Published:Updated:

12 வயது பிரசிடென்ட்... 10 வயது சி.இ.ஓ.

அசத்தல் APP சகோதரர்கள் !சரா, படங்கள் : ஜெ.வேட்கடராஜ்

##~##

இந்தியாவின் இளம் மொபைல் அப்ளிகேஷன் புரோக்ராமர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள் ஆகி இருக்கிறார்கள், சென்னையில் வசிக்கும் சகோதரர்கள் 12 வயது ஷரவண் மற்றும் 10 வயது சஞ்சய்!

சுட்டிகளைக் கவருவதற்கு என்றே 'ஆங்ரி பேர்டு’ விளையாட்டு தொடங்கி அட்லஸ் மேப் வரையில் ஆயிரக்கணக்கான மொபைல் அப்ளிகேஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அப்பாவின் ஐ-போன், ஐபேடு-க்குள் நுழைந்து, அவற்றைப் பயன்படுத்தி மகிழும் சுட்டிகளுக்கு மத்தியில், அந்த அப்ளிகேஷன்களை உருவாக்கும் தொழில்நுட்பப் படைப்பாளிகளாகவே இந்தச் சகோதரர்கள் அசத்துகிறார்கள்.

அது மட்டுமா? தந்தையின் வழிகாட்டுதலுடன் 'கோ-டைமன்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி,  ஷரவண் பிரெசிடென்ட் ஆகவும், சஞ்சய் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்பட்டுவருகிறார்கள்.

'கேட்ச் மீ காப்’ என்ற திருடன் - போலீஸ் விளையாட்டு, குழந்தைகளுக்கான 'ஆங்கில அகரமுதலி’ பலகை, 'பிரேயர் பிளானட்’ என்கிற வழிபாட்டுக்கான புரோக்ராம், வண்ணம் தீட்டி மகிழ 'கலர் பேலட்’ என நான்கு அப்ளிகேஷன்களை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இவை, ஆப் ஸ்டோரில் (கிறிறி ஷிtஷீக்ஷீமீ) மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளன.

12 வயது பிரசிடென்ட்... 10 வயது சி.இ.ஓ.

'உங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்’ என்று சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று, இ-மெயிலில் தொடர்புகொண்டதே இவர்களது திறமைக்குச் சான்று.

''சென்னையில் உள்ள வேல்ஸ் பிலபாங் ஹை இன்டர்நேஷனல் ஸ்கூலில் நாங்கள் படித்துவருகிறோம். ஒரு முறை பள்ளி நிகழ்ச்சிக்காக கம்ப்யூட்டர் பிரசன்டேஷன் வழங்கினோம். ஆசிரியர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தியதால் இன்னும் நிறையப் புதுமைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

12 வயது பிரசிடென்ட்... 10 வயது சி.இ.ஓ.

அப்பாவின் கம்ப்யூட்டரில் ஃபோட்டோஷாப், க்யூபேஸிக் மற்றும் அனிமேஷன் முறைகளைக் கற்றுக் கொண்டோம். பிறகு, மொபைல் அப்ளிகேஷன்களுக்குப் புரோக்ராம் மற்றும் கோடிங் எழுதும் முறையை அறிந்து கொண்டோம். நாங்களே நான்கு புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கி, அவற்றை ஆப்பிள் ஸ்டோரில் பதிவுசெய்தோம். அந்த அப்ளிகேஷன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.  வெறும் விளையாட்டுகளோடு நின்றுவிடாமல், அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படும் விஷயங்களையும் புகுத்தியதால் தான் இவை அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டன'' என்று சொல்லும் அண்ணன் ஷரவண், கணினி,  ஐ-போன், ஐபேடு போன்ற சாதனங்களைப் பற்றி முழுமையாக அறிந்துவைத்து  இருப்பவர்.

படைப்புத் திறனில் உறுதுணைபுரியும் தம்பி சஞ்சய், புதுப்புது அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கான ஐடியாக்களை அள்ளித் தெளிப்பவர். அடுத்தகட்ட முயற்சிகள்பற்றி அவர்கள் சொல்லும்போது ''எந்த புரோக்ராம்கள் என்றாலும் கல்விக்கும் கலாசாரத்துக்குமே முன்னுரிமை கொடுப்போம். மூத்தக் குடிமக்களுக்கு உதவும் வகையில் புரோக்ராம்களைச் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு பயனுள்ள அப்ளிகேஷனை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. அறிவுக்கு விருந்து படைக்கும் எளிய விளையாட்டுகளைத் தருவோம். குறிப்பாக, பார்வையற்ற மாணவர்களுக்கான  விளையாட்டுகளை உருவாக்க இருக்கிறோம்.'' என்கிறார்.

12 வயது பிரசிடென்ட்... 10 வயது சி.இ.ஓ.

''சிறுவயதில் இருந்தே ரைட் சகோதரர்களின் வெற்றிக் கதைகளை ஷரவணுக்கும்                   சஞ்சய்க்கும் அடிக்கடிச் சொல்வேன். அந்த உந்துதல்தான் அவர்கள் ஒன்றாகத் திறமைகளை வெளிப்படுத்தத் தூண்டுதலாக அமைந்தது'' என்று மகன்களின் வெற்றி ரகசியத்தைச் சொல்கிறார் அம்மா ஜோதிலட்சுமி.

''நான் 15 ஆண்டுகளாக ஐ.டி. துறையில் இருக்கிறேன். கம்ப்யூட்டரில் அடிப்படை விஷயங்களை மட்டும்தான் சொல்லிக் கொடுத்தேன். பிறகு, அவர்களே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டனர். வீட்டில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் கணினி முன்பு உட்கார மாட்டார்கள். படிப்பு தவிர ஓய்வான நேரத்தில் மட்டும்தான் கணினி புரோக்ராமிங்கில் கவனம் செலுத்துவார்கள்'' என்கிறார் அப்பா குமரன்.  

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பொறியாளகள் வரையில், எல்லாத் தரப்பினரும் தங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்தக் கூடிய கையடக்கக் கணினியை உருவாக்குவதே ஷரவண், சஞ்சய் ஆகியோரின் எதிர்கால இலக்கு. பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்களுடன் தன் அப்பாவையும் முன் மாதிரியாகக் கொண்டு உத்வேகத்துடன் செயல்படும் இவர்கள், ''எங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளின் நலனுக்காகச் செலவிடுவோம்'' என்று சொல்கிறார்கள் பெருமிதத்துடன்! ரை... ரைட் பிரதர்ஸ்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு