Published:Updated:

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் மகா.தமிழ்ப் பிரபாகரன்

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் மகா.தமிழ்ப் பிரபாகரன்

Published:Updated:
##~##

பெரியார்... சமுதாயத்தில் சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்காகவும்  பெண் விடுதலைக்காகவும் அயராது உழைத்த புரட்சி வீரர். அவர் இன்று நேரில் வந்தால்...

தருமபுரி மாவட்டம், அரூர் சின்னாங்குப்பத்தில் உள்ள குறிஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்துக்குள், பள்ளிப் பேருந்து சின்னச் சின்னப் பெரியார்களை  இறக்கிவிட்டது. ஒரு கையில் ஊன்றுகோலையும் இன்னொரு கையில் கண்ணாடியையும் லாகவமாய்ப் பிடித்துக்கொண்டு நடை பழகும் குழந்தைகளைப்போல் நடந்தார்கள் பெரியார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது எதிரே வந்த ஒரு பெரியவர்,''அடடே... பெரியார்களா..! ரொம்ப நல்லா இருக்கு. நான்கூட சின்ன வயசுல பெரியார்கூட உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கேன்'' என்று தன் பழைய நினைவுகளில் ஒன்றைச்  சொல்லிவிட்டுப் பெருமிதத்தோடு நடந்தார்.

''டேய், இவரு பெரியாரோடு உக்காந்து சாப்பிட்டாராம்டா...'' என்று ஒரு பெரியார் மற்றொரு பெரியாரிடம் ஆச்சரியம் கலந்து சொல்ல, ''போடா... எங்க தாத்தா, கபடியே ஆடி இருக்காரு'' என்று சொல்லிக் கண்சிமிட்ட, அங்கே சிரிப்பலைகள் எழுந்தன.

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

வேட்டியில் வந்து இருந்த பெரியார்கள், ''இங்கே பாருடா இவன் கைலி கட்டி வந்திருக்கான்'' என்று கிண்டல் செய்தனர். அதைப் பார்த்துக்கொண்டு நின்ற பெரிய வகுப்பு மாணவன் ஒருவன், ''கைலியில் வந்தாலும் வேட்டியில் வந்தாலும் பெரியாரு பெரியாருதான்'' என்று பாட்டுப் பாடினான். அதற்கு எல்லோரும் கை தட்டினார்கள்.

பெரியார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, புரட்சிக் களமாகியது பள்ளி மைதானம்.

ஒரு பெரியாரை மடக்கிய தமிழ் ஆசிரியர், ''பெரியாரே... உங்களுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?'' என்று கேட்டார். சின்னப் பெரியார் கண்ணாடியைச் சரிசெய்தபடி ''தெரியாதே ஐயா!'' எனப் பம்மினார்.

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

''பரவாயில்லை. இப்ப தெரிஞ்சுக்கங்க. ராமசாமி என்பதுதான் அவரது சொந்தப் பெயர். பெண் அடிமைத்தனம் குறித்துப் பெருமளவில் பிரசாரம் செய்ததற்காக, அவருக்கு மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் 'பெரியார்’. பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. இனி யார் கேட்டாலும் மறக்காம சொல்லணும். சரியா?'' என்றதும், ''மறக்கவே மாட்டேன் சார்'' என்றார் அந்தப் பெரியார்.

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

விளையாட்டு வேளையில்... ஒரு மாணவன் ஃபுட்பால் எடுத்துக்கொண்டு போக, ''அண்ணே... நானும்'' என்று ஒரு பெரியார் பந்தை வாங்கி உதைக்க, எல்லாப் பெரியார்களும் சேர்ந்துகொண்டார்கள். பெரியார்களாக இருப்பவர்களைத் திட்ட மனம் வராத அந்த மாணவன், பந்தைக் கொடுத்துவிட்டுத் தள்ளி நின்றுகொள்ள, கையில் வைத்து இருந்த ஸ்டிக்கால் ஒரு பெரியார் பந்தை அடிக்க, அதைப் பிடிக்க ஓடிய இன்னொரு பெரியார், தான் கட்டி இருந்த கைலியில் தடுக்கிக் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் எழுந்தவர், ''இந்தக் கூட்டத்துல யாரோ ஒருத்தன் கால வாருறாண்டா. அவன்கிட்ட எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்'' என்று ஆவேசமாகப் பேசியதும் அனைவரும் கேலியாகச் சிரித்தனர். அவனும் வெகுளியாய்ச் சிரித்து, விழுந்ததை மறந்தான்.

சற்றுத் தள்ளி, ஒரு பெரியார் தலைமையில் கூட்டம் கூடியது. அங்கே... ''துணிவுகொள்ளுங்கள் சுயநலம் கருதாமல் தொண்டாற்றத் துணிவுகொள்ளுங்கள்'' என்று ஒருவர் முழங்க,

''ஆணைப் போன்று அனைத்தும் பெண் தடை இன்றிப் பெற வேண்டும்'' என்று மற்றொரு பெரியாரும்,

''பெண்கள் படித்துவிட்டால் நாடும் சமுதாயமும் உயரும்'' என்று மற்றொரு பெரியாரும் முழங்கியபோது, மீண்டும் ஒரு போராட்டத் துவக்கமாக அந்த இடம் தோன்றியது.

கொஞ்சம் சீரியஸாகச் சென்றுகொண்டு இருந்த சூழ்நிலையை ஒரு பெரியார் கலகலப்பாக்கினார். பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தையைக் குரலை உயர்த்திச் சொன்னார்... ''வெங்காயம்''.  'வெங்காயத்தை உரித்துக் கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே 'வெங்காயம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்று தாம் ஏற்கெனவே ரிகர்சல் செய்தபடி சரியாகச் சொல்ல, அதுவும் சீரியஸான மேட்டர் ஆகிப் போனது.

இப்படிப் பகுத்தறிவுப் பகலவனை நேரில் காட்டியதுடன், பெரியாரின் சிந்தனைகளையும் பள்ளியில் விதைத்தனர் சின்னப் பெரியார்கள்.

அவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் !

வருங்கால மாணவர்கள் கற்க வேண்டிய கல்வி பல இருப்பினும் பெரியாரும் படிக்க வேண்டிய கல்வியே!

அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் கல்விச்சாலைகளில் ஒன்று, சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி. ஆங்கில அறிவுடன், நாளும் வளரும் நுட்ப அறிவியல் துணையோடு கற்பித்தலும், சிறந்த கல்வியோடு ஒழுக்கமும் ஆரோக்கிய வாழ்க்கைக்கான உடற்பயிற்சியும் அளித்தலே எங்கள் நோக்கம் என்கிறார் பள்ளித் தலைவர் தமிழ்மணி.

பெரியார்...

தமிழ் மண்ணில் மானுடத்தை விதைத்த மகத்தான பெரியவர்தான் பெரியார். ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்பது இவர் இயற்பெயர்.செப்டம்பர் 17,1879-ல் பிறந்தர். தாய், சின்னத் தாயம்மாள். தந்தை, வெங்கட்ட நாயக்கர். சிறு வயதில் இவரது காசிப் பயணமே இவரைக் கடவுள் மறுப்பாளர் ஆக்கியது. பின்னாளில் சாதிய-சமுதாயப் பாகுபாடுகளையும், பெண் அடிமைத்தனத்தையும் ஒழிக்க சுயமரியாதை இயக்கத்தையும் திராவிடக் கழகத்தையும் உருவாக்கி உழைத்தவர். ’மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என உரக்கச் சொன்னவர். சாதியும் மதமும் கடவுளுமே மூடத்தனத்தின் பிறப்பிடம் என்ற இவருக்கு, 'புத்துலகத் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என்ற விருதை யுனெஸ்கோ வழங்கி உள்ளது. வைக்கம் போராட்டம், தீண்டாமைக்கு எதிராகக் கேரளாவில் பெரியார் நடத்திய மிகப் பெரிய போராட்டம். அதனாலே இவருக்கு வைக்கம் வீரர் என்ற பெயரும் உண்டு. டிசம்பர் 24,1973-ல் தன் 94-ஆம் வயதில் மறைந்த தந்தை பெரியாரை ஒரு பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism