Published:Updated:

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

சுட்டி ஸ்டார் 2012 -13கே.யுவராஜன், சரா சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்

##~##

'ஹேய்ய்ய்ய்ய்’ என்ற உற்சாகக் குரலுடன் சுட்டிகளை வரவேற்றுத் துள்ளலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் வேலு சரவணன்.

சுட்டி விகடனின் 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் பயிற்சித் திட்டம்’ இந்த ஆண்டும் களை கட்டியது. தேர்வு செய்யப்பட்ட சுட்டி ஸ்டார்கள் 46 பேரும் சரியான நேரத்துக்கு வந்து அரங்கை நிறைத்துத் தங்களது பங்சுவாலிட்டியை நிரூபித்தார்கள்.

ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்        ஜி.செந்தில்குமார் புன்னகையுடன் முதல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். 'பலன்கள் ஏராளம்’ என்ற தலைப்பில் கண்களுக்கும் செவிகளுக்கும் அறிவு விருந்து படைத்தார். ''உங்கள் பார்வையில் கல்வி என்றால் என்ன? அறிவு என்று எதைச் சொல்வீர்கள்?, ஆசிரியரைத் தவிர யார் எல்லாம் நமக்கு அறிவுச் செல்வத்தை அளிக்கிறார்கள்?'' என்று கேள்விகளை எழுப்பினார். சுட்டிகள் தங்களது வித்தியாசமான சிந்தனை மூலம் பதில்களைச் சொன்னார்கள். அனைவரையும் பாராட்டியவர்,  ''பள்ளிகளில் பெறுகின்ற அறிவைத் திறமைகளாக மாற்றி, அவற்றை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதே கல்வி’ என்று விளக்கம் தந்தார். மேலும் கவனித்தலின் அவசியத்தை ஒரு படக் காட்சியின் மூலம்  புதிர் போல் தொடங்கிப் புரியவைத்தபோது சுட்டிகளின் புருவங்கள் உயர்ந்தன.

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

அடுத்து 'கேட்டுக்கோ... தெரிஞ்சுக்கோ’ என்ற தலைப்பில் சுட்டி ஸ்டார்களின் முதல் அசைன்மென்ட் தொடங்கியது. பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ்ப் பேராசிரியையுமான பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தன்னைப் பற்றியும் தனது பட்டிமன்றப் பேச்சுக்கள் குறித்தும் விவரித்தார். ''சுட்டி நிருபர்கள் இனி இவரிடம் கேள்விகளைக் கேட்கலாம்'' என்று சொன்னதுதான் தாமதம்... கேள்விக்

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

கணைகள் பறந்து வந்தன. சளைக்காமல் பதில் அளித்துச் சுட்டிகளை உற்சாகப்படுத்தினார் பர்வீன் சுல்தானா. (இந்தப் பேட்டியை சுட்டி ஸ்டார்கள் அடுத்த இதழில் முழுமையாக வழங்க இருக்கிறார்கள்).

நிருபர் ஆகிட்டோம். இனி சுட்டி விகடனில் எத்தகைய பங்களிப்பை அளிக்கலாம்? அதற்கு எப்படி விஷயங்களைச் சேகரிப்பது? இதற்கு விடை சொல்லும் வகையில் அமைந்தது அடுத்து நடந்த 'வாங்க தேடலாம்’ நிகழ்ச்சி. நாம் பார்க்கும் சுவாரசியமான விஷயங் களைப் பத்திரிகைப் படைப்பாக்கும் முறைகளை சக்தி விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் எளிமையாகப் புரியவைத்தார்.

''நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்கிறீர்கள். அது சாதாரண நிகழ்வு அல்ல என்று தோன்றுகிறது... அதைப் பத்திரிகையில் எந்த வடிவில் பதிவு செய்தால் வாசகர்கள் இடையே தாக்கம் அதிகமாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும். உதாரணமாக, ஓர் ஏழைச் சிறுவன் சுவரில் போஸ்டரை ஒட்டுகிறான். ஒட்டி முடிக்கப்பட்ட அந்தப் போஸ்டரைப் பார்த்தால் 'குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!’ என்று இருக்கிறது.   குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்பு உணர்வுப் போஸ்டரை  ஒட்டுவதே ஒரு குழந்தைத் தொழிலாளி. இந்தக் காட்சியை எப்படி பத்திரிகைப் படைப்பாக்கு வது?

இதை ஒரு புதுக் கவிதையாகவோ, ஒரு துணுக்குச் செய்தியாகவோ, சிறப்புக் கட்டுரையாகவோ, ஒரு புகைப்படக் காட்சி மூலமாகவோ அல்லது ஒரு கதை வடிவிலேயோ வழங்கலாம். 'குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்! / போஸ்டரை ஒட்டியது ஒரு குழந்தை’ இது புதுக் கவிதை. நீங்கள் பார்த்த நிகழ்வை ஒரு போஸ்ட் கார்டில் சுருக்கமாக விவரித்தால் அது துணுக்குச் செய்தி. போஸ்டரை ஒட்டிய அந்தக் குழந்தைத் தொழிலாளியின் பின்னணி, நம் சமூகத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் உருவாவதற்கான காரணங்கள், அரசின் நடவடிக்கை முதலிய தகவல்களைத் திரட்டிக் கட்டுரையாகவும் வழங்கலாம். அல்லது நீங்கள் கண்ட காட்சியைப் படம் பிடித்து வெளியிட்டாலே போதும். அது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும். இதையே நமது கற்பனைத் திறனைச் சேர்த்து, சிறுகதை வடிவிலும் வழங்கலாம். ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனிப்பதும் அதைப் பதிவு செய்யும் வடிவமும்தான் பத்திரிகைப் படைப்புக்கு அவசியம். அதனால், உங்களைச் சுற்றித் தேடுங்கள்... தேடுங்கள்... தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை!'' என்று முடித்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலகலப்பான நிகச்சிகள் ஆரம்பித்தன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுப்ரமணியன் 'கைகளில் கண்ணாமூச்சி’ என்ற தலைப்பில் கவனம், ஒழுக்கம், சிந்தனை, தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன், கூட்டு முயற்சி... இப்படி உணர்வு மேலாண்மைக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் பெறுவதற்கான எளிய பயிற்சிகளை வழங்கினார். அதை அப்படியே செய்துகாட்டி அசத்தினார்கள் சுட்டி ஸ்டார்கள்.

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

அடுத்துத் தொடங்கியது வேலு சரவணன் தலைமையில் ’வேட்டையாடு விளையாடு’. நிகழ்ச்சி நடந்த பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதையல் பெட்டியை மறைத்துவைத்து இருந்தோம். சுட்டி நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் திரட்டிக்கொண்டு வேலு சரவணன் புதையலைத் தேடிச் சென்றார். புதையலைத் தேடும் முன்பு ஒரு கதையை நடிப்புடன் சொன்னார். அவருடன் சேர்ந்து சுட்டி நட்சத்திரங்களும் நடித்தனர்.  

பிறகு, ஆங்காங்கே கிடைத்த க்ளுக்களை வைத்து பள்ளி முழுவதும் உற்சாகத்து டன் புதையலைத் தேடிக்  கண்டுபிடித் தார்கள். வேட்டையாடி முடித்து வெற்றிக் களிப்புடன் திரும்பியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஹாலுக்குள் முன்னாள் சுட்டி ஸ்டார்கள் அணிவகுத்து இருந்தனர். 'ஜூனியர்  சீனியர்’ சந்திப்பின் தொடர்ச்சியாக சீனியர் சுட்டி ஸ்டார்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

சீனியர் சுட்டிகள் தங்களது அனுபவத்தைப் புது சுட்டி ஸ்டார்களிடம் பகிர்ந்து கொண்டனர். பெற்றோர்கள் பலரும் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்தனர். இந்தப் பயிற்சித் திட்டத்தால் தங்கள் பிள்ளைகள் எந்ததெந்த வகையில் பட்டை தீட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதைப் பெருமிதத்துடன் விவரித்தனர். சீனியர் சுட்டிகளில் ஒருவரான அழகுமீனா, சாதாரண அட்டைகள் மற்றும் காகிதங்களைக்கொண்டு தான் உருவாக்கிய அலமாரி, குட்டை மேஜை ஆகியவற்றை எல்லோரிடமும் காட்டி அதற்கான அறிவியல் விளக்கத்தை அளித்து கரகோஷத்தைப் பெற்றார்.

இறுதியாக, புது சுட்டி ஸ்டார்கள் தங்கள் படைப்புகளை அனுப்பும் முறை, தகவல்களைச் சேகரிக்கும் வழிகள், இதழில் இருக்க வேண்டிய பங்களிப்புகள் குறித்த சந்தேகங்களைச் சுட்டி விகடன் எடிட்டோரியல் டீமிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !

''போன வருஷத்து சுட்டி ஸ்டார்களைவிட நாங்கள் அதிகம் பங்கெடுத்து அடுத்த வருஷம் இதே இடத்தில் எங்கள் சட்டைக் காலர்களை உயர்த்திக் காட்டறோம்'' என்றார்கள் சுட்டி நட்சத்திரங்கள்.

பின்னி எடுங்கள் நண்பர்களே!