Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

சா.வடிவரசு ஜெ.வேங்கடராஜ்

பெயர்: ஞா.வைரோஜினி
வகுப்பு: 9-ம் வகுப்பு,
பள்ளி: லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தண்டையார்பேட்டை.
விருது: தேசிய அளவிலான சப் ஜூனியர் குங்ஃபூ போட்டியில்

தங்கப் பதக்கம்.

##~##

தான் ஒரு வித்தியாசமான திறமைசாலியாக வரவேண்டும் என்பது வைரோஜினியின் இலக்கு. சென்னை, தண்டையார்பேட்டை லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர், குங்ஃபூ, ஊசு, தவுளு என வீரத்தை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலக்குகிறார்.

'ஒரு நாள் அப்பாகிட்ட 'நான் குங்ஃபூ கத்துக்கலாம்னு இருக்கேன் என்னை சேர்த்து விடுங்க’னு சொன்னேன். அவருக்கு செம கோவம் வந்துருச்சு. 'இது எல்லாம் உனக்கு எதுக்கு?’னு  திட்டினார். நான் விடலை. அம்மாகிட்ட அடம்பிடிச்சு சம்மதம் வாங்கிட்டேன். அம்மாவும் அப்பாவிடம் பேசி சமாதானம் பண்ணிட்டாங்க'' என்கிறார்.

''வைரோஜினிக்கு இதில்தான் ஆர்வம் அதிகம்னு புரிஞ்சதும் அவள் விருப்பப்படியே விட்டுட்டேன். அவளும் சாதிச்சுக் காட்டிட்டா' என்றார் அப்பா ஞானவடிவேல்.

ஸ்கூல் ஸ்டார் !

'எனக்கு ஓவியம் வரையவும் பிடிக்கும். நான் சின்ன வயசுல ஓவியம் வரைஞ்சிட்டே இருப்பேன். 5-ம் வகுப்புப் படிக்கும்போது உடம்பு சரியில்லாமப்போய் சளி அதிகமாகி வாட்டி எடுத்தது. அப்போ சிலர் நல்லா உடல் பயிற்சி செய்யணும்னு சொன்னாங்க. அப்படியே செய்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாஸ்டர் குங்ஃபூ சொல்லித் தருவதைப் பார்ப்பேன். நானும் கத்துக்கணும்னு ஆசைப்பட்டுச் சேர்ந்தேன்.

ஆரம்பத்தில் சின்னச் சின்னப் போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கினேன். இந்த வருட ஆரம்பத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் ஊசு, தவுளு ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றேன். தமிழகத்தில் இருந்து சப்-ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டு தமிழகத்துக்குப் பெருமை சேர்த்ததில் சந்தோஷம்'' என்கிறார் வைரோஜினி.

''இப்போது எல்லாம் வைரோஜியின் மாஸ்டர் தன்னிடம் கற்க வருகிற பலருக்கும் சொல்லித்தரும் பொறுப்பை வைரோஜியிடமே ஒப்படைத்து இருக்கிறார். ''மாஸ்டர் என் மீது வெச்சு இருக்கிற நம்பிக்கையை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்குத் தெரிஞ்சதை மத்தவங்களுக்குச் சொல்லித்தருவது பிடிச்சு இருக்கு. இதையே வருங்காலத்தில் பெருசா செய்யப்போறேன். குங்ஃபூவில் தேசிய அளவில் பரிசு வாங்கியதற்காக இந்த வருஷம் ஸ்கூலில் நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அப்போ நான் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்கிற வைரோஜினிக்கு பரதநாட்டியமும்  தெரியும்.

ஸ்கூல் ஸ்டார் !

அது மட்டுமா? ''தேவை இல்லை என்று அம்மா தூக்கிபோடுகிற பொருட்களைவைத்துக்  கைவினைப் பொருட்கள் செய்வேன். அதைப் பார்த்து அம்மா ரொம்ப சந்தோஷபடுவாங்க'' என்கிறார்.

'என் மகள் ஒவ்வொரு முறை போட்டிக்கு போகும்போதும் உற்சாகம் அதிகமாகி இருக்கும். தேசியப் போட்டியில் இரண்டு தங்கம் வென்றபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்றார் வைரோஜினி அம்மா கலாவதி.

''இது ஆரம்பம்தான் அங்கிள். இன்னும் இன்னும் சாதிக்கணும். உலக அளவில் இந்தியாவுக்குப் பல பரிசுகளை வாங்கித் தரணும். எனது ஓவ்வொரு வெற்றிக்குப் பின்னாடியும் இருக்கிற என் குடும்பத்துக்கு எல்லா வெற்றிகளையும் காணிக்கை ஆக்கணும்' என்கிறார் வைரோஜினி,  கனவுகளோடு.

உங்கள் பள்ளியிலும் இவரைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால், எங்களுக்கு எழுதுங்கள். அவரை அறிமுகப்படுத்த சுட்டி விகடன் தயாராக இருக்கிறது. அவரது பெயர், வகுப்பு, பள்ளி முதல்வர் மற்றும் முழு முகவரியுடன் செல் நம்பரையும் குறிப்பிடவும்.