Published:Updated:

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

சரா,ஓவியம்:முத்து படங்கள்: எல்.ராஜேந்திரன், வி.ராஜேஷ், ரா.நரேந்திரன்

##~##

''ஒரு நாள் தேம்பித் தேம்பி அழுதுட்டு இருந்தேன். நம்ப மாட்டீங்க... என் கண்ணீரைத் துடைச்சான் டூடூ!'' -யஜுர்வினா வியப்புடன் குறிப்பிடும் டூடூ, அவர் வளர்க்கும் நாய்க்குட்டி. ஆம், செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் மகிழ்ச்சி மட்டுமல்ல; ஆறுதலும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் வளர்ப்பதற்குப் பொருத்தமான செல்லப் பிராணி, நாம் 'பப்பி’ என்று செல்லமாக அழைக்கும் நாய்க்குட்டிகள்தான்.

கோவையில் எட்டாம் வகுப்பு படிக்கும் யஷ்வந்த் டிராவிட், மூன்று ஆண்டுகளாக இந்திய வகை செல்லத்தை வளர்த்துவருகிறார். அதுதான் அவரது க்ளோஸ் ஃபிரெண்ட். ''என் செல்லத்தின் பெயர் ரோஸி. அதுதான் எனக்கு உயிர். அதுவும் என்னைவிட்டு எப்பவும் பிரியாது.  ரோஸி, குட்டியா வீட்டுக்கு வந்தப்ப அதுக்கு எதுவுமே தெரியாது. முதல்ல டாய்லெட் ஹேபிட் சொல்லிக் கொடுத்தேன். அப்புறம், தமிழ்லேயே அதுகூடப் பேசுவேன். இப்ப, நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கிட்டு செய்யும். என்னை டிஸிப்ளினா ஆக்கியதே ரோஸிதான்'' என்கிறார்.

யஷ்வந்த் இருப்பது ஃபாரஸ்ட் கேம்ப் பகுதியில். ''இங்கே சந்தன மரங்கள் எல்லாம் இருக்கு. இரவு நேரங்களில் யாராவது வெளி ஆள் நுழைஞ்சா, உடனே ரோஸி குரைக்க ஆரம்பிச்சுடும். எங்க ஹவுஸிங் போர்டுல எல்லாரும் உஷார் ஆகிடுவாங்க'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

நெல்லையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி யஜுர்வினா டூடூ என்ற லேப்ரடார் நாயையும், குல்ஃபி என்ற பக் வகை செல்லக் குட்டியையும் வளர்க்கிறார்.

''இதுல 'டூடூ’ சீனியர். அது வந்து சேர்ந்த மூன்று மாதத்துக்குப் பிறகு குல்ஃபியைக் கொண்டுவந்தோம். இவங்க ரெண்டு பேரும் என்னிடம் காட்டும் அன்புக்கு அளவே இல்லை. எங்க தெருவில் ஐந்து நாய்கள் இருக்கு. அதுங்களையும் தத்து எடுத்து வளர்க்கிறேன். சாப்பாடு நேரத்துல கரெக்டா வீட்டு வாசலுக்கு வந்துடுவாங்க. வீட்டுல டூடூவும் குல்ஃபியும் என்னோட பாடிகார்ட்ஸுன்னா, வெளியில் இந்த ஐந்து பப்பிகளும்தான் பாதுகாப்பு'' என்கிறார் யஜூர்வினா.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

''ஒரு தடவை அப்பா, டூடூவைக் கூட்டிட்டு காரில் உறவினர் வீட்டுக்குப் போனார். வழியில் காரை ஓரமாக நிறுத்தி, எதிர்புறம் இருந்த கடைக்குப் போனார். ஜன்னல் வழியாக குதித்த டூடூ, அப்பா பின்னாலேயே போச்சு. அப்போ, ரோட்டின் ரெண்டு பக்கமும் நிறைய வண்டிகள் வந்துச்சு. நல்ல வேளை அப்பா பார்த்ததால், ஆபத்து இல்லாமல் டூடூவைக் கூட்டிட்டு வந்தார். நம் செல்லங்கள் நம்மைத் தவறாமல் ஃபாலோ பண்ணும். அதனால், எப்பவும் கவனம் தேவை'' என்று அனுபவ ஆலோசனை சொல்கிறார்.

''சில ஆண்டுகளுக்கு முன்புவரை, யஜுர்வினா பயங்கர டென்ஷன் பார்ட்டி. தொட்டதுக்கு எல்லாம் கோபப்படுவாள். இப்போ சுத்தமா மாறிட்டாள். பெட் அனிமல்ஸ் மீதான ஈடுபாடுதான் அதுக்குக் காரணம்'' என்கிறார் யஜுர்வினாவின் அம்மா மந்த்ரா பெருமையாக.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

கோவையில் செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர் செல்வராணி. இவர் தனது பிள்ளைகளுக்காக பப்பிகளை வளர்க்கிறார். அதில் கிடைத்த அனுபவத்தில் பெட் ஃபுட் நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார்.

''எங்கள் வீட்டுச் சுட்டிகளான சஞ்சய் குமாருக்கும் ஸ்ரீராமுவுக்கும் எந்த வகை நாய்க்கு எந்த மாதிரியான உணவு தரணும்னு முழுமையாகத் தெரியும். அவங்களோட நண்பர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டாங்க. இவங்களைப் பார்த்து, பக்கத்து வீட்டு மேக்னாவும் ஹர்ஷிதாவும் பெட் வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.'' என்கிறவர் மேலும் பல விஷயங்களைச் சொன்னார்.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

''இப்போது எல்லாம் சுட்டிகள் ஓடி ஆடி விளையாடுறது குறைஞ்சுப்போச்சு. பெட்ஸ்கூட விளையாடிட்டு படிக்கப் போனா, அவங்களால நூறு சதவீதம் கவனத்தோட படிக்க முடியும். நிறைய வீடுகளில் சுட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்குத் துணையாக இருப்பதற்கு பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் பெட்ஸ்தான்.

ஹர்ஷிதா வீட்டில் அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போகிறவங்க. அதனால, அவள் ரொம்பத் தனிமையா உணர்ந்தாள். படிப்பிலும் நல்லா ஸ்கோர் பண்ண முடியலை. ஆனால், பெட் வளர்க்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. இப்ப நல்ல மார்க் எடுக்கிறாள். எப்பவுமே சந்தோஷமா இருக்கிறாள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சுட்டிகளைப் புத்திசாலிகளாக ஆக்கும் வல்லமையும் பெட் அனிமல் வளர்ப்புக்கு உண்டு'' என்கிறார் செல்வராணி.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

செல்லப் பிராணிகள் வளர்ப்பது, சுட்டிகளுக்கு உளவியல் ரீதியில் பல நன்மைகளைத் தருகிறது என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பி.பி.கண்ணன்.

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !
செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !

''பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆனால், இயற்கைக்குப் பக்கத்தில் வாழ்வதுதான் மனித மனங்களுக்கு ஏற்றது. இதற்கு, மிகவும் துணையாக இருக்கக் கூடிய விஷயம் செல்லப் பிராணிகள் வளர்ப்பு. நமக்குத் தகுந்த செல்லப் பிராணியை வளர்ப்பதன் மூலம் இயற்கையுடன் ஒன்றி வாழும் அனுபவத்தைப் பெறுகிறோம்.  செல்லங்களை வளர்ப்பதால் தன்னம்பிக்கை, சுயமரியாதை, கருணை உள்ளம் மிகுந்தவர்களாக சுட்டிகள் வளர்கின்றனர் என்று உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஓர் உயிரினம் பிறப்பது, வளர்வது, இறப்பது என அனைத்து நிலைகளையும் சுட்டிகள் தாங்களாவே அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படும் மனப்பக்குவத்தை அளிக்கிறது. குறிப்பாக, ஒரு நாய்க்குட்டி என்ன யோசிக்கிறது, என்ன நினைக்கிறது என்று அதன் நிலையில் இருந்து சிந்திக்கும் திறன் பெறுகின்றனர். இதுவே எதிர்காலத்தில் சக மனிதர்களின் நிலையில் இருந்து யோசித்து உணரும் மனப்பான்மையைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. மொத்தத்தில், பிறர் மீது அன்பும் கருணையும் காட்டுவதற்கும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு துணை நிற்கின்றன. எனவே, செல்லப் பிராணிகளை வளர்க்க சுட்டிகளுக்குப் பெற்றோர் ஆதரவு தர வேண்டும்'' என்கிறார்.

நமக்கு இவ்வளவு நன்மைகளைத் தருகின்ற செல்லங்களை வளர்த்து உள்ளம் மகிழலாமே!

செல்லம் வளர்க்கலாம் உள்ளம் மகிழலாம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு