Published:Updated:

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

Published:Updated:
நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

சரத்... பரத்... பக்கிரி படக் காட்சிக் குப் பொருத்தமான 'நறுக் சுருக்’ கதைகளை  அனுப்புமாறு நம்ம வாசக சுட்டீஸ்களைக் கேட்டிருந்தோம். விதவிதமான கோணத்தில் கதைகளை அனுப்பி, 'நாங்களும் கதை எழுதுவோம்ல...’ என்று நம்மை திணற வைத்தார்கள். வந்த கதைகளில் சூப்பரான 6 கதைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் மூன்று இந்த இதழில்... மற்ற மூன்று அடுத்த இதழில்!

சரத், பரத் இருவருமே வசதியுள்ள குடும்பத்தினர். இருவரின் பெற்றோரும் இவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பார்கள். சரத், பெற்றோருக்குத் தெரியாமல் எதையும் செய்ய மாட்டான். வீண் செலவும் செய்யமாட்டான். ஆனால், பரத் தேவை இல்லாத செலவுகளைச் செய்வான். தவறான சிலரிடமும் நட்பாக இருந்தான். அவர்களில் ஒருவன் பீடி பக்கிரி. 'வயதுக்கு மீறிய நட்பு’ என்று சரத் கூறியும் பரத் கேட்கவில்லை. ஒரு நாள் பரத்திடம், ''என்னடா ஸ்கூல், வூடுன்னே இருக்கே... வெளியே போலாம் வா. உலகத்துல பார்க்க எவ்வளவோ இருக்கு'' என்றான் பக்கிரி. பரத்தும் அவனுடன் சென்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

கடைத் தெருவில் மாம்பழம் வாங்கிக் கொண்டிருந்த சரத், இவர்களைக் கவனித்தான். கடை வீதியைத் தாண்டியதும் ஒரு முட்டுச் சந்து. அங்கே ஒரு வேன் நின்றிருந்தது. சிலர் இருந்தார்கள். பக்கிரி அவர்களிடம், ''இதோ ஆளை கூட்டிட்டு வந்துட்டேன். பணத்தைக் கொடு'' என்றான். அப்போதுதான் 'இவர்கள் பிள்ளைகளைக் கடத்தும் கும்பல்’ என்று பரத்துக்குப் புரிந்தது. உடனே ஓட ஆரம்பித்தான். பக்கிரி துரத்தியபடி கடை வீதிக்கு வர, அங்கே போலீஸ் வேன் நின்றிருந்தது. பக்கிரியைப் பிடித்தார்கள்.

போலீஸுக்கு தகவல் தந்தது... வேறு யார்? நம்ம ஹீரோ சரத்துதான்! தன் நண்பனை நெருங்கிய பரத், ''ரொம்ப நன்றிடா!'' என்றான். அதற்கு சரத், ''நம் பெற்றோர் நாம் கேட்பதற்கு முன்னே நம் தேவைகளை நிறவேற்றும்போது ஏன் தெரியாத ஒருவரை நம்பவேண்டும். பெற்றோரிடம் வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டால் போதுமே. இனிமேல் இதுபோல் செய்யாதே! இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்றபடி, பரத்தின் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான்.

              -டி.பாரதி கண்ணன்

சரத்...பரத்...பக்கிரி !

'கடவுளே... காலையிலேயே கட்டையும் கையுமா பக்கிரி மாமூல் கேட்டு வந்துட்டானே... என்ன செய்றது?’ பரத்தின் மனம் கலவரமானது. உடனே சரத்தை செல்போனில் அழைத்து, ''பக்கிரி பஜாருக்கு வந்துட்டான்டா. இன்னும் வியாபாரமே பண்ணலே. கையில காசும் இல்ல. நீ வச்சிருந்தா கொண்டு வா. அழுது தொலைப்போம்.'' என்றான்.

''சரி, சரி... பயப்படாம நான் வர்ற வரை ஏதாவது சொல்லி சமாளி'' என்று கூறி போனை வைத்தான் சரத்.

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

வாயிலிருந்து நொடி நேரம் கூட பீடியை எடுக்கமாட்டான் பக்கிரி. பீடி வாயில் இருந்தாலும் பேச்சில் சிறு திணறல்கூட வராது. அதனால்தான் பக்கிரி, பீடி பக்கிரி ஆனான். தினமும் பஜாருக்கு தன் சகாக்களோடு வந்து எல்லோரையும் மிரட்டுவது... மாமூல் வசூலிப்பது என அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. பரத்தை நெருங்கிய பக்கிரி, ''பணத்தை எடுடா'' என்றான்.

''கையில காசு இல்ல. இதோ என் நண்பன் வந்திடுவான். வாங்கித் தந்துடறேன்'' என்றான் பரத்.

''நேத்து நைட் வரை யாவாரம் பண்ணின பணமெல்லாம் எங்கேடா?'' என்று மிரட்டியபடி பரத்தின் சட்டையைப் பிடித்துத் தூக்கினான். அவனது ஆட்கள் பழங்களைக் கீழே தள்ளிவிட்டார்கள். கோபமான பரத், சட்டென பக்கிரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடினான்.

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி

''டேய் என்கிட்டயே உன் வேலையைக் காட்டறியா?'' என்றபடி பக்கிரியும் கூட்டமும் விரட்ட, சரத் அங்கே வந்து சேர்ந்தான். 'அடடா! வர்றதுக்குள்ளே பரத் அவசரப் பட்டுட்டானே’ என்று சில நொடிகள் தலையில் கை வைத்துக் கொண்டவன், பக்கிரியின் குறுக்கே சென்று நின்றான். பணத்தை எடுத்து நீட்டியபடி, ''ஸாரி அண்ணே! அவனை ஒண்ணும் செய்துடாதீங்க'' என்றான். பணத்தைப் பிடுங்கிக் கொண்ட பக்கிரி, சரத்தின் இன்னொரு கையில் இருந்த பீடிக் கட்டைப் பார்த்தான். ''இதுவும் உங்களுக்குத்தான் அண்ணே'' என்றான். ''ம்... அந்த மரியாதை இருக்கட்டும். உன் நண்பனுக்கு சொல்லி வை'' என்றபடி நகர்ந்தான்.

எல்லாக் கடைகளிலும் வசூலை முடித்தபோது, பக்கிரியின் வாயிலிருந்த பீடி தீர்ந்து போய் உதட்டைச் சுட்டது. அந்த பீடியை எடுக்காமலேயே சரத்திடமிருந்து பறித்த பீடிக் கட்டைப் பிரித்து ஒன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். தன் சகாக்களிடமும் நீட்டினான். அவர்களும் எடுத்துக் கொண்டனர்.

மூன்று பேரும் ஒரு சேர பீடியைப் பற்ற வைத்ததுதான் தாமதம்... சுருண்டு விழுந்தார்கள். சரத் அந்த பீடிகளில் மயக்க மருந்தை தெளித்து இருந்தான். ''எப்பூடி?'' என்று பரத்தைப் பார்த்து கண்ணடித்தான்.

பக்கிரி கும்பல் கண் விழித்தபோது சிறையில் இருந்தார்கள்.

       -கு.ராகவன்

சரத், பரத் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். பொதுத்தொண்டு செய்வதில் மிக்க ஆர்வம் கொண்டவர்கள்.

பழக்கடையில் மாங்காய்களை 'கார்னட்’ கற்களைப் பயன்படுத்தி, செயற்கை முறையில் பழுக்க வைத்து, விற்பனை செய்வதை அறிந்தார்கள். அதைத் தடுக்க வேண்டும் என முடிவு எடுத்தார்கள். ''நாம் சென்றால் நம் பேச்சு எடுபடாது. இதுக்கு சரியான ஆள் பீடி பக்கிரிதான். அவனைப் பார்த்தால் எல்லோருக்கும் பயம்'' என்றான் சரத்.  பக்கிரியை அணுகி விஷயத்தைச் சொன்னார்கள். ''அண்ணே! உங்களைப் பார்த்து எல்லோரும் பயப்படறாங்க. அதே நேரம், சோம்பேறி, ரவுடி என்று சொல்கிறார்கள்'' என்றான் பரத். ''உங்களிடம் உடல் பலம் இருக்கு. இதை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினா ஊரும் பாராட்டும்'' என்றான் சரத்.

தன்னைக் கண்டாலே ஒதுங்கிப் போகும் மக்கள் மத்தியில் தன்னையும் ஒரு மனிதனாக நினைத்துப் பேசும் இவர்களை ஆச்சர்யமாகப் பார்த்த பக்கிரி, அவர்களுடன் கிளம்பினான்.

ஒரு கடையை நெருங்கினார்கள். பக்கிரி சென்ற நேரம் ஒருவர் பழங்களை பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார். ''சார், இந்தப் பழங்கள் வேண்டாம், வேறு கடைக்கு போங்க'' என்று அவரை அனுப்பி விட்டு, பழக்கடைக்காரரிடம் ''இந்தாப்பா... நீ எப்டி பழங்களெ பழுக்க வைக்றேன்னு  தெரியும். ஒழுங்கா அத்தனெ பழங்களையும் அழிச்சிடு, இல்லாட்டி அந்த வேலையெ நாங்களே செய்வோம்'' என்றான்.

''இவ்வளவு நாளா பணம்தானே கேட்டுட்டு இருந்தே.... இப்ப என்ன புத்தன் மாதிரி பேசறே?'' என்றபடி, அவன் கோபத்துடன் சண்டைக்கு வந்தான். 'என்ன நடக்குமோ...’ எனப் பயந்த சரத், பரத்திடம் 'உதவிக்கு யாரையாச்சும் கூட்டிட்டு வா’ என்றான். ஆனால், அதற்குத் தேவை இல்லை என்பது போல், பக்கிரி அந்தக் கடைக்காரனைப் புரட்டி எடுத்தான். ''பக்கிரி வேணாம்! இனிமே ஒழுங்கா பழங்களை விற்பனை செய்யறேன். என்னை மன்னிச்சுடு'' என்றான் கடைக்காரன்.

  மக்கள் கூட்டம் பக்கிரியை நெருங்கி ''கலக்கிட்டே பக்கிரி'' என்றார்கள். தள்ளி நின்று வேடிக்கை பார்த்த தன் சுட்டி நண்பர்கள் பக்கம் திரும்பி, ''நன்றி'' என்று சிரித்தான் பக்கிரி.

      -ஜி.ராமச்சந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism