Published:Updated:

ஆச்சர்யம் தரும் எச்சிட்னா !

ரேஞ்சர் மாமா

பிரீமியம் ஸ்டோரி
##~##

 முள்ளம்பன்றி மற்றும் எறும்புத்தின்னியின் இயல்புகள் இணையப் பெற்றதுதான் எச்சிட்னா (Echidna) என்னும் விலங்கு. இதன் விலங்கியல் பெயர் டாச்சிக்ளோஸஸ் அக்யூலிடஸ் (Tachyglossus aculeatus). ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா பகுதிகளில் வசிக்கிறது. பாலூட்டி வகையைச் சேர்ந்தாலும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் விலங்குகள் உலகிலேயே இரண்டுதான். அதில் இதுவும் ஒன்று. மற்றொன்று பிளாடிபஸ் என்னும் விலங்கு.

பாறைகள், குகைகள், புதர்கள் போன்ற இடங்களில் வசிக்கும். இதன் நீளம் 36 செ.மீ. முதல் ஒரு மீட்டர் வரை. எடை இரண்டு முதல் ஏழு கிலோ. 10 செ.மீ நீளம்கொண்ட வாலும் இருக்கும். 50 ஆண்டுகள்கூட உயிர் வாழும். எறும்புகள், கரையான்கள் மற்றும் பூச்சி புழுக்கள்தான் இதனுடைய உணவு. தனது கூர்மையான மோப்ப சக்தியின் மூலம் கண்டறிந்து, தரையைத் தோண்டி இரைகளைப் பிடிக்கும்.

முகத்தில் இருக்கும் நீண்ட உறுப்பு, மூக்கும் வாயும் இணைந்து உருவானது. நீளமான வழவழப்பான நாக்கு இருக்கும். நாக்கை எறும்புப் புற்றுக்குள்விட்டதும், நூற்றுக்கணக்கில் எறும்புகள் அதில் ஒட்டிக்கொள்ளும். பிறகு நாக்கை இரையோடு சேர்த்து உள்ளே இழுத்துக்கொள்ளும். பற்கள் கிடையாது. எனவே, கடினமான தாடைகளில் அரைத்து உணவை விழுங்கும்.

ஆச்சர்யம் தரும் எச்சிட்னா !

ஒரு முட்டைதான் இடும். முட்டையின் ஓடு மென்மையாகவும் தோல் போன்றும் இருக்கும். தன்னுடைய உடம்பிலேயே உள்ள பை போன்ற பகுதியில் முட்டையை வைத்துப் பாதுகாக்கும். 10 நாட்களில் முட்டை பொரித்துக் குட்டி எச்சிட்னா வெளிவரும். குட்டி எச்சிட்னாவுக்கு பக்கிள் (puggle) என்று பெயர். பாலூட்டியாக இருந்தாலும் ஆச்சர்யமான விஷயம், எச்சிட்னாவுக்குக்குப் பாலூட்டும் காம்புகள் கிடையாது. தாயின் உடலில் பால் ஊறும் இரண்டு சிறு திட்டுக்களில் (patches) உள்ள துளைகளில் இருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்.

தாயின் வயிற்றில் இருக்கும் பையிலேயே சுமார் 45 நாட்கள் குட்டி வசிக்கும். பிறக்கும்போது முட்கள் இல்லாமல் இருக்கும். உடம்பில் இருக்கும் உரோமங்கள் முட்களாக மாற ஆரம்பிக்கும். அதன் பின்னர் தாயின் வயிற்றுப் பையில் இருந்து அதன் வசிப்பிடம் மாறும். தாய் எச்சிட்னா, ஒரு வளை தோண்டி அதில் தனது குட்டியை விடும். ஏழு மாதம் வரைகூடக் குட்டிக்குப் பால் கொடுப்பது உண்டு.

ஆபத்துக் காலங்களில் இது பயன்படுத்தும் உத்தியும் வியப்பானது. தனது உடலையே ஒரு பந்துபோலச் சுருட்டிக்கொள்ளும். இதன் எதிரிகள் அந்த முள் பந்தின் மேல் பட்டுக் காயம்பட விரும்பாமல் விலகிச் சென்றுவிடும்.

ஆஸ்திரேலியாவின் ஐந்து சென்ட் நாணயத்தின் ஒரு பக்கத்தில் இதன் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும். 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது அடையாளச் சின்னமாக இருந்த பெருமையும் எச்சிட்னாவுக்கு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு