Published:Updated:

ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி !

ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி !

ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி !

'எதிர்கால சமுதாயம் பண்போடு வளரவும் வரலாற்றை அறிந்ததாக விளங்கவும் செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள்.’

இப்படி ஓர் அறிமுகத்துடன் இணையதளத்தில் ப்ளாக் (வலைப்பதிவு) எழுதிவருகிறார், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 74 வயதுப் பாட்டி ருக்மணி சேஷசாயி. 30 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். 50 ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர். சுட்டிகளுக்காக இவர் இதுவரை 27 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

'பாட்டி சொல்லும் கதைகள்’ என்ற பெயரில் இவர் எழுதிவரும் ப்ளாக் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புதுக் கதையைத் தவறாமல் அப்டேட் செய்து வருகிறார். இதுவரை இவரது ப்ளாக் பக்கங்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை புரட்டப்பட்டு உள்ளன.

''மாணவர்களிடம் இப்போது பாடங்களைத் தாண்டிய புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்துபோய்விட்டது. அதேவேளையில், அவர்கள் எந்த நேரமும் கம்ப்யூட்டரையும் இணையதளத்தையும் பயன்படுத்திவருவது என் கவனத்தை ஈர்த்தது. அப்போதுதான், இணையத்திலேயே எழுதலாம் என்ற எண்ணம் உதித்தது.

எனக்கு ஒரு ப்ளாக் உருவாக்கித் தரும்படி என் பேரனைக் கேட்டேன். அவனும் உடனே உருவாக்கிவிட்டான். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷன் மூலம் தமிழில் டைப் செய்து கதை எழுதத் தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து எல்லாம் பலரும் கதைகளைப் படித்துவிட்டுக் கருத்து தெரிவிப்பார்கள்'' என்று சொல்லும் ருக்மணிப் பாட்டியின் பேச்சில் அத்தனை சந்தோஷம்.

ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி !

இவரது ப்ளாக்கில் உள்ள திருக்குறள் கதைகள் அத்தனையும் சூப்பர் ஹிட்! திருவள்ளுவர் கூறிய வாழ்க்கைத் தத்துவங்களைச் சுவாரசியமானக் கதைகளாகத் தருகிறார். புராணக் கதைகளையும் எளிமையாகச் சொல்கிறார். இவரது எழுத்துப் பணியைச் சக வலைப்பதிவர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர். சென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவில் இவரைக் கௌரவித்து இருக்கிறார்கள்.

''நம் நாட்டின் வரலாற்றுப் பெருமைகளையும் கலாசார மேன்மைகளையும் கதைகள் மூலம் சொல்கிறேன். இன்றைய சிறுவர்களின் உலகத்தைப் பிரதிபலிக்கும் கதைகளையும் எழுதுகிறேன். சுட்டிகளை வாசிப்புதான் மேம்படுத்தும். அதற்கு உதவியாக இருப்பதில் மிகவும் திருப்தியாக இருக்கிறது.

சுட்டிகளிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நிறையப் புத்தகங்களை படிக்க வேண்டும். ஆன் லைனில் உலா வருவது தப்பு இல்லை. அங்கே ஆக்கபூர்வமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதைத் தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உங்கள் வீட்டுத் தாத்தா பாட்டிகளுக்காக ப்ளாக் உருவாக்கி, அதில் அவர்களது அனுபவங்களைப் பதிய உதவுங்கள்'' என்று அன்போடு அறிவுறுத்துகிறார் ருக்மணிப் பாட்டி.

ருக்மணிப் பாட்டியின் ப்ளாக் http://chuttikadhai.blogspot.in

-சரா

 நீங்களும் ப்ளாக் (BLOG) எழுதலாம்!

ப்ளாக் எழுதுவது ஏதோ பெரியவர்களுக்கான விஷயம் என்று நினைக்காதீங்க. நீங்களும் ப்ளாக் எழுதலாம். இது ஈஸியானது மட்டுமல்ல; மிகவும் பயனுள்ளதும்கூட.

ப்ளாக் என்றால் என்ன? உங்களுக்கு டைரி தெரியும்தானே? டைரியில் அன்றாட அனுபவத்தை எழுதிவைப்போம். அதுபோலதான் ப்ளாக்கும். இதை 'இணைய டைரி’ என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு என ஒரு நோட்டு வாங்குவது போல இணையத்தில் தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த ப்ளாக்குக்கு உங்களுக்குப் பிடித்த பெயரைவைத்துக் கொள்ளலாம். பிறகு, உங்களுக்குப் பிடித்த விஷயங்களை தினமும் எழுதலாம். இதற்காகவே blogger.com, wordpress.com முதலான வலைத்தளங்கள் இலவசமாகவே ப்ளாக் எழுதுவதற்கானத் தளத்தைத் தருகின்றன.

நீங்கள் தமிழிலும் ப்ளாக் எழுத முடியும். http://www.google.com/transliterate/Tamil என்ற முகவரிக்குச் சென்று amma என ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் 'அம்மா’ என்று வரும். இதை தமிழ் டிரான்ஸ் லிட்ரேஷன் என்கிறோம். இப்படி எளிதாக தமிழில் டைப் செய்து, அந்த உள்ளடக்கத்தை ப்ளாக்கில் வெளியிடலாம்.

உங்களில் பலருக்கும் பெற்றோர்கள் இ-மெயில் உருவாக்கிக் கொடுத்து இருக்கலாம். அதைப்போலவே உங்களுக்கான ப்ளாக்கையும் உருவாக்கித் தரச்சொல்லாம். எல்லாம் சரி... ப்ளாக் ஆரம்பிச்சுட்டா, அதில் என்ன எழுதலாம், எப்படி எழுதலாம்?

உங்களுக்கு விருப்பமானதைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிதான் ப்ளாக். உங்களுக்குக் கதைகள் பிடிச்சு இருந்தா கதைகள் எழுதலாம். சின்னதா ஒரு தலைப்புக் கொடுத்து, அதன் கீழே ஒரு பத்து, பதினைந்து வரிகள் எழுதினால்கூட போதும். நீங்கள் படித்த புத்தகம் பற்றி, பிடித்த விளையாட்டு பற்றி எழுதலாம். உங்கள் தினசரி வாழ்க்கை அனுபவத்தை எழுதலாம். நீங்கள் வரைந்த ஓவியத்தைக்கூட வெளியிட முடியும்.

உங்கள் பள்ளி பற்றியும் எழுதலாம். இப்படித்தான் ஸ்காட்லாந்த்தில் மார்த்தா என்ற ஒன்பது வயது சுட்டி, தனது பள்ளியைப் பற்றியும் லஞ்ச் பற்றியும் போட்டோவுடன் எழுதி, அதன்மூலமே எல்லாரும் பாராட்டும் நிலைக்கு வந்துட்டாங்க தெரியுமா? அவரது ப்ளாக் அட்ரஸ் இது - http ://neverseconds.blogspot.co.uk

உங்களோட திறமையை வெளிப்படுத்தி, அதை வளர்த்துக்கொள்ள ப்ளாக்கைப் பயன்படுத்தலாம். இப்பவே ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டு பயன்படுத்தினீர்கள் என்றால், எதிர்காலத்தில் முன்னேற்றத் துக்கான திருப்பமாக இருக்கும்.

இணையத்தில் http://blogintamil.blogspot.in/ என்ற முகவரிக்குச் செல்லுங்கள். வலைச்சரம் என்ற இந்த ப்ளாக், தமிழில் சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் காட்டுகிறது. இதில் உள்ள 'வலைப்பதிவர் உதவிப் பக்கம்’ என்ற பகுதியில் தமிழில் ப்ளாக் எழுதுவதற்கான முழுமையான வழிகாட்டல் இருக்கிறது.

உங்க வீட்டுப் பெரியவங்க உதவியோட ப்ளாக் தொடங்குங்க... கலக்குங்க!

- சைபர்சிம்மன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு