Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ? - நோட்டுப் புத்தகம்

இரா.நடராசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வணக்கம் நண்பர்களே... நான்தான் நோட்டுப் புத்தகம் பேசுறேன். வருட ஆரம்பத்துல குண்டா இருக்கிற என்னை ராக்கெட் செய்யவும் தேவை இல்லாத எதையாவது எழுதவும் 'சரக் சரக்’ என  என்னிடம் இருந்து பேப்பர்களைக் கிழித்து என்னை ஒல்லி ஆக்கிடறீங்க. நான் எப்படி எல்லாம் தயார் ஆகி  வருகிறேன் என்று தெரிந்தால், இப்படி எல்லாம் செய்ய மாட்டீங்க. வாங்க சொல்றேன்.

முதலில் நான் மூங்கிலாகவும் மரப்பட்டையாகவும் காட்டில் இருந்தேன். அங்கே இருந்து வெட்டி, டன் டன்னாக லாரியில் ஏற்றி காகிதம் செய்யும் தொழிற்சாலைக்கு வந்தேன்.

அங்கே ஆரம்பத்தில் செதில் செதிலாய் மரப்பட்டையைச் சீவி, பசைபோன்ற வேதிக் கலவையோடும் கொஞ்சம் சுண்ணாம்போடும் சேர்த்து மாவு மாதிரி அரைத்தார்கள். நீண்ட நீண்ட அச்சுகளில் ஊற்றினார்கள். அப்போது நான் 173 டிகிரி செல்சியஸ்  வெப்பத்தைத் தாங்கினேன்.

அப்படி அச்சில் சதுரமாய் வார்த்த என்னை ராட்சச பிளேடுகள் மூலம் சன்னமாய்ச் சீவி அட்டையாகவும் பேப்பராகவும் செய்தார்கள். ரீம்களில் என்னை டன் டன்னாகச் சுற்றும் வேலை அடுத்த கட்டமாக நடந்தது. அங்கே இருந்து கத்தரிக்கும் பகுதியான கட் மற்றும் சைஸிங் பகுதிக்கு அனுப்பி, நோட்டுப் புத்தக வடிவுக்கு மாற்றினார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ? - நோட்டுப் புத்தகம்

இங்கு தேவையான அளவுக்கு வெட்டி என்னைத் தனித்தனித் தாள்களாகக் கோடுகள் போடும் பிரிவுக்கு அனுப்புவார்கள். அங்கு வெள்ளையாக இருக்கும் என் மீது ரெட்டை வரி, நாலு வரி, கணித நோட்டு, கையெழுத்துப் பயிற்சி நோட்டு, கட்டுரை நோட்டு என அந்தந்த நோட்டுக்குத் தேவையான கோடுகளை ரூலர் இயந்திரத்தின் மூலம் போடுவார்கள்.  

சிறியது, நடு அளவு, நீண்டது என மூன்று வகை அளவுகளில் நான் தயாராகிறேன்.

அடுத்தது எனது மேலட்டை, அது தனியாகத் தயாராகிறது. பெரும்பாலும்  உபயோகப்படுத்தி தூக்கி எறியப்பட்ட பழைய பேப்பரை மீண்டும் மறு சுழற்சி முறையில் உற்பத்தி செய்து, அட்டையைத் தயாரிக்கிறார்கள். அட்டைக்கு மேலே ஒட்டக் கலர் கலராய்ப் பளபளப்புக் காகிதம் அச்சகத்தில்  தயாராக இருக்கும்.

அடுத்து பைண்டிங் பிரிவுக்கு அனுப்பினார்கள். இங்கேதான் என்னை சென்டர் பின், தையல் என  விதவிதமாக பைண்டிங் செய்வார்கள்.

40 பக்கம், 60 பக்கம் என்பதுதான் ஆரம்ப அளவை. பிறகு முக்கால் கொயர் (80 பக்கம்) ஒரு கொயர் (96 பக்கம்) இரண்டு கொயர் (192 பக்கம்) என எனது சைஸ் தீர்மானிக்கப்படுகிறது. தைத்துத் தரும் இயந்திரங்களை இயக்க ஏராளமான தொழிலாளர்கள் இந்தப் பிரிவில் உழைக்கிறார்கள்.

பிறகு கடைகள், பள்ளிகள் வழியே உங்கள் புத்தகப் பைக்கு வந்து சேர்கிறேன்.

இப்போது தெரிந்ததா என்னைத் தயாரிக்க எவ்வளவு பேர் எங்கே எல்லாம் கடினமாய் உழைக்கிறார்கள் என்று என்னை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன் படுத்தினால் வீட்டுக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு