Published:Updated:

மனசு வெச்சா ஜெயிக்கலாம் !

ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''கம்ப்யூட்டர் வாங்கித் தராம படி படினு சொல்லிட்டே இருக்கீங்களே எப்படிப் படிக்கிறது?''

''நான் பார்க்கர் பென் கேட்டேனே? அது இல்லாம எப்படி எக்ஸாம் எழுதுறது?''

''எனக்கு டியூஷன் வெச்சாத்தான் மார்க் வாங்க முடியும்!'' இப்படிப் பல வீடுகளில் பெற்றோரிடம் சண்டை போடுவோம்.  ''படிக்கணும்னு மனசுவெச்சா பிளாட்ஃபார்மில் இருந்துகூட படிக்கலாம்'' என்று அப்பாவிடம் இருந்து காட்டமாகப் பதில் வரும்.

அது உண்மைதாங்க... மனதுவைத்தால் எந்தச் சூழலிலும் படிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திவ்யா. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சென்னை, வால்டாக்ஸ் சாலை மாநகராட்சிப் பள்ளியில் படித்து 427 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்.

மனசு வெச்சா ஜெயிக்கலாம் !

சென்னையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் பூக்கடைப் பகுதியில் இருக்கிறது திவ்யாவின் வீடு. தப்பு... வீடு இல்லை ரோடு. பிளாட்ஃபாரத்தில் இரண்டு இரும்புப் பெட்டிகள், ஒரு மரப் பெட்டி, நான்கு ஐந்து வாட்டர்கேன்கள், ஒரு தள்ளுவண்டி இதுதான் திவ்யாவின் வீடு. எப்படி இந்த அளவுக்குச்  சாதிக்க முடிந்தது?  

''நான் இவ்ளோ மார்க்ஸ் வாங்க ஸ்ரீமதி மிஸ்தான்    காரணம். படிப்புதான் எனக்கு உயிர். எனக்கு ஒரு தங்கச்சி, ரெண்டு தம்பிங்க. சின்ன வயசுலயே அம்மா தவறிட்டாங்க. அப்பாவும் எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு. பாட்டி அஞ்சலைதான் வளர்த்தாங்க. குழந்தைங்க எல்லோரும் யூனிஃபார்ம் போட்டுட்டு பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கிறதைப் பாக்கிறப்ப, நாம பிளாட்ஃபாரத்துல பிறந்தோமே’னு வருத்தமா இருக்கும். எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிச்சு முன்னேறணும்னு ஒரு வைராக்கியத்தோட பள்ளியில் சேர்ந்தேன். பாட்டிக்குப் பூக்கட்டிக் கொடுத்துட்டுத் தெரு விளக்கு வெளிச்சத்தில் படிப்பேன். அதுக்குக் கிடைச்ச பலன்தான் இந்த மார்க்ஸ்'' என்று சொல்லும் திவ்யா தற்போது டவுட்டன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவில் சேர்ந்து உள்ளார்.

மனசு வெச்சா ஜெயிக்கலாம் !

திவ்யாவின் ஆர்வத்தைக் கண்ட இந்தியன் வங்கி, அவரது கல்விச் செலவு களைக் கவனித்துக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறது.  

திவ்யாவின் தங்கை மற்றும் தம்பிகள் இருவரும் தற்போது மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து உள்ளனர். ஆம். வறுமை காரணமாக படிப்பைத் தொடராமல் இருந்த அவர்களின் அக்கா திவ்யா 427 மதிப்பெண்கள் எடுத்திருப்பதையும்  அவருக்குக் கிடைத்து இருக்கும் மரியாதையையும் பார்த்துவிட்டு அவர்களுக்கும் படிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது.

''மனசுவெச்சாப் படிக்க முடியும். படிச்சா நிச்சயமா ஜெயிக்கலாம்'' என்று வைர வார்த்தைகளைச் சொல்லிய திவ்யாவின் முகம் தன்னம்பிக்கையுடன் ஜொலித்தது!

மனசு வெச்சா ஜெயிக்கலாம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு