Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

சுட்டிகளுக்குக் கதை சொல்கிறார் கோபிநாத் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

'நீங்களா? நானா? பார்த்துடுவோம் ஒரு கை’ என்பது போல் களைகட்டியது சுட்டிகளுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சி. இந்த முறை கதை சொல்ல வந்தவர், 'நீயா? நானா?’ கோபிநாத்.

''வணக்கம் ஐயா'' என்று இசைக் குரலில் வரவேற்றார்கள் சுட்டிகள்.  

''நான் வந்ததும் இப்படி வணக்கம் சொல்லணும்னு யாரோ சொல்லிக்கொடுத்தாங்கதானே?'' என்று கோபிநாத் அங்கிள் கேட்க, ''கரெக்ட் அங்கிள். லட்சுமி மிஸ்தான் சொன்னாங்க'' என்று சுவாமிநாதன் ரகசியத்தைப் போட்டு உடைத்ததும் எல்லோரும் சிரித்தார்கள்.

''பரவாயில்லை. அது நல்ல பண்பாடுதான். இருந்தாலும் எல்லா விஷயத்தையும் டீச்சர், அம்மா - அப்பா சொல்றதையே செய்யாமல், நீங்களும் சிந்திச்சுச் செயல்படணும். சரி, என்னை உங்களுக்குத் தெரியும்தானே?'' என்று கேட்டார்.

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

''நல்லாத் தெரியும் அங்கிள்... உங்க புரோகிராமைப் பார்த்து இருக்கோம்'' என்றார்கள்.

''ஆனா, உங்களைப்பத்தி எனக்குத் தெரியாதே... தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். இது என்ன இடம்? நீங்க இங்கே என்ன பண்றீங்க?'' என்று கேட்டார் கோபிநாத்.

சிறுவர்களுக்கு நமது பாரம்பரியக் கலைகளான சிலம்பு, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல வகையான கலைப் பயிற்சிகளை, 'ஜவஹர் சிறுவர் மன்றம்’ என்ற பெயரில் நமது தமிழ்நாடு அரசு நடத்திவருகிறது. அதில், கோடைக் காலப் பயிற்சிக்கு வந்தவர்கள்தான் தாங்கள் என்பதைச் சொன்னதும் ''சபாஷ்! முதல்ல உங்கள் திறமைகளைப் பார்க்கிறேன். அப்புறம் கதை சொல்றேன்'' என்றார் கோபிநாத் அங்கிள்.

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

முதலில் 12 பேர்கொண்ட சிலம்பாட்டச் சுட்டிகள் களம் இறங்கினார்கள். அவர்களின் சிலம்புகள் காற்றைக் கிழித்துக்கொண்டு நாலா திசைகளிலும் சுழன்றன. இதில் கோபிநாத் அங்கிளை 'வாவ்’ என சொல்லவைத்தவள் சிவரஞ்சனி. சிலம்பத்தை அடுத்து ஒரு டம்ளர் நிறைய கூல்டிரிங்ஸ் ஊற்றினாள். அதைத் தராசு போன்று மூன்று முனைகளிலும் கயிறுகள் கட்டிய ஒரு தட்டில் வைத்தாள். அடுத்த நொடி, கயிற்றைப் பிடித்துக்கொண்டு, தட்டைத் தலைக்கு மேல் சுழற்ற ஆரம்பித்தாள். முன் பின் சாய்ந்தும், தரையில் ஒரு கையை ஊன்றியும் சிலம்பம் போல் சுற்றினாள். முடிவில் ஒரு சொட்டுகூட சிந்தாமல் கூல்ரிடிங்ஸ் டம்ளரை கோபிநாத் அங்கிளுக்குக் கொடுத்தாள். அந்த இடமே அப்ளாஸால் அதிர்ந்தது.

இதே போல் மான் கொம்பு சுற்றுவது, சுருள் கம்பி சாகஸம்,  தீக் கம்பு சாகசம், பொய்க்கால் குதிரை, பரதம் எனப் பலரும் அசத்தினார்கள்.

''அடேங்கப்பா... உங்கள் திறமைகளைப் பார்த்த பிறகு எனக்குப் பயமா இருக்கே... உங்களோட அசத்தல்களுக்கு ஓரளவுக்காவது ஈடுகொடுக்கிற மாதிரி நான் சொல்ற கதை இருக்கணுமே... சரி, முயற்சி பண்றேன். உங்களுக்கு என்ன மாதிரி கதை பிடிக்கும்?'' என்று கேட்டார்.

''முனி பார்ட் த்ரீ மாதிரி பேய்க் கதை சொல்லுங்க'' என்று பீதியைக் கிளப்பினார்கள் ஒரு சிலர். வேறு சிலரோ ஜேம்ஸ் பாண்ட் டைப் ஆக்ஷனைக் கேட்டார்கள்.

''பேய்க் கதை, ஆக்ஷன், அதிரடி இதை எல்லாம் சினிமாவிலும் டி.வி.யிலும்தான் பார்க்கிறீங்களே... நான் வேற மாதிரி சொல்றேன். நம் கதையோட ஹீரோ பேரு பரத். இந்தப் பேர்ல யாராவது இங்கே இருக்கீங்களா?'' என்று கேட்டதும், விகாஷ§ம் வசந்தும் கை நீட்டி, ''இதோ இருக்கான்'' என்று அங்கிருந்த சிறுவனைக் காட்டினார்கள்.

''ஹலோ ஹீரோ சார், இங்கே வாங்க. என்ன படிக்கிறீங்க?'' என்று அவனை அழைத்துத் தனக்கு அருகே உட்காரவைத்துகொண்டார். ''யூ.கே.ஜி'' என்றான் நம்ம பரத்.

''இந்தக் கதையில் வர்ற பரத், எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவனோட அப்பா ஒரு பிரபல நிறுவனத்தின் பிஸ்கெட்டுகளை மொத்தமாக வாங்கிச் சிறிய கடைகளுக்குக் கொடுக்கும் ஏஜென்ட்''  என்றதும், ''அவரோட பேரு என்ன அங்கிள்'' என்று கேட்டான் ஸ்ரீராம்.

''அவருக்கும் பேர் வெச்சுருவோம். அவரோட பேரு சுப்பிரமணி. மார்க்கெட் பகுதியில் அவரோட ஆபீஸ் இருக்கு. ரொம்பச் சின்ன ஆபீஸ்தான். வர்றவங்க வெயிட் பண்ண ஒரு ரிசப்ஷன், ரெண்டு தனி அறைகள். ஒரு ரூமில் பரத் அப்பா இருப்பார். இன்னொரு ரூமில் ரெண்டு கம்ப்யூட்டர்கள் இருக்கும். சரக்குகள் பற்றிய விவரங்களை எழுத, 50 வயசுல ஒருத்தர் இருப்பார். அவரைச் சுந்தரம் மாமான்னு சொல்வாங்க. அவரைத் தவிர பாலாஜி, வெங்கட் இன்னும் ரெண்டு பேர். அவங்க எப்பவும் பணம் வசூலிக்க வெளியே சுத்திட்டு இருப்பாங்க. ஸ்கூல் லீவுவிட்டா பரத், அங்கே போய் கம்ப்யூட்டர்ல கேம் விளையாடுவான்''

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

''நான்கூட நல்லா கேம் விளையாடுவேன் அங்கிள்'' என்றாள் பூவிழி.

''குட்! ஆனா, கம்ப்யூட்டர்ல கேம் விளையாடுறதை ரொம்ப லிமிட்டா வெச்சுக்கணும். சரி, நாம கதைக்கு வருவோம். அப்படித்தான் அன்னிக்கும் கேம் விளையாடிட்டு இருந்தான் பரத். அப்பா  போனில் பேசிட்டு இருந்தார். 'வேணாம்... வேணாம். நீங்க அங்கேயே இருங்க. நான் உடனே ஆளை அனுப்புறேன்’னு சொல்லிட்டு, 'பரத், இங்கே வா. ஒரு அட்ரஸையும் செல் நம்பரையும் தர்றேன். நீ உடனே அடையாறுக்குப் போகணும். ஒருத்தர் பத்தாயிரம் ரூபாய்  தருவார். வாங்கிக்கிட்டு வா’னு சொன்னார். பரத் ரொம்பக் குஷியோடு தலையாட்டினான்'' என்ற கோபிநாத், நம்ம பரத் பக்கம் திரும்பினார்.

''ஏன் பரத், உன்னை அந்த மாதிரி அனுப்பினா, வாங்கிட்டு வருவியா?'' என்று கேட்க, அவன் 'ஓ’ என உற்சாகமாகத் தலையாட்டினான். ''வெரிகுட் நீயும் ஹீரோதான்'' என்று சொல்லிவிட்டு கதையைத் தொடர்ந்தார்.

''பரத் அப்பா அப்படிச் சொன்னதும் பக்கத்துல இருந்த சுந்தரம் மாமா, ''சார் தொகை பெருசா இருக்கே. தம்பியை அனுப்பணுமா?''னு தயங்கினார். அதுக்கு அப்பா, ''பாலாஜியும் வெங்கட்டும் வேற ஏரியாவுல இருக்காங்க. அவங்க போக முடியாது. இவன் எட்டாவது படிக்கிறான். இப்போ இருந்தே இந்த மாதிரி விஷயங்களைச் செய்யட்டும். இந்த மதிய  நேரத்துல பஸ்சிலும் கூட்டம் இருக்காது. தைரியமாப் போய்ட்டு வா'' என்று பரத்தைத் தட்டிக்கொடுத்தார்.

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

அப்படியும் சுந்தரம் மாமா, ''பஸ்ல கூட்டம் இல்லைன்னாலும் எச்சரிக்கையா இருக்கணும் பரத். எவனாவது நைஸாப் பின்னாடியே வந்து பணத்தை அடிச்சுருவான், ஜாக்கிரதை''னு எச்சரித்தார். பரத் கிளம்பினான். அடையாறுக்குப் போய், அப்பா கொடுத்த அட்ரஸைத் தேடினான். பஸ் ஸ்டாப்புக்குப் பக்கதிலேதான் இருந்துச்சு. ஒரு கடை வாசலில் காத்திருந்த அவரிடம் போய்ப் பேசினான். ''நான் நாளைக்கு வந்து தர்றேன்னு சொல்லியும் உன் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை. இந்தா சரியா இருக்கானு எண்ணிப் பார்த்துக்க''னு பணத்தை நீட்டினார். எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகள். பரத் ஒரு தடவைக்குப் ப்தில் இரண்டு முறை சரிபார்த்துக்கிட்டான்.  பணத்தைப் பேன்ட் பாக்கெட்டில் வெச்சுக்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு நடந்தான். அவ்வளவு நேரம் உற்சாகமாகவும் தைரியமாகவும் இருந்தவனுக்கு திடீர்னு பயம் வந்துருச்சு. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?'' என்று கேட்டார் கோபிநாத் அங்கிள்.        

''யாராவது திருடிருவாங்கன்னு சுந்தரம் மாமா சொன்னாரே...'' என்றான் தக்ஷன்.

ஒரே ஒரு ஊரிலே...பரத் கொண்டு வந்த பத்தாயிரம் !

''கரெக்ட்! சுந்தரம் மாமா சொன்னது ஞாபகம் வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து பஸ் ஸ்டாப்பில் அவன் பக்கத்தில் வந்து நின்ற ஒருவனைப் பார்த்ததும் திக்னு ஆயிருச்சு. காரணம், கடை வாசலில் பரத் பணத்தை வாங்கினப்ப, இந்த ஆள் டீக் கடையில் நின்னு டீ குடிச்சுட்டு இருந்தான். கொஞ்சம் போலத் தாடியும் லேசா அழுக்கான டிரெஸ்ஸுமாக இருந்தான். 'ஆகா... நம்மகிட்ட பணம் இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு வந்து நிற்கிறானோ...’னு  நினைச்சான் பரத். இப்ப நீங்க எதிர்பார்த்த த்ரில்லிங் சீன் வந்துருச்சா? இனிமேதான் க்ளைமாக்ஸ்...'' என்று புன்னகைத்தபடி கதையைத் தொடர்ந்தார் கோபிநாத் அங்கிள்.

''பரத் போகவேண்டிய பஸ்ஸ¨ம் வந்துச்சு. அதில் ஏறி, ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தான். அந்தத் தாடியும் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அவ்வளவுதான், பரத்துக்கு வியர்க்க ஆரம்பிச்சது. 'அவசரப்பட்டு இந்த வேலையை ஒப்புக்கிட்டோமோ... இவனைப் பார்த்தாலே சந்தேகமா இருக்கு. அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற பஸ்ல போகலாமா? ஆனா, இவனும் கூடவே இறங்கிச் சட்டுனு பணத்தைப் பிடுங்கிட்டுப் போய்ட்டா என்ன செய்றது? சே... இனிமே ஆபீஸும் வேணாம்... கேம்ஸ¨ம் வேணாம். இப்போ மட்டும் பத்திரமாப் பணத்தோடு போய்ச் சேர்ந்தால் போதும்’னு  நினைச்சான். காற்று வேகமாக வீசியதில் கண்கள் சொக்கின. எவ்வளவோ கட்டுப்படுத்த நினைச்சும் முடியாமல் பரத் தூங்கிட்டான். திடீர்னு கண் முழிச்சுப் பார்த்தப்ப அவன் இறங்க வேண்டிய இடத்துக்குப் பக்கத்தில் வந்துட்டது தெரிஞ்சது. பேன்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். பணம் இல்லை'' என்று சொல்லி நிறுத்தினார் கோபிநாத்.

''அச்சச்சோ... நானா இருந்தா தூங்கியே இருக்க மாட்டேன். அந்தத் தாடிக்காரன்தானே திருடினான்?'' என்று கேட்டான் தினேஷ்.

''அப்படித்தான் பரத்தும் நினைச்சான். அப்போ அவன் தோளை யாரோ தொட்டாங்க. திரும்பிப் பார்த்தான். அந்தத் தாடி மனிதன்தான். 'இந்தா தம்பி, உன் பாக்கெட்டில் இருந்து விழுந்துச்சு. இவ்வளவு பணத்தை வெச்சுக்கிட்டு இப்படியாத் தூங்குவே. ஜாக்கிரதையா இருக்கணும்’னு சொன்னார். பரத்துக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. 'சே... நமக்குள் இருந்த அநாவசியமான பயத்தாலும் இவரோட தோற்றத்தைப் பார்த்தும் சந்தேகப்பட்டுவிட்டோமே’னு நினைச்சான். பஸ், அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் நின்னுச்சு. 'ஸாரி அங்கிள் ரொம்பத் தேங்க்ஸ்’னு சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பிச்சான்’ என்று சொல்லி இத்துடன் கதையை முடித்துகொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் கோபிநாத்'' என்று முடித்தார்.

எல்லோரும் கை தட்டினார்கள். ''சரி, இந்தக் கதையில் இருந்து என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?'' என்று கேட்டதும், ''ஒருத்தரோட உருவத்தைப் பார்த்துத் தப்பா நினைக்கக்கூடாது'' என்றாள் தீபிகா.

''சரியாச் சொன்னே. அவரைத் தப்பா நினைச்சது பரத்தோட தப்பு. இப்படித்தான் நாம் பெரும்பாலும் தோற்றத்தைப் பார்த்துத் தப்பா எடை போடுகிறோம். கெட்டவங்கன்னா இப்படித்தான் இருப்பாங்கன்னு ஒரு உருவத்தை வெச்சு இருக்கோம். அது ரொம்ப ரொம்பத் தப்பு. பார்க்க முரட்டுத் தோற்றமா இருக்கிறவங்களில் நல்லவங்களும் இருக்காங்க... டீசன்ட்டா டிரெஸ் பண்ணிக்கிட்டு ஸ்மார்ட்டா இருக்கிறவங்களில் கெட்டவங் களும் இருக்காங்க. அதனால அவசரப்பட்டு ஒருத்தரை சந்தேகமும் படக் கூடாது. நல்லவர்னு முழுசா நம்பிடவும் கூடாது'' என்றார் கோபிநாத் அங்கிள்.

''ஆரம்பத்துல கதை சொல்லப் பயமா இருக்குன்னு சொன்னீங்களே...நாங்க சிலம்பம் ஆடி அசத்தின மாதிரி நீங்களும் கதை சொல்லி அசத்திட்டீங்க அங்கிள்'' என்று பவானி சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதிப்பதைப் போல் மீண்டும் உற்சாகத்துடன் கைகளைத் தட்டினார்கள். கோபிநாத் அங்கிளின் முகத்தில் பூரிப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு