Published:Updated:

இரும்புப் பெண்மணியாக அரும்பு மலர்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் மகா.தமிழ்ப் பிரபாகரன்

##~##

இந்தியாவின் இரும்புப் பெண் இந்திரா காந்தி, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஐகான். அவர் இப்போது நேரில் வந்தால்...

நாமக்கல், செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி நுழைவு வாயிலில் சிறுமிகள் சிலர் சேலை கட்டிக்கொண்டு, அவை கலைந்துவிடாமல் பார்த்துகொண்டு, தமது அம்மாக்களுடன் ஆட்டோக்களில் வந்து இறங்கினார்கள். சக மாணவ மாணவிகள் வியப்புடன் பார்த்தனர். பள்ளியின் வேன் டிரைவர்கள் இரண்டு பேர், ''இந்தப் பொண்ணு மாதிரியே ஒரு அம்மா இருப்பாங்களே...'' என்று யோசிக்க, ''கலெக்டர் அம்மாவச் சொல்றியா?'' என்று இன்னொருவர் கேட்க, ''அட நீ வேற, இந்திரா காந்தி அம்மையாரைச் சொல்றேன்பா'' ''ஆமாய்யா... இப்பதான் எனக்கும் ஞாபகம் வருது'' என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அடுத்து,''இன்னைக்கு என்ன விசேஷம் பாப்பா?'' என்று ஆட்டோக்காரர் கேட்க, ''அதுவா அங்கிள், இன்னைக்கு... நாங்க இந்திரா காந்தி வேஷம் போடப்போறோம்'' என்று சொன்ன சிறுமியிடம், ''ஸ்வீட்லாம் இல்லையா?'' என்று கேட்க, ''அது வந்து...'' என்று ஒரு கணம் யோசித்த அந்தப் பெண், அம்மாவின் கையில் இருந்த ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை வாங்கிக்கொடுத்து அசத்தினாள்.

இரும்புப் பெண்மணியாக அரும்பு மலர்கள் !

சைக்கிளில் வந்த ஓர் இந்திரா காந்தி, பள்ளி அருகே வந்ததும் இறங்க முடியாமல் தடுமாறி கீழே விழப்போக, இரண்டு சிறுமிகள் தாங்கிப் பிடித்து, ''ஏன்டீ, உனக்கு இந்த வேண்டாத வேலை? நல்ல நாளிலயே ரெண்டு பேர் மேல உட்டு அடிச்சுருவே... சேலை வேற கட்டிக்கிட்டியா'' என்று கிண்டல் அடிக்க, வெட்கத்தைச் சிரித்து மறைத்துக்கொண்டே நடந்தாள் அந்தக் குட்டி இந்திரா.

ஆசிரியைகள், சிறுமிகளுக்குச் சேலை கட்டிவிட்டுத் தலைமுடியை ஒழுங்குபடுத்த நிறைய நேரம் பிடித்தது. நெற்றிக்கு மேலே வெள்ளை நிறம் பூசி, நரைமுடி ஆக்கியபோது, அசல் இந்திரா காந்தியாய் நின்றார்கள்.

சிறுமிகள் அனைவரும் தம்மை இந்திரா காந்திபோல் நினைத்துப் பெருமிதம் கொண்டார்கள். முதன் முதலாய் சேலை கட்டிக்கொண்டதும் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டாக்கியது. அந்த சந்தோஷத்தில் அங்கே குவிக்கப்பட்டு இருந்த வண்ண வண்ணப் பந்துகளை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடினர். அப்போது ஒரு சிறுமியின் அம்மா, ''தலையைக் கலைச்சிடாதீங்கடி... இவ்வளவு நேரம் சிரமப்பட்டது வேஸ்ட்டாயிரும்'' என்று கெஞ்சலாய்ச் சொல்ல, ''ஓ.கே. மம்மி.

இரும்புப் பெண்மணியாக அரும்பு மலர்கள் !

ஆனா, நீங்க இன்னைக்கு மட்டும் எங்களை வாடி போடினு சொல்லாம இருங்க'' என்று ஆக்ஷனோடு தடாலடியாய் ஆர்டர் போட, அங்கே இருந்த எல்லா ஆசிரியைகளும் சிரித்துவிட்டனர். ''என்னடி... இன்னும் இவ வாயாடாம இருக்காளேன்னு பார்த்தேன்'' என்று சொல்லிவிட்டு, ''ஓ.கே. அம்மையாரே'' என்று நகர, சிரித்துகொண்டே ஓடினாள் அந்தக் குட்டி இந்திரா காந்தி.

முடி குறைக்கப்பட்டு இருந்த சிறுமிகள் சிலர், முடி நிறைய உள்ள இந்திரா காந்திகளைப் பொறாமையாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''நேற்றுப் பார்த்த முடி என்னாச்சு?'' என்று அவர்கள் அம்மாக்களிடம் பிரின்சி மேடம் கேட்க, ''இந்திரா காந்தி கிராப் வெட்டச் சொன்னதுக்கு இப்புடி டோரா கட்டிங் பண்ணிட்டாங்க மேடம்'' என்றபோது, அந்தச் சிறுமிகள் அழத் தொடங்க, அவர்களை பிரின்சி மேம் செல்லமாய்ச் சமாதானப்படுத்தினார்.

இரும்புப் பெண்மணியாக அரும்பு மலர்கள் !

ஒரு பெண், பூவும் வளையல்களும் வாங்கிக் கொண்டுவந்து, அணிந்துகொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க, அந்த இடமே கலகலத்தது. ''நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு போறப்ப போட்டுக்கலாம்'' என்று மற்ற இந்திரா காந்திகள் சொல்லியும் கேட்காமல் போக, கடைசியாய் கிளாஸ் டீச்சர் கொடுத்த சாக்லேட் சமாதானப்படுத்தியது.

எந்தச் சூழ்நிலையிலும் கலங்காது  கடமை ஆற்றி, நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த இந்திரா காந்தியின் வரலாறு மறக்க முடியாதது.

இந்திரா காந்தி !

இரும்புப் பெண்மணியாக அரும்பு மலர்கள் !

இந்திரா ப்ரியதர்ஷனி 1917 நவம்பர் 19-ல் ஜவர்ஹலால் நேரு-கமலா அம்மையாருக்கு மகளாகப் பிறந்து அரசியல் பின்புலம்கொண்ட தன் குடும்பச் சூழலைச் சாதுர்யமாகப் பயன்படுத்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார். இந்திரா காந்தியின் ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறின. வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். மன்னர் மானியங்களை ஒழித்தார். பாகிஸ்தானுடன் போரிட்டு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்தார். தான் நினைத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் நிறைந்தவராக அவர் விளங்கினார். இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் உரிய இந்திரா, தன்னுடைய பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்தபோது, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.இது அவருடைய அரசியல் வாழ்வில் பெரும் விமர்சனத்தைத் தேடித் தந்தது. அவர் தனது இறப்புக்கு முந்தைய நாள் 1984 அக்டோபர் 30 அன்று, ஒரிசாவில் (இன்றைய ஒடிசா) இவ்வாறு பேசினார்... ''நான் இன்று உள்ளேன், நாளை நான் இல்லாமலும் போகலாம். என் இறுதி மூச்சு வரை என் நாட்டுக்கான சேவையைச் செய்வேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும்.''

-மகா.தமிழ்ப் பிரபாகரன்

நாமக்கல் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,      வி.பொன்னுசாமி அறக்கட்டளை சார்பாக, டாக்டர் செல்வராஜ் அவர்களால் நிறுவப்பட்டு 2001 முதல் இயங்கி வருகிறது.

''பள்ளியின் நோக்கம், நல்ல ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி அளிப்பது. ரிநி வகுப்பு குழந்தைகளுக்கு மாண்டிசேரி முறையிலும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு விளையாட்டு வழிக் கல்வி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இன்ஸ்டிடியூட் லேங்க்வேஜ் மேனேஜ்மென்ட் (ILM) நிறுவனத்தின் மூலம் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வரை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியைப் பெற்று வருகிறது.  மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் பல சிறப்புகளைப் பெற்று வருகின்றனர்'' என்கிறார் இந்தப் பள்ளியின் முதல்வர் சாரதா மணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு