Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

விபத்துக்கு விடை கொடுப்போம் !எஸ்.ராஜாசெல்லம் எம்.தமிழ்ச்செல்வன்

##~##

தொழிற்சாலைகளில் சில வகை இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல்   அலட்சியமாக இருப்பதால்,  விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனைத் தடுக்கும் விதமாக, 'ஹியூமன் செக்யூரிட்டி சிஸ்டம்’ என்ற கான்செப்ட்டைக் கண்டுபிடித்துத் தங்க மெடலும் பெற்று இருக்கிறார், சேலம் மாவட்டம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மதிக்கண்ணன்.

கடந்த பிப்ரவரி மாதம் தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 'இன்ஸ்பயர்’ கண்காட்சியில் இந்தக் கான்செப்ட்டைச் செய்து காட்டி பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலானப் போட்டிக்கும்  தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இவரது கண்டுபிடிப்பின் மூலம் இனி ஹெல்மெட் அணியாமலோ அல்லது போதை, சிகரெட் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டோ யாராவது இயந்திரங்களை நெருங்கினால், அவை இயங்காது.

சுட்டி விஞ்ஞானி

''விபத்து மூலம் உயிர்ச் சேதம் ஆவதைச் செய்திகளில் படிக்கும்போது, ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த நேரத்தில் என் பெற்றோரிடம் 'இந்த உயிர் இழப்புகளைத் தடுக்க ஏதாவது செய்ய விரும்புறேன்’னு சொன்னேன். பள்ளி அறிவியல் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்கும்படி ஊக்கம் தந்தாங்க. அப்போ, நான் காடையாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, அறிவியல் ஆசிரியர் கதிரேசன் ஆகியோரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன். அவர்கள் நிறைய ஆலோசனைகளையும் உதவிகளையும்      செய்தார்கள்'' என்கிறார் மதிக்கண்ணன்.  

அந்த சமயத்தில் நடந்த இன்ஸ்பயர் கண்காட்சியில் தனது 'ஹியூமன் செக்யூரிட்டி சிஸ்டம்’ புராஜெக்டை பார்வைக்கு வைத்தார் மதிக்கண்ணன்.

''இதன் நோக்கம் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பது. தொழிற்சாலையில் இயந்திரத்தை இயக்கிப் பணி செய்யும் ஒருவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவர் அலட்சியமாக இருக்கும்பட்சத்தில் இந்த செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட இயந்திரத்தை அவர் எப்பாடுபட்டாலும் இயக்க முடியாது. அவர் கண்டிப்பாகத் தன்  தலைக்கு ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும். அதேபோல் மது அருந்திவிட்டோ, புகைப்பிடித்துவிட்டோ இயந்திரங்களை இயக்குபவர்களிடமும் இந்த மெஷின்கள் 'டூ...’ விட்டுவிடும்'' என்கிறார்.

இந்த ஹியூமன் செக்யூரிட்டி சிஸ்டம் மது, சிகரெட் பயன்படுத்துவோரிடம் இருந்து வரும் வாசனையை அடையாளம் கண்டு இயந்திரத்தை இயக்கத் தடையை ஏற்படுத்திவிடும். இரண்டு சென்ஸார் அமைப்புகள், ஒரு ஐ.சி, தேவைக்கு ஏற்ற பேட்டரி ஆகியவைதான் இதற்கான பொருட்கள். இவை இயந்திரத்தை இயக்குவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பதை சென்சார் மூலம் கண்டறிந்து, சர்க்யூட்டில் உள்ள மின்சுற்றுகளை முழுமைபெறச் செய்யும்.

''தொழிற்சாலைகளில் உண்டாகும் தீ விபத்துகளைக் கண்டறியும் வகையிலும் இதை அமைக்கலாம். அதேபோல் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவோர், மது அருந்திவிட்டு டிரைவிங் சீட்டில் உட்கார்ந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாதபடி, இந்தக் கருவியைப் பொருத்தலாம். ஹெல்மெட் அணியாமல் அமர்ந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாதபடியும்  செய்யலாம்'' என்கிறார் மதிக்கண்ணன்.

இப்போது எஸ்.எஸ்.ஆர்.எம் பள்ளியில் படிக்கும் மதிக்கண்ணன், ''இங்கே உள்ள ஆசிரியர்களும் என் அறிவியல் ஆர்வத்தைப் பார்த்து ஊக்கம் தருகின்றனர். தொடர்ந்து மக்களுக்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளை வடிவமைப்பேன்'' என்கிறார்.

இது எப்படி இயங்குது ?

சுட்டி விஞ்ஞானி

இது எல்லாமே சென்சார் முறையிலான தொழில்நுட்பம்தான். ஹெல்மெட்டின் பக்கவாட்டுப் பகுதிகளில் பொருத்தப்படும் சென்சார் அமைப்புகளை, இயந்திரங்களில் பொருத்தி இருக்கும் சர்க்யூட் நுட்பம் அடையாளம் தெரிந்துகொள்ளும். அப்போது இயந்திரங்கள் இயங்கும் மின்பாதையில் எந்தத் தடையும் இருக்காது. பணியாளர் சுவிட்சை ஆன் செய்தவுடன் இயந்திரம் இயங்கும். அவர் தலையில் ஹெல்மெட் இல்லை எனில்,  மின்பாதையில் தடை உண்டாகிவிடும்.

 உங்களில் ஒரு எடிசன்...

உங்கள் பள்ளியிலும் இவரைப் போன்ற சுட்டி விஞ்ஞானிகள் இருக்கிறார்களா? அவர்களையும் அவர்களது கண்டுபிடிப்பையும் அறிமுகப்படுத்த சுட்டி விகடன் தயார். பெயர், வகுப்பு, பள்ளியின் முதல்வர் மற்றும் முழு முகவரியுடன்... செல்போன் நம்பரையும் குறிப்பிட்டு, சுட்டி விகடன் முகவரிக்கு அனுப்பவும்.