Published:Updated:

சின்னப் பையனும் குண்டு மனிதனும் !

சமஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

என்னென்ன தினங்களோ கொண்டாடுகிறோம். உலகம் மறக்கக் கூடாத தினம் எது தெரியுமா?  ஆகஸ்ட் 6. உலகம் முதன்முதலில் அணுகுண்டின் அழிவை எதிர்கொண்ட தினம்... ஹிரோஷிமா தினம்.

ஜப்பான், ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த நாடாக இருந்த நாட்கள் அவை. தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற வெறியில் அது இருந்தது. இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் முக்கியப் பங்கு வகித்தது. வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்த ஜப்பான், ஒருகட்டத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பேர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஜப்பானின் அதிரடியில் அமெரிக்கப் போர்க் கப்பல் மூழ்கியது. கோபம்கொண்ட அமெரிக்கா புதிதாகக் கண்டுபிடித்து இருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக்கொண்டது.

மொத்தம் நான்குகட்டத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது அமெரிக்கா. 1945 ஆகஸ்ட் மாதத்தில் வாரம் ஒரு தாக்குதல் எனத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா அணுகுண்டு வீசத் தேர்ந்தெடுத்த முதல் இலக்கு... ஹிரோஷிமா!

சின்னப் பையனும் குண்டு மனிதனும் !

காலை 8.15 மணி. ஹிரோஷிமா மக்கள் வேலை பரபரப்பில் இருந்தனர். குழந்தைகள் பள்ளிக்கூடம் கிளம்பிக்கொண்டு இருந்தனர். அமெரிக்கா விமானப்படை விமானம் ஹிரோஷிமா மீது 'சின்னப் பையன்’ (லிட்டில் பாய்) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. ஆயிரம் கோடி சூரியன்கள் தோன்றி மறைந்தால் எப்படி இருக்கும்? அங்கே அப்படி ஒரு பிரகாசம் தோன்றி மறைந்து இருள் சூழ்ந்தது. எங்கும் தீ... ஒரே மரண ஓலம்... வானம் முழுவதும் கரும்புகை. எல்லாமே முற்றிலுமாக அழிந்ததால், ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்று ஜப்பானிய அரசாலேயே தெரிந்துகொள்ள முடியவில்லை. ஓர் இளம் அதிகாரி விமானத்தில் சென்று, ஹிரோஷிமா நிலவரத்தைத் தூரத்தில் இருந்து கண்டு உணர்ந்தார். ஹிரோஷிமாவின் பேரழிவைப் பற்றி அவர் சொன்னதற்குப் பிறகுதான் நடந்த கொடுமை உலகுக்குத் தெரிந்தது.

அணுகுண்டு வீசப்பட்ட முதல் நாளில் மட்டும் 70,000 பேர் உயிர் இழந்தனர்.  ஹிரோஷிமாவின் அப்போதைய மக்கள்தொகை 3.5 லட்சம். கதிர்வீச்சின் பாதிப்பால் காலப் போக்கில் கிட்டத்தட்ட சரிபாதியினர் உயிர் இழந்தனர். ஏனையோர் உடல் உருக்குலைந்து உறுப்புகள் ஊனமாகி நடைப்பிணங்கள் ஆகினர்.

ஹிரோஷிமா தாக்குதலுக்கு அடுத்த மூன்றே நாட்களில் தனது இரண்டாவது கட்டத் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இலக்கு... நாகசாகி. இங்கே அமெரிக்க விமானம் வீசிய அணுகுண்டின் பெயர் 'குண்டு மனிதன்’ (ஃபேட் மேன்). முதல் நாளிலேயே 40,000 பேர் கொல்லப்பட்டார்கள். மொத்தம் ஒரு லட்சம் பேர் வரை இறந்து இருக்கலாம். இந்தச் சம்பவங்களுக்குப் பின் 67 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைக்கும் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் குழந்தைகள் சதைப் பிண்டங்களாகப் பிறக்கின்றன.

இதற்குப் பின் இரண்டு தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு இருந்தது. ஜப்பான் சரண் அடைந்ததை ஒட்டி, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததால், அமெரிக்கா அந்த முடிவைக் கைவிட்டது.

ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பின், அணுகுண்டு எவ்வளவு ஆபத்தானது என்று உலக மக்கள் அறிந்துகொண்டாலும், உலக நாடுகளின் தலைவர்கள் திருந்தவில்லை. அமெரிக்கா, ரஷ்யாவில் தொடங்கி இந்தியா, பாகிஸ்தான் வரை ஒவ்வொரு நாடும் தங்கள் எதிரிகளை அழிக்க நூற்றுக்கணக்கான அணுகுண்டுகளைச் செய்து குவிக்கின்றன.  இன்னொருபுறம், அணுகுண்டுகளுக்கு இணையான அணு உலைகளை மின்சாரத் தேவைக்காக உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. உலகில் அணுசக்தி வல்லமை மிக்க நாடுகளிடம் உள்ள எல்லா அணுகுண்டுகள், அணு உலைகளையும் சேர்த்தால் உலகத்தை நூறு முறை அழிக்கலாம். இப்படி அழிவுசக்தியான அணுசக்தியை ஒரு நாடு பெறுவதைத்தான் 'வல்லரசு’ என்கின்றனர் அரசியல் தலைவர்கள். அப்படி ஒரு வல்லரசுப் போட்டியில்தான் இப்போது இந்தியாவும் இருக்கிறது. நாம் போர் வெறி பிடித்த வல்லரசு ஆக வேண்டுமா அல்லது மக்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தரும் நல்லரசு ஆக வேண்டுமா? நாளைய இந்தியாவைத் தீர்மானிக்கும் நம் கையில்தான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு