Published:Updated:

சல்யூட் பாட்டி !

மகா.தமிழ்ப் பிரபாகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியர்களின் சுதந்திரப் போரில் ஆயுதப் போராட்ட வரலாற்றை உருவாக்கியது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ.). அதில் பெண்கள் பிரிவுக்குத் தலைமை வகித்து வழிநடத்தி, பெண்ணினத்தின் வீரத்தைப் பறைசாற்றினார் லட்சுமி சேகல்!  

சென்னையில் 1914 அக்டோபர் 24-ல் பிறந்த இவர், 'கேப்டன் லட்சுமி’ என்று அழைக்கப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1938-ல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், 1940-ல் மேற்படிப்புக்காக சிங்கப்பூர் சென்றார்.

அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.  நேதாஜி 'ஜான்சி ராணி’ படைப் பிரிவைத் தொடங்க இந்த சந்திப்பே வழிவகுத்தது. ஆசியாவின் முதல் பெண்கள் ராணுவ அணியின் தலைவராக லட்சுமி சேகல் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

மே 1945-ல் இங்கிலாந்து ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 1946 மார்ச் மாதம் வரை பர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.

சல்யூட் பாட்டி !

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின் மருத்துவப் பணியாற்றிவந்தவர், 1971-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். வங்கப் பிரிவினையின்போது அகதிகளாக இந்தியாவைத் தேடி வந்தவர்களுக்கு மறுவாழ்வு முகாம்களையும் மருத்துவ முகாம்களையும் தலைமை வகித்து வழி நடத்தினார். 1984-ல் போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சேவை புரிந்தார்.

இவரது சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1998-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

வீரம் போற்றிய புறநானூற்று மங்கை என்றே போற்றத்தக்கவரான இவர், கடந்த ஜூலை 23-ஆம் தேதி தனது 97-ஆவது வயதில் மறைந்தார்.

சல்யூட் பாட்டி !

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது நிச்சயம்.

ஜெய்ஹிந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு