ்க்கையைக் காமிக்ஸாக ஏற்கெனவே வெளியிட்டு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு