Published:Updated:

கிராண்ட் மாஸ்டர் ஆவதுதான் இலக்கு !

சரா

##~##

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் தக்கவைத்த அதேவேளையில், ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார், தமிழகத்தின் இளம் செஸ் வீரர் ஸ்ரீநாத் நாராயணன்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 18 வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்ரீநாத், பிளஸ் 2 முடித்துவிட்டுக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜூனியர் பிரிவு சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். அவருடன் பேசியபோது...

''செஸ் விளையாட்டைத் தேர்வுசெய்ததன் பின்னணி..?''

''ஐந்தாவது வயதில் செஸ் விளையாட்டின் அறிமுகம் கிடைத்தது. ஒரு முறை சம்மரில் மும்பைக்கு ரயிலில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது என் உறவினர்கள் செஸ் விளையாடிக்கொண்டு இந்தார்கள். அதைக் கவனிக்கத் தொடங்கினேன். செஸ் மீது ஈர்ப்பு வந்தது. சென்னைக்குத் திரும்பியதும் வீட்டில் அப்பாவுடனும் நண்பர்களுடனும் செஸ் விளையாட ஆரம்பித்தேன். என் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட அப்பா, என்னை சக்தி பிரபாகர் என்ற பயிற்சியாளரிடம் சேர்த்தார். அவரது பயிற்சிதான் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது.''

கிராண்ட் மாஸ்டர் ஆவதுதான் இலக்கு !

''மறக்க முடியாத வெற்றிகள்..?''

''2000-ல் எட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில செஸ் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றேன். 2004-ல் துபாயில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தைக் கைப்பற்றினேன். 2005-ல் பிரான்ஸின் பெல்ஃபோர்ட் நகரில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது மறக்க முடியாதது.''

''உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உடனான சந்திப்புகள்பற்றி...''

''என்னைப் போன்ற இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்போல் எவரும் இல்லை. பலமுறை சந்தித்து இருக்கிறேன். எந்த நிலையிலும் பதற்றப்படாமல் பாசிட்டிவ் எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.''

''உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் அனுபவம் எப்படி இருந்தது?''

கிராண்ட் மாஸ்டர் ஆவதுதான் இலக்கு !

''அந்தப் போட்டியின் தொடக்கச் சுற்றுகளில் எளிதாக ஜெயித்துவிட்டேன்.உஸ்பெகிஸ்தானின் ஓலெக் ஆர்டிமென்கோ உடன் மோதியது சவாலாக இருந்தது. ஏழாவது சுற்று வரை சாதக நிலை இருந்தது. எட்டாவது சுற்றில் எனக்குப் பின்னடைவு ஏற்பட்டது. கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், அதைச் சமாளித்து அந்தச் சுற்றில் வெற்றி பெற்றதுதான் திருப்புமுனையாக இருந்தது. சென்ற முறை ரன்னராக சென்னை திரும்பினேன். இந்த முறை எதிர்பார்த்தபடியே சாம்பியன் கனவு நிறைவேறியது.''

''அடுத்த இலக்கு என்ன?''

''கிராண்ட் மாஸ்டர் ஆவதுதான் என் இப்போதைய இலக்கு. ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 25 பாயின்ட்டுகள் உயர்ந்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான மூன்று நார்ம்ஸ்களில் ஒன்றைத் தாண்டிவிட்டேன். இப்போது எனது ரேட்டிங் 2,383. கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு 2,500 பாயின்ட்டுகளை எட்ட வேண்டும். என்னை விடத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள வீரர்களுடனும், கிராண்ட் மாஸ்டர்களுடன் மோதி வெற்றி பெற்றால்தான், கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை அடைய முடியும்.''

''கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்துகிறீர்கள்?''

''புனேவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பயிற்சியாளர் அபிஜித் குந்தேவின் வழிகாட்டுதல் கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது. செஸ் விளையாட்டைப் பொறுத்தவரையில், ஸ்பான்ஸர்ஷிப் மிகவும் முக்கியம். அந்த வகையில், எனது வளர்ச்சிக்கு யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. அப்பாவின் ஊக்கத்தால் முழுக் கவனத்தையும் மட்டுமே செலுத்திவருகிறேன். அடுத்த மாதம் ஐரோப்பியத் தொடர்களில் விளையாட உள்ளேன். அதில் என்னைவிட ரேட்டிங்கில் உயர்ந்தவர்களிடம் மோதும் வாய்ப்புக் கிடைக்கும். அது, எஞ்சியுள்ள இரண்டு நார்ம்ஸ்களைக் கடக்கத் துணைபுரியும். எப்படியும் ஒராண்டுக்குள் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது!''