Published:Updated:

டீச்சர் அல்ல...ஆன்ட்டி !

சரா என்.ஜி.மணிகண்டன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''இன்று இரவு அரை மணி நேரம் வானத்தைப் பாருங்கள். நீங்கள் என்னென்ன பார்த்தீர்களோ, அவற்றை அப்படியே நாளை காலை வரைந்து காட்ட வேண்டும்.''

''அதிகாலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு வந்துசேரும் வரை என்னென்ன ஓசைகளைக் கேட்டீர்கள்? அதை அப்படியே எழுதிக் கொடுங்கள்.''

ஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளியில் மாணவர்களுக்குத் தரப்படும் ஹோம் வொர்க்தான் இவை. படிக்கும் வகுப்புக்கு ஏற்ப சுவாரசியமானதும் இயற்கையோடு ஒன்றியதுமான வீட்டுப் பாடங்களைத் தருகிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

திருச்சியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோமரசம்பேட்டைக்கு அருகே அடவத்தூர் கிராமத்தில் அமைந்து இருக்கிறது பள்ளி. இந்த சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் 'டை’ கட்டக் கூடாது; ஷூ போடக் கூடாது என்பது முக்கிய விதி. ''நம் ஊர் காலநிலைக்குப் பொருந்தாத ஒன்று என்பதால்தான் இதைக் கடைப்பிடிக்கிறோம்'' என்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.

மற்ற பள்ளிகளைவிட வித்தியாசமாக இயங்கிவரும் இந்தப் பள்ளியின் முதல்வர் சத்யாவிடம் பேசும்போது, ''எங்கள் பள்ளியில் மாணவர்களைத் திட்டுவதோ அடிப்பதோ கிடையாது. எத்தகைய சூழ்நிலையிலும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்பதை ஆசிரியர்கள் பின்பற்றிவருகிறார்கள். பாடங்களை மனப்பாடம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

டீச்சர் அல்ல...ஆன்ட்டி !

மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில்தான் பாடம் நடத்துவோம். ஒரு பாடத்தைச் செயல்முறையோடு விளக்கிப் புரியவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். வெறும் பாடப் புத்தகங்களுடன் நின்றுவிடாமல், இயற்கையோடு இணைந்த கல்வியை அளிக்கிறோம்.

உதாரணமாக, நாம் உணவாகச் சாப்பிடும் அரிசி எப்படித் தயாராகிறது என்பதைச் சொல்லித்தர, வயலில் நெல் விதைக்கப்படுவதில் தொடங்கி, மில்லில் அரிசியாகப் அரைக்கப்படுவது வரையில் மாணவர்களைக் களத்துக்கே அழைத்துச்சென்று காட்டுவோம். இப்படி அடிப்படையான விஷயங்கள் அனைத்தும் நேரடியாகச் சொல்லித் தரப்படுகின்றன.

எங்கள் மாணவர்களுக்கு தேர்வுப் பயமே இருந்தது இல்லை. நான்காம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது இல்லை. ஆண்டுக் கடைசியில் அசெஸ்மென்ட் டெஸ்ட் வைப்பதுடன் சரி'' என்றார்.

ரெட் இங்க் பேனா உபயோகிக்காத பள்ளி இது. இங்கு மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களையோ, விடைத்தாள்களையோ சிவப்பு மைப் பேனாவைப் பயன்படுத்தித் திருத்துவது இல்லை. மாறாக, நீல மையாலேயே விடைத்தாளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரியான விடைகளை ஆசிரியர்களே எழுதிக் காட்டும் வழக்கத்தைக் கொண்டு உள்ளார்கள்.

டீச்சர் அல்ல...ஆன்ட்டி !

இங்கு 'ஸ்பெஷல் சில்ரன்’ என்று அழைக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிறுவனரான 80 வயது கே.ஜி.மீனாட்சி கூறும் போது, ''எங்கள் பள்ளியில் 85 சிறப்புக் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளார்ந்த கல்வி முறையைச் (Inclusive Education) செயல்படுத்துவதற்குக் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறோம். அதில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது.

அவர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, சாதாரண மாணவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு அல்லது மூன்று சிறப்புக் குழந்தைகள் இருக்கின்றனர். இது மாணவர்களிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தி உள்ளதைக் கண்கூடாகவே காண்கிறோம்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

டீச்சர் அல்ல...ஆன்ட்டி !

தங்கள் பள்ளியைப் பற்றி கூறிய மாணவர்கள் சிலர், ''எங்கள் பள்ளியில் 'பாலம்’ என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது. அதற்கு ஒவ்வொரு மாணவரும் மாதம் ஒரு ரூபாய் தருவோம். அதில் திரட்டப்படும் நிதியைவைத்து அருகில் உள்ள கிராம மக்களுக்கு உதவுவோம். ஒரு சில நாட்கள் யூனிஃபார்ம் அணியாமல் வந்தால்கூட, யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். 'நாளைக்கு மறக்காம யூனிஃபார்ம் போட்டுட்டு வா’னு அறிவுரை மட்டும் சொல்வாங்க. எங்களில் யாருக்காவது பிறந்த நாள் என்றால், சாக்லேட் தர மாட்டோம்; பிஸ்கட்தான் கொடுப்போம். பிறந்த நாளையட்டி, ஒரு மரம் நடுவோம்.

முக்கியமாக, எல்லா ஆன்ட்டிகளும் ரொம்ப அன்பா பழகுவாங்க. வீட்டில் இருக்கிற மாதிரியான உணர்வுதான் இருக்கும். அவ்வளவு ஜாலியா க்ளாஸ் நடக்கும்'' என்றவர்களிடம், 'ஆன்ட்டியா?’ என்று கேட்டதற்கு, ''ஆமாம்... எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை 'மேடம்’, 'மிஸ்’, 'டீச்சர்’ என்று எல்லாம் அழைக்க மாட்டோம். 'ஆன்ட்டி அல்லது அங்கிள்னு கூப்பிடுவோம்'' என்றனர். ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்து வதற்காகவே இந்தப் பழக்கத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

''இந்தப் பள்ளியில் சேரும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அணுகுவது தொடர்பாக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கு பணிபுரிந்துவிட்டு வேறு பள்ளிக்கு ஏற்றபடி எளிதில் மாறிவிட முடியாது. அந்த அளவுக்கு நாம் ஒன்றிவிடுவோம்'' என்றார் பானுமதி டீச்சர். இல்லை... பானுமதி ஆன்ட்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு