Published:Updated:

இலை வடிவக் கடல் டிராகன் !

ரேஞ்சர் மாமா

##~##

இலை போன்ற உறுப்புக்களுடன் இருக்கும் ஒரு வகை மீன்... கடல் இலை டிராகன். இதன் விலங்கியல் பெயர், ஃபைகோட்யூரஸ் ஈக்வஸ் (Phycodurus eques)

ஆஸ்திரேலியக் கடல் பகுதிகளில் வசிக்கும் இவை பாறைகள், கடலின் தரைப்பரப்பில் உள்ள கற்பாசி மெத்தைகள், கடற் புல்வெளிகள் மற்றும் மணல் திட்டுகள் ஆகியவற்றில் தென்படும். 20 முதல் 24 செ.மீ. வரை வளரும்.

அழகிய ஆச்சரியமூட்டும் வடிவம்கொண்டது இது. இலை போன்ற இந்த உறுப்புக்கள் பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும். ஆனால், இந்த உறுப்புக்கள் மீனின் இடப்பெயர்ச்சிக்கு உதவி செய்வது இல்லை. இவை சுற்றுப்புறத்துக்கு ஏற்ப, தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

இந்த மீனுக்குப் பலவிதமான தனித் தன்மைகள் உண்டு. கடலில் மிதக்கும் நீர்த் தாவரங்களைப் போலவே இவற்றின் தோற்றம் இருப்பதால், இரைகளால் எளிதில் இவற்றைக் கண்டறிய முடியாது. இப்படி சுற்றுப்புறத்தைப் போலவே தோற்றம்கொண்டு இருப்பதை கேமோஃப்ளேஜ் (camouflage) என்பார்கள். எதிரிகளிடம் இருந்து இந்த கேமோஃப்ளாஜ் இவற்றைக் காப்பாற்றினாலும், இவற்றின் உடம்பில் உள்ள கூர்மையான நீளமான முட்களும் தற்காப்புக்குப் பயன்படுகின்றன.

இந்த மீனின் இரு கண்களும் ஒரே சமயத்தில் தனித் தனியாகச் சுழலும் ஆற்றல்கொண்டவை.

இலை வடிவக் கடல் டிராகன் !

மிக மெதுவாகவே நடமாடும் இயல்பு உடையவை. அப்படி நகரும்போது கடல் தாவரங்கள் கடலில் மிதப்பதைப்போல இருக்கும். தான் நகருவதை மறைக்கக்கூடிய ஆற்றல்கொண்ட மீன் வகை உலகிலேயே இது ஒன்றுதான்.

நீளமான குழல் போன்ற வாய் மூலம் இரைகளைத் தண்ணீருடன் உறிஞ்சிப் பிடிக்கும். வாயில் பற்கள் இல்லை. ப்ளாங்டன், ஷ்ரிம்ப் மற்றும் மைசிட்ஸ் போன்ற கடல்வாழ் உயிரினங்களையும் சிறிய வகை மீன்களையும் உணவாக உட்கொள்ளும்.

இவை இனப்பெருக்கம் செய்யும் முறை அதிசயமானது. பெண் மீன் பிங்க் வண்ணத்தில் 250 முட்டைகளை வரை இடும். அவை ஆண் மீனின் வால் பகுதியில் பாதுகாப்பாக செலுத்தப்படும். அங்கே முட்டைகள் கருவுறும். ஒன்பது வாரங்களுக்குப் பிறகு  குஞ்சுகள் வெளியே வர, ஆண் மீன் தன் வாலை அசைத்து உதவி செய்யும். சுமார் 5% முட்டைகள் மட்டுமே கடல் டிராகன்களாக உருப்பெறும். 28 வாரங்களில் பருவம் அடையும்.

புயல் காற்றில் எப்போதாவது கரை ஒதுங்கும் இவற்றை, மருந்துகள் தயாரிக்கவும் மீன் காட்சியகங்களில் வைக்கவும் மனிதர்கள் அள்ளிக்கொண்டு போகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு