Published:Updated:

ரத்தம் குடிக்கும் வெளவால் !

ரேஞ்சர் மாமா

பிரீமியம் ஸ்டோரி
##~##

பொதுவாக வெளவால்கள் தாவரப் பட்சிணிகள். ஆனால், டெஸ்மோடஸ் ரோடண்டஸ் (Desmodus rotundus) என்னும் வெளவால் மாமிச பட்சிணி. இதன் ஆகாரம் ரத்தம் மட்டுமே.

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் கிழக்கு பிரேஸில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய பகுதிகளில் இந்த வெளவால்கள் வசிக்கின்றன.

இவற்றின் உடல் குறைந்த நீளமே உள்ள உரோமங்களைக் கொண்டது. இதன் கூர்மையான கத்தி போன்ற பற்கள் மூலம் தூங்கிக்கொண்டு இருக்கும் கால்நடைகளைக் கடித்துக் காயப்படுத்தி, ரத்தத்தை உறிஞ்சும். இந்த வெளவால்கள் கடிக்கும்போது, கடிபடும் மிருகங்களின் தூக்கம் கலையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.

ரத்தம் குடிக்கும் வெளவால் !

இவை சராசரியாக மூன்றரை அங்குல நீளம் இருக்கும். இதன் இறக்கை ஏழு அங்குலம் வரை விரியும். ஒரே வயதுடைய ஆணைவிடப் பெண் பெரிய அளவில் இருக்கும். இதர வெளவால் இனங்களால் ஓட முடியாது. இந்த வெளவால் முன்னங்கால்களைப் பயன்படுத்தி ஓடும்.

இவற்றுக்கு இரவிலும் அற்புதமாகப் பார்க்கும் சக்தியும் கேட்கும் திறனும் நுகரும் ஆற்றலும் உண்டு. கசியும் ரத்தத்தை நாக்கில் உள்ள சிறிய மேடு பள்ளங்கள் மூலம் ஒரு ஸ்ட்ராவைப் போல மின்னல் வேகத்தில் உறுஞ்சும். 40 கிராம் எடை உள்ள இவை, ஒரே சமயத்தில் 20 கிராம் ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

இவற்றின் ஜீரண மண்டலம் திரவ நிலையில் உள்ள ரத்தத்தைச் செரிக்கும் அளவுக்கு எளிமையானதாக இருக்கும். இதன் உமிழ்நீரில் உள்ள ட்ராகுலின் என்ற வேதிப் பொருள் ரத்தத்தை உறையாமல் வைத்துக்கொள்ளும். அதனால் விலங்குகளை இது  கடித்த இடத்தில் இருந்து ரத்தம் தடை இல்லாமல் வந்துகொண்டே இருக்கும்.

இரையின் கழுத்துப் பகுதியில் இருக்கும் இரத்தக் குழாயைக் குறி பார்த்துக் கடிக்கும். இதற்கெனவே இந்த வகை வெளவால்களுக்கு இன்ஃப்ரா ரெட் சென்சார்கள் என்னும் கண்டறியும் உறுப்புகள் இருக்கின்றன.

அதிகமாக ரத்தம் குடித்த வெளவால்கள், உணவு அகப்படாமல் பட்டினி கிடக்கும் தோழர்களுக்கு, தங்கள் இரைப்பையில் இருந்து வாய்க்கு உணவைக் கொண்டுவந்து ஊட்டுவதும் உண்டு. இவை வளர்ப்புப் பிராணிகளாக இருக்கும்போது எஜமானிடம் மிகவும் பிரியமாக இருக்கும்.

இவை கடித்தால் ரேபிஸ் என்னும் வியாதி கால்நடைகளுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒன்பது ஆண்டுகள் வரை வாழும். இந்த வெளவால்களின் உமிழ்நீரில் இருந்து ’டெஸ்மோட் ப்ளாஸ்’ என்னும் மருந்தைத் தயாரிக்கிறார்கள். உமிழ்நீருக்கு ரத்தத்தை உறையாமல் தடுக்கும் சக்தி இருப்பதால் பக்கவாதம் வந்த நோயாளிகளின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இந்த மருந்து பயன்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு