பிரீமியம் ஸ்டோரி
##~##
''மை டியர் ஜீபா, என்னால் சுட்டி ஸ்டார் ஆக முடியவில்லை. ஆனால், சுட்டி விகடனில் பங்கேற்க ஆசை, அதற்கு என்ன செய்ய வேண்டும்?''

   -வெ.விக்னேஷ், பொன்னமராவதி.

''சுட்டி ஸ்டாராகத் தேர்வு ஆகாவிட்டாலும் சோர்ந்துவிடாமல் அடுத்து என்ன செய்வது என்று கேட்கிறாயே சபாஷ் விக்னேஷ்!  கதைகள் அனுப்பினால் அதைப் படக் கதையாக வெளியிடுவோம். ஜோக்ஸ் மற்றும் சுவையான தகவல்களையும் அனுப்பலாம். தகுதியானவை வெளியாகும். அப்புறம் நீ சூப்பர் ஸ்டாராகவே ஆகலாம்.''  

''ஹலோ ஜீபா... நம்மை யாராவது அடித்தால் ஏற்படும் வலி எங்கே இருந்து வருகிறது?''

-வெ.சந்தனகுமார், செங்கோட்டை.

''நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் உணர்வு நரம்புகள் மூலம் மூளையுடன் தொடர்பில் இருக்கும். அடிபடும்போது நரம்புகள் மூலம் தகவல் மூளைக்குச் செல்லும். உடனே மூளை அந்த இடத்துக்கு வலியை அனுப்பும். இந்த மூளை சும்மா இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறது? எல்லாம் நம் நன்மைக்குத்தான். வலி இல்லாவிட்டால் நாம் மருந்தை உபயோகிக்க மாட்டோம். அது பெரிதாகி ஆபத்தில் முடியும். அதனால்தான் வலியை மூளை கொடுக்கிறது. இன்னொரு விஷயம்... சில எமர்ஜென்சியான நேரங்களில் மூளையின் வேலையைத் தண்டுவடமும் செய்வது உண்டு. கொஞ்சமும் எதிர்பாராமல் மனிதர்களாலோ, பிற உயிரினங்களாலோ தாக்கப்படும்போது தண்டுவடம் உடனடியாக வலியை உணர்த்தி, நம்மை உஷார்ப்படுத்தும்.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால், குரங்குகளால் ஏன் பேச முடியவில்லை?''

    -பி.தாமோதரன், பெரியநாயக்கன்பாளையம்.

''இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும்  உயிரிகளிடம் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதைப் பரிணாம வளர்ச்சி என்பார்கள். முதல் உயிரினத்திடம் இருக்கும் சில குணங்கள், பரிணாம வளர்ச்சி அடைந்தவற்றிடமும் இருக்கும். அத்துடன் சில தனிக் குணங்களும் ஏற்படும். குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன். அதனால் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றுதான் பேச முடிவது. மனிதர்களிடம் இருக்கும் பல குணங்கள் குரங்குகளிடம் உண்டு. குறிப்பாக, சிம்பன்சி குரங்குகள் மனிதர்களைப் போலவே பல விஷயங்களைச் செய்யும். மனிதர்களுக்கு ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல், போலியோ போன்ற நோய்களும் சிம்பன்சிக்கு ஏற்படுவது உண்டு.''    

''ஹாய் ஜீபா... உடலில் வரிகளே இல்லாத வரிக்குதிரைகள் இருப்பதாக என் தோழி சொல்கிறாள். அது உண்மையா?''

   -வே.அர்ச்சனா, செங்கல்பட்டு.

''வரிகள் இருக்கும் அர்ச்சனா. ஆனால், அவை கறுப்பு நிறத்தில் பளிச் என இருக்காது. இதை அல்பினோ பிறப்பு என்பார்கள். மெலனின் சுரப்பி இல்லாததே காரணம். வரிக்குதிரையில் மட்டும் அல்லாமல், வெள்ளை மயில், சிங்கம், மனிதன் உட்பட பல உயிரினங்களில் மரபணுக் குறைபாடுகளால் 'அல்பினிசியம்’ என்ற வெண்மைத் தோல் நிறக் குறைபாடு உண்டாகும்.

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... நாம் கோபப்படும்போது கண்கள் சிவப்பதன் காரணம் என்ன?''

    -சி.சிவகிரி, ஈரோடு.

''நாம் கோபப்படும்போது உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். ரத்த ஓட்டமும் மாறும். சராசரியைவிட அதிகப் பாய்ச்சலில் ரத்தம் உடல் முழுவதும் செல்லும். கண் போன்ற மென்மையான பகுதியில் ரத்தம் அப்படி வேகமாகச் செல்வதால் சில நிமிடங்களில் சிவந்துவிடு கிறது. இந்தத் திடீர்ப் பாய்ச்சல் அடிக்கடி நடந்தால், உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் கோபத்தைவிட்டு பொறுமையைக் கடைப்பிடிப்பது முக்கியம் சிவகிரி.''

''டியர் ஜீபா... டிராக்டரில் மட்டும் புகை மேலே போவது ஏன்?''

   -க.ராம்குமார், கொட்டாகுளம்.

''மற்ற வாகனங்களுக்கும் டிராக்டருக்கும் வித்தியாசம் உண்டு. டிராக்டரை வயல் நிலங்களில் பயன்படுத்துகிறோம். அங்கே மேடும் பள்ளமுமாக, நீரும் சேறுமாக இருக்கும். டிராக்டருக்கான சைலன்சர் எல்லா வாகனங்களைப்போல் கீழ்ப் பக்கம் இருந்தால் சைலன்சரில் தண்ணீர் புகுந்துவிடும். தவிர, வயல் நிலங்களில் புகை இறங்கினால் நிலமும் சீக்கிரமே கெட்டுவிடும். அதனால்தான் சைலன்ஸரை மேலேவைத்து இருக் கிறார்கள். நம் ஊரில் மழைக் காலத்தில் பல டூ வீலர்களின் சைலன்ஸரில் நீர் புகுந்து தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்து இருப்பாயே ராம்?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு