பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஹாய் ஜீபா... ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வட்டங்கள் இருக்கே அது எதற்கு?''

   -ரா.நந்தினி, திருச்சி.

''இந்தச் சின்னம் 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாகப் பயன் படுத்தப்பட்டது. ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கும் இந்த ஐந்து வளையங்களும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது. விளையாட்டின் மூலம் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை உணர்த்துவதே இதன் நோக்கம். தவிர, இந்த ஐந்து வளையங்களின் நிறங்களான நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகியவை நாடுகளைக் குறிப்பிடுகின்றன. அதாவது, எல்லா நாடுகளின் தேசியக்கொடிகளிலும் இந்த ஐந்து நிறங்களில் ஏதாவது ஒரு நிறம் கண்டிப்பாக இருக்கும்.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... 'உனக்கு பாம்புக் காதுடா’னு சொல்றாங்களே... பாம்புக்கு அவ்வளவு துல்லியமாக் கேட்குமா என்ன?''

   -பெ.மகேஸ்வரன், கோயம்புத்தூர்.

''அதை ஏன் 'கேட்கறே’ மகேஸ்... உயிரினங்களில் பாலூட்டிகளுக்குத்தான் சிறப்பான காதுகளும் காது மடல்களும் உண்டு. ஊர்வனவற்றுக்கு அப்படிக் கிடையாது. 'மாண்டிபுலார்’ என்ற ஓர் அமைப்பு மட்டுமே அவற்றுக்கு இருக்கும். அதன் மூலம் கொஞ்சமாக ஒலியைக் கேட்கும். ஆனால், அந்த அமைப்பும் சுத்தமாக இல்லாத ஓர் ஊர்வன வகையைச் சேர்ந்தது பாம்பு. அப்புறம் ஏன் இப்படி ஓர் உதாரணம் சொல்றாங்க? அங்கேதான் இருக்கு விஷயம்... பாம்புகளுக்கு அவற்றின் கபால எலும்புகளுக்கு அருகே 'குவாட்ரேட்’ என்ற ஓர் உறுப்பு இருக்கு. அதுதான் சத்தத்தை உள்ளுணர்வாக உணர்த்துகிறது. அதாவது, சத்தத்தைக் கேட்க முடியாமலே உணர்ந்துகொள்வது எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். அந்த ஆச்சர்யத்துக்குதான் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.''

''டியர் ஜீபா... நாம் படிக்கும்போது லைட் வெளிச்சம் எப்படி இருக்க வேண்டும்?''

    -எஸ்.ஐஸ்வர்யா, ஊட்டி.

''ரொம்ப நல்ல கேள்வி ஐஸ்வர்யா! நிறையப் பேர் விளக்கின் திசைக்கு முன்னாடி உட்கார்ந்து படிப்பாங்க. அது சரியில்லை, ஏன்னா... விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் முழுவதும் புத்தகத்தில் படுகிறபோது அதில் பாதிக்கு மேல் எதிர்ப்பட்டு நம் கண்களை அடையும். இதனால், அதிகமான ஒளிக்கதிரைச் சந்திக்கும் கண்கள் சுருங்கும். அப்போது நாம் படிப்பதற்காக விழித்திரையை அதிகமாக விரிக்கிறோம். இப்படித் தொடர்ந்து செய்வது கண்களுக்கு நல்லது இல்லை. இதற்கு மாறாக, விளக்கு வெளிச்சம் நம் முதுகுப் பக்கத்தில் இருந்து வரும் வகையில் வைத்துப் படிக்கும்போது, கொஞ்சம் ஒளிக்கதிர்கள் வேறு பொருட்களிலும் சிதறி, தேவையான அளவு மட்டுமே புத்தகத்தில் பட்டு எதிரொளிக்கும். ஸோ, விளக்கு பின்னாடி இருக்கட்டும்.''

''ஹாய் ஜீபா... கைரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்கிறார்களே அது நிஜமா?''

     -கே.கே.கார்த்திகேயன், ஓரைக்கால்பாளையம்.

''ஒரு மனிதனின் உடலில் பிறப்பில் இருந்து இறப்பு வரை மாறாமல் இருப்பவைவ  கைரேகைகள். குற்றங்கள் நடக்கும் இடங்களில் கிடைக்கும் கைரேகைகள்தான் போலீஸாருக்குத் துப்பு துலக்குவதில் மிகப் பெரிய உதவியாக இருக்கின்றன. இந்தக் கைரேகைகளின் அமைப்பை நிபுணர்கள் நான்கு வகைகளாகப் பிரித்துவைத்து இருக்கிறார்கள். இதே அடிப்படையில் தான் ஜோதிடமும் சொல்லப்படுகிறது. அதாவது, கைரேகை அமைப்பின் வகையை வைத்து ஒருவரின் குணம் மற்றும் செயல்கள் எப்படி இருக்கும் எனக் கணிக்கிறார்கள். மனிதர்களிடம் இருக்கும் பல்வேறு மன நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. ஆனால், ஜோதிடத்தை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்த முற்பட்டால் அதைவிட மூடநம்பிக்கை வேறு இல்லை''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... சாப்பிட்டு முடிச்சதும் தூக்கம் கண்களைச் சொக்குதே இது ஏன்?''

     -ந.பகவத், கன்னியாகுமாரி.

''நம் உடம்பில் உள்ள உறுப்புகள் வேலை செய்ய ரத்தத்தின் பங்களிப்பு அவசியம். அதுதான் உடல் முழுவதும் ஓடி ஓடி உறுப்புகளின் செயல் பாட்டுக்கான சக்தியைக் கொடுக்கிறது. நாம் சாப்பிட்டு முடித்ததும் இரைப்பையில் அதிகமான உணவு இருக்கும். அதைச் செரிக்கவைக்கும் வேலைக்காகப் பெரும்பாலான ரத்தம் இரைப்பைக்குப் போய்விடும். அதனால், மூளை உட்பட அனைத்து உறுப்புகளிலும் குறைந்த அளவே ரத்தம் ஓடும். எனவே, அவற்றின் செயல்திறன் குறைந்து இருக்கும். அளவான சாப்பாடு, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னை இருக்காது. இல்லை என்றால், லஞ்ச் டைமுக்கு அப்புறம் வருகிற பீரியடில் டீச்சர் பாடம் நடத்தும்போது கண்கள் சொக்கும்தான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு