Published:Updated:

மனம் கவரும் மரப் பொம்மைகள் !

சா.வடிவரசு வீ.நாகமணி

பிரீமியம் ஸ்டோரி
 

பொம்மைகள் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்தாத மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் என்றால் அதற்கு எப்பவுமே மவுசுதான். அந்தப் பொம்மைகள் உருவாகும் விதத்தை நேரில் பார்த்தால்... சென்னை ஷெனாய் நகரில் வீட்டிலேயே மரப் பொம்மைகள் தயாரிக்கிறார்கள் எனத் தெரிந்து, புளியந்தோப்பு 'தேவி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி’ மாணவர்களுடன்  அங்கே சென்றோம்.

எல்லோரையும் அன்புடன் வரவேற்றார் பொம்மைத் தயாரிப்பாளர் எலிசபெத் ஆன்ட்டி.

அங்கே குவிந்து கிடந்த மரக்கட்டைகளைக் காட்டி 'இந்த மரக்கட்டைகளை வெச்சுதான் அழகான பொம்மைகளைத் தயாரிக்கப்போறோம்'' என்றார்.

''மெஷின் எதுவும் கிடையாதா ஆன்ட்டி?'' என்று கேட்டாள் ஒரு சுட்டி. ''நான் மெஷின் எதையும் யூஸ் பண்றது இல்லை. கையாலேயே செஞ்சுடு வேன். ஆக்ஸா பிளேடு, கத்தரிக்கோல் போதும். செய்யப்போகும் பொம்மையின் அளவுக்கு ஏற்ப மரக்கட்டையின் நீளம் மற்றும் தடிமனை முதலில் முடிவு பண்ணி கட் பண்ணிப்பேன். அடுத்து உருவம் செதுக்குவது. ரொம்பவே கவனமாச் செய்யணும்.  கொஞ்சம் அசந்தாலும் பொம்மையின் அழகு மாறிடும்' என்று சொல்லிவிட்டு பொம்மைக்குக் கண், காது, மூக்கு வைத்து ஒரு விநாயகரை உருவாக்கினார் எலிசபெத்.

அடுத்து வண்ணம்... 'இதை இப்படியே பார்க்கிறப்போ சுமாராத்தான் தெரியும். அதுக்கு ஏற்ற சரியான கலர் கொடுத்தால் அட்ராக்டிவா இருக்கும். ஆரம்பத்தில் சரியான முறையில் பெயின்ட் அடிக்காம ரெடி பண்ணியதில் கொஞ்ச நாளிலேயே  பொம்மைகள் செல் அரிச்சுப்போச்சு. அப்புறம்தான்  வெஜிடபிள் பெயின்ட்டிங் செய்ய ஆரம்பிச்சோம். பொதுவாகக் குழந்தைகள் பொம்மைகளை வாயில் வைத்துக் கடிப்பார்கள். அவங்களுக்கே தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் ஏராளமான பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கு. ஆனால், இந்த வெஜிடபிள் கலர் பாதிப்பு எதையும்  ஏற்படுத்தாது'' என்றார் எலிசபெத்.

விநாயகர் உருவத்தைச் சிறு சிறு பாகங்களாகத்   தயாரித்த பின்னர் அவற்றைப் பசை போட்டு ஒட்டினார். சிறிது நேரத்துக்கு முன் மரக்கட்டைத் துண்டுகளாகப் பார்த்தது இப்போது முழு விநாயகராய் உருமாறி இருந்தது.

''முதலை போன்ற பொம்மையின் வால் பகுதியில் இரு பாகங்களுக்கு இடையில் ஸ்பிரிங் வைப்போம். இப்படி இணைப்பதால் ஸ்பிரிங் உதவியுடன் பொம்மையை வளைக்க முடியும்'' என்றார் எலிசபெத்.

''பிளாஸ்டிக் பொம்மைகளில் பல்வேறு வேதிப் பொருட்களைக் கலப்பதால் அதை வைத்து  விளையாடும் குழந்தைகளுக்குக் கெடுதல்கள் உருவாக்கும். உபயோகப்படுத்திய பிறகு பிளாஸ்டிக்கை அழிப்பதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு. ஆனால், இந்த மரப் பொம்மைகள் எந்தக் கெடுதலையும் உருவாக்காத நல்ல நண்பர்களாக இருக்கும்'' என்றார் எலிசபெத்.

''நாங்களும் இனி மரப் பொம்மைகளுக்கு மாறிடுறோம் ஆன்ட்டி'' என்று கோரஸாகச் சொன்னார்கள் சுட்டிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு