Published:Updated:

வயல் to வண்டிக்கடை !

ஜீபாவின் வெங்காய ரிப்போர்ட்!

வயல் to வண்டிக்கடை !

ஜீபாவின் வெங்காய ரிப்போர்ட்!

Published:Updated:

பட்டுமாமா,
கே.யுவராஜன்

'ஜெர்மனிக்குப் போறது ஓகே... அந்த மாதிரி பெரிய ஆளுங்களை மட்டும்தான் மீட் பண்ணுவியா ஜீபா? சாதாரண ஆட்களை பேட்டி எடுக்க மாட்டியா?’ என்று ஒரு சுட்டி கேட்டு இருக்கான். நமக்கு எல்லோரும் சமமே!  மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம். இதில் முதலில் இருப்பது உணவு. ஓர் உணவுப் பொருள் உங்க கைக்கு வர்றதுக்கு முன்னாடி எத்தனை இடங்களைக் கடந்து வருது... அதில் எத்தனைப் பேரின் பங்களிப்பு, உழைப்பு இருக்கு தெரியுமா? சமீப காலமா தலைப்புச் செய்தியா இருக்கற வெங்காயம், விளையும் இடத்தில் இருந்து வீட்டுக்கு வர்ற வரைக்கும் கூடவே ஒரு பயணம் செய்தேன்.

வயல் to வண்டிக்கடை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பக்கத்துல இருக்கு எரசனம்பாளையம். சலசலத்து ஓடும் அமராவதி ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போனா, பலநூறு ஏக்கரில் விரிந்து கிடக்கு வெங்காயத் தோட்டங்கள். சாம்பார் வெங்காயம் என்கிற சின்ன வெங்காயத்துக்குப் பேர் போன பகுதி. அங்கே ரெண்டு ஏக்கரில் அறுவடை முடித்த வெங்காயக் குவியலை சுறுசுறுப்பா சிலர் சுத்தம் செய்துட்டு இருந்தாங்க. ''வா ஜீபா! வெயில்ல வந்திருக்கே... முதல்ல ஜில்லுனு இளநீர் குடி'' என்றார் சுப்பிரமணியம். இவர் ஓர் இயற்கை விவசாயி. அதாவது, ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் விவசாயம் செய்றவர். அவர் மனைவி வஞ்சிக்கொடி இளநீர் கொண்டு வந்து கொடுத்தாங்க.  

பிங்க் நிறத்தில் மணி மணியாக இருந்த வெங்காயக் குவியலில் இருந்து ஒரு வெங்காயத்தை எடுத்து, கையில வெச்சுகிட்டு சுத்தியும் பார்த் தேன். ''என்ன ஜீபா பார்க்கறே?'' என்று கேட்டார் வஞ்சிக்கொடி. ''தங்கம் ரேஞ்சுல இருக்கற வெங்காயத்தை இப்படி குவிச்சுப் போட்டிருக்கீங்களே... பாதுகாப்புக்கு போலீஸ் இருக்கான்னு பார்க்கறேன்'' என்றேன். ''நீ இருக்கறப்ப என்ன கவலை ஜீபா?'' என்ற சுப்பிரமணியம் விஷயத்துக்கு வந்தார்.

''தாராபுரம், உடுமலைப்பேட்டை, பொங்கலூர், ராசிபுரம், பெரம்பலூர் இதெல்லாம் சாம்பார் வெங்காயத்துக்கு பேமஸ் ஆன ஊர்கள். இங்கிருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். பெரிய வெங்காயமும் தமிழ்நாட்டில் விளையுது. ஆனாலும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா இங்கேதான் விளைச்சல் அதிகம். குறிப்பா, பெல்லாரி பெரிய வெங்காயத்துக்கு பேமஸ். வெங்காயத்தின் சாகுபடி காலம் அதிகபட்சம் 75 நாட்கள்தான் ஜீபா. வெங்காயம் ஒரு லாஜிக் இல்லா மேஜிக் பயிர். திடீர்னு விலை சரிந்து கேட்பதற்கே ஆளில்லாமல் ரோட்டில் கொட்டிய காலமும் உண்டு.  இப்படி காஸ்ட்லி பொருளாகும் காலமும் உண்டு'' என்றார்.

வயல் to வண்டிக்கடை !

''இதை எப்படி பயிர் செய்றீங்க?''

''சாம்பார் வெங்காயத்தை ரெண்டு விதமா பயிர் செய்யலாம். ஒண்ணு, விதை மூலம் செய்யும் நாற்றங்கால் முறை. அடுத்து நேரடி முறை. அதாவது, வெங்காயத்தை நேரடியாக பூமியில் நட்டு வளர்ப்பது. சின்ன வெங்காயம் பெரும்பாலும் இப்படித்தான் பயிர் செய்யப்படும். பெரிய வெங்காயத்தை நாற்றங்கால் முறையில் மட்டுமே பயிர் செய்ய முடியும்.  பயிர் செய்யப் பயன்படுத்தும் வெங்காயத்தை விதை வெங்காயம் என்பார்கள். விதை வெங்காயம் ஏக்கருக்கு 700 கிலோ வேண்டும். ஒரு ஏக்கருக்கு 7000 கிலோ மகசூல் கிடைக்கும். மூன்று மாதங்கள் பாதுகாக்கப்பட்ட பழைய வெங்காயம்தான் நடவுக்கு சிறந்தது. இது அதிகம் தண்ணீர் பாசனம் தேவைப்படுகின்ற குறுகிய காலப் பயிர். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில்தான் பயிர் செய்ய முடியும். 75 நாளில் மூன்று முறை, களை எடுக்கணும். மருந்து தெளிக்கணும். எழுபதாவது  நாளில் பிடுங்கிப் பார்த்தால், பல் பிரிந்து பிங்க் நிறத்தில் கோலிக் குண்டு சைஸில் இருக்கும். அறுவடை செய்து, காம்புகளை கிள்ளிய பின்பு களத்து மேட்டில் இப்படி குவிப்போம்'' என்றார்.

''அடேங்கப்பா! நாங்க அஞ்சு நிமிஷத்துல கடைக்குப் போய் வாங்கி வர்றதுல இவ்வளவு வேலை இருக்கா?'' என்றேன்.

மதிய நேரம்... வெங்காயத்தை விலைபேசி லாரியில் ஏற்றிச் செல்ல ஆட்களுடன் வந்தார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மொத்த வியாபாரி கனகராஜ். விவசாயிகள் இந்த மாதிரி வியாபாரிகளுக்கு மொத்தமாக கொடுத்துவிடுவார்கள். அவர்கள், தரம் பிரித்து மூட்டைகளாக்கி, எடை போடுவார்களாம். இப்போதும் அதேபோல் செய்தார்கள். வெங்காயத்தின் அளவைப் பொருத்து ஒரு மூட்டையில் ஐம்பதில் இருந்து எழுபது கிலோ வரை இருக்கும். ''இந்தப் பகுதியில் விளையும் வெங்காயம் அதிகமா கேரள மாநிலத்துக்குத்தான் செல்கிறது. அதற்கு அடுத்து சென்னை கோயம்பேடு போகும். சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடக்கும். நீ  கேரளாவுக்குப் போறதா இருந்தா லாரியிலும் வெளிநாட்டுக்குப் போறதா இருந்தா கப்பலிலும் ஏத்திவிடறேன்'' என்றார் கனகராஜ்.

''வேணாம் சாமி! சென்னைக்குப் போறேன்'' என்றேன். சுப்பிரமணியம் அண்ணனுக்கும் கனகராஜ் அய்யாவுக்கும் டாட்டா காட்டிட்டு, சென்னைக்குப் போற லாரியில் தொத்தி கிட்டேன்.   லாரி, கோயம் பேடு மார்க்கெட்டுக்கு நள்ளிரவு 12 மணிக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கே நிறைய லாரிகள் வரிசையா இருந்தது. கடையில சுடச் சுட பாலை குடிச்சுட்டு காத்திருந்தோம். இந்த லாரி உள்ளே போக இடம் கிடைச்சது.

வயல் to வண்டிக்கடை !

உள்ளே நுழைஞ்சா, படு சுறுசுறுப்புடன் வியாபாரிகள் லாரியில் வந்த பொருட்களை விலை பேசிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் பரபரன்னு மூட்டைகள் இறங்க ஆரம் பிச்சது. அங்கே பரணி என்பவர் இந்த மூட்டைகளை வாங்கிக் கொண்டார். ''எங்களை கமிஷன் வியாபாரிகள் என்று சொல்வார்கள் ஜீபா. கோயம்பேடு மார்க்கெட்டில் இப்படி நிறைய கமிஷன் வியாபாரிகள் இருக்கிறோம். காய்கறி, பழம் என்று எல்லாமே அன்றைக்கு வருகிற அளவு, அதற்கு அன்றைக்கு உள்ள தேவை... இதை வைத்துதான் விலை முடிவு செய்வாங்க. எல்லா கமிஷன் வியாபாரிகளுக்கும் இன்றைய விலை பற்றிய தகவல் கொஞ்ச நேரத்துல போயிடும். இன்னிக்கு சாம்பார் வெங்காயம் முதல் தரம் ஐம்பது ரூபாய்னு முடிவாகி இருக்கு. பெரிய வெங்காயம் கிலோ முப்பது ரூபாய். இது நாளைக்கு ஏறலாம்... இல்லே இறங்கலாம். இப்படி வாங்கி அப்படி கொடுக்கறதுதான் எங்க வேலை'' என்றார்.

வெடவெடன்னு குளிர ஆரம்பிச்ச அதிகாலை மூன்று மணியில் இருந்து சிறு வியாபாரிகள் குட்டி யானைகளில்... அதாங்க, டெம்போவில் வந்தார்கள். சென்னையைத் தவிர கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். தங்களுக்குத் தேவையான வெங்காயம், காய்கறிகள், பழங்கள், கறிவேப்பிலை என எல்லாவற்றையும் வாங்கி டெம்போவில் ஏற்றினார்கள். அவர்களில் அமிஞ்சி கரையைச் சேர்ந்த சிறுவியாபாரி உத்திரகுமரன், ''என்ன ஜீபா ரொம்பக் குளிருதா? நாங்க தினமும் இந்த மாதிரி விடியற் காலையிலதான் வந்து வாங்கிட்டுப் போவோம். அதை கடைகளுக்கு கொஞ்சம் லாபம் வெச்சுத் தருவோம். மழை, குளிர் எதுன்னாலும் எங்க ஷெட்யூல் மாறாது'' என்றார்.

அங்கே இருந்து கிளம்பி, ஒரு மளிகைக் கடைக்கு வந்தப்ப, எட்டு மணி. அந்த கடைக்காரர் ராமச்சந்திரன். ''என்ன ஜீபா டயர்டா இருக்கே... சரியா தூங்கலை போலிருக்கே?'' என்று கேட்டார். ''ஆமாங்க!'' என்று கொட்டாவி விட்டேன். அப்ப, ஒரு அம்மா... (அட! அவங்க பேரு பழனி யம்மாவாம்) ஒரு சுட்டியோடு கடைக்கு வந்து, வெங்காயத்தை வாங்கினாங்க. நான் எரசனம்பாளையம் விவசாயி சுப்பிரமணியம் அண்ணன் வயலில் தொட்டுப் பார்த்த வெங்காயம், கடைசியில் பழனியம்மா வீட்டு குக்கர்ல சாம்பாரா மாறப் போகுது.

''மதியம் வீட்டுக்கு வா ஜீபா, சுடச் சுடச் சாம்பார் சாதம் சாப்பிடலாம்'' என்றார் அந்த அம்மா. ''நான் சாப்பிட ஆரம்பிச்சா பத்து மூட்டை அரிசியாவது வேணும். பரவாயில்லையா? அட்ரஸைக் கொடுங்க'' என்றேன். கூட வந்திருந்த சுட்டி ரொம்ப உஷாரு... ''அட்ரஸ்தானே? குறிச்சுக்க ஜீபா... நெம்பர் நாலு, சென்னை மெயின் ரோடு, சென்னை குறுக்குச் சந்து, சென்னை'' என்று சொல்லிட்டுப் போனான். சாலையில் இறங்கி நடக்க ஆரம்பிச்சதும், தள்ளு வண்டியில் போய்ட்டு இருந்த ஒரு அண்ணாச்சி ''என்ன ஜீபா வெங்காயம் வேணுமா?'' என்று கேட்டார். ஜீபாவுக்கே வெங்காயமான்னு மனசுல நினைச்சுகிட்டே நடந்தேன்.

படங்கள்: என்.விவேக், ஜா.ஜாக்சன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism