Published:Updated:

நாங்களும் வெல்வோம் !

மின்னும் விடிவெள்ளிகள் !என்.ஜி.மணிகண்டன்

##~##

திறமைகள் எங்கும் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது, திருச்சி மாநகரில் மலைக்கோட்டை அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்புப் பள்ளி.

திருச்சி புனித அன்னை சபை சகோதரிகளால் 1987-ல் ஐந்து சுட்டிகளைக்கொண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று 150 குழந்தைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இங்கே உள்ள அனைவருமே சிறப்புக் குழந்தைகள் என்படும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

''பொதுவாக மனவளர்ச்சி குன்றியவர்கள் என்றால், அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்வதே பெரிய விஷயம் என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. அவர்களாலும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் தொடங்கப்பட்டதுதான் இந்த விடிவெள்ளி பள்ளி'' என்கிறார் பள்ளியின் முதல்வர் ஆரோக்கியமேரி.

''விடிவெள்ளியில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி கொடுக்கப்படுகிறது. அத்துடன் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுகிறது. இவர்களால் செய்யப்படும் கம்ப்யூட்டர் சாம்பிராணி, அலங்காரப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவை விற்பனைக்கு அனுபப்பட்டு, அதில் கிடைக்கும் பணத்தையும் இந்தக் குழந்தைகளின் தேவைக்குப் பயன்படுத்துகிறோம். இது தவிர, விளையாட்டிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பல பதக்கங்களைக் குவித்து இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சிகரமாக, சிறப்பு ஒலிம்பிக் வெற்றியைச் சொல்லலாம்'' என்கிறார்.

நாங்களும் வெல்வோம் !

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவர்களைப் போன்றவர்களுக்காக நடத்தப்படுகிறது சிறப்பு ஒலிம்பிக் போட்டி. இதில் 2008-ல் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து பேர் தேர்வாகினர். சந்திரபோஸ், ரோலர் ஸ்கேட்டிங்கில் இரண்டு தங்கங்களும் ஒரு வெள்ளியும் வென்றார். சாந்தி, வாலிபால் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். இவர் தொட்டில் குழந்தையாக திருச்சி புனித அன்னை சபைக்கு வந்தவர். ஜெயா டி.வி-யில் நடத்தப்பட்ட லிட்டில் மாஸ்டர் என்ற நடனப் போட்டியில் ஐந்து சுற்று வரை முன்னேறி வெற்றி வாகை சூடியவர். அடுத்து நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளுவதற்கு இப்போதே தயாராகி வருகிறார்கள் விடிவெள்ளி மாணவர்கள்.

நாங்களும் வெல்வோம் !

''எங்கள் அமைப்பில் 20 சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு, குழந்தைகளுக்குக் கல்வியும் பயிற்சிகளும் அளித்து வருகிறோம். ஒவ்வொரு மாணவரின் ஐ.க்யூ. அளவை உயர்த்துவதற்குத் தனித்தனியாகவும், குழுவாகவும் வகுப்புகள் நடத்துகிறோம்'' என்கிறார் சிறப்புக் கல்வியாளர் கலா மேரி.

''சிறப்புச் சிறுவர்களை மேம்படுத்துவதை மட்டுமே முழுமூச்சாகக் கொண்டு இயங்கிவரும் எங்கள் நிறுவனத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. மகத்தான இந்தச் சாதனை, கருணை உள்ளம்கொண்ட நன்கொடையாளர்களின் பங்களிப்பால்தான் சாத்தியம் ஆனது'' என்கிறார் பள்ளியின் முதல்வர்

நாங்களும் வெல்வோம் !

ஆரோக்கியமேரி.

இந்தப் பள்ளியில் சேரும் மனவளர்ச்சி குன்றிய ஏழைச் சிறார்களின் பெற்றோரிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவது இல்லை. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அட்டையாள அட்டை இருந்தாலே போதும் என்கிறது நிர்வாகம். இவ்வாறு கல்விச் சேவையில் வியத்தகு பணியாற்றும் விடிவெள்ளிக்குச் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான விருதை 2008-ல் தமிழக அரசு வழங்கி உள்ளது. மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற முருகேசன் என்ற மாணவனுக்கு தமிழக அரசு 'இளம் திரு’ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளது.

சிறிய தோல்விகளுக்கும் தங்களிடம் இருக்கும் சிறிய குறைகளுக்குமே வருத்தப்பட்டு, 'கடவுள் நம்மை இப்படிப் படைத்துவிட்டாரே’ என்று சிலர் நொந்துகொள்வார்கள். அவர்களுக்கு இந்த விடிவெள்ளி மாணவர்கள் சொல்லும் செய்தி...'முயற்சி செய்தால் சாதனை செய்வதற்கு எதுவுமே தடை கிடையாது’ என்பதே.

சிறப்புக் குழந்தைகளின் ஆலயமாகத் திகழும் விடிவெள்ளி பள்ளிக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் 0431-2702281 எண்களில் தொடர்புகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு