Published:Updated:

உள்ளம் கவர் சாந்தினி

உள்ளம் கவர் சாந்தினி

உள்ளம் கவர் சாந்தினி !

திருச்சி டவுன் ஹாலில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி சாந்தினி. தன் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த ஆசிரியைகளின் உள்ளத்தையும் கவர்ந்து இருக்கிறார். 'எங்கள் பள்ளியின் சொத்து’ என்று பெருமையுடன் சொல்கிறார்கள் இவரது ஆசிரியர்கள்...

உள்ளம் கவர் சாந்தினி
##~##

பேபி (ஆங்கில ஆசிரியை): ''பள்ளியில் வகுப்பு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே சாந்தினி வந்துவிடுவாள். முதல் வேலையா மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவாள். 'காலையில நாம சாப்பிட்டுட்டுவர்றோம். நம்மைப் போல தாவரங்களும் உயிரினம்தானே? அதுங்களுக்கு சாப்பாடு போடணும்ல’ என்பாள் கரிசனத்துடன்.''

சுகந்தி ஃப்ளாரன்ஸ் (சமூக அறிவியல் ஆசிரியை): ''வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கி சுத்தமா வெச்சுக்கிறது சாந்தினிக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளி வளாகத்தில் குப்பை எங்கே தென்பட்டாலும் அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவாள். பள்ளி மைதானத்தையும் ஒரு ரவுண்ட் வந்து கல், காகிதம், கம்பி, குப்பை எனத் தேவையற்ற பொருட்கள் எது கிடந்தாலும் அப்புறப்படுத்துவாள். கஷ்டமான வேலையையும் சளைக்காமல் புன்னகையுடன் செய்துமுடிக்கிறது அவளோட தனிக் குணம்.''

சாந்தா (அறிவியல் ஆசிரியை): ''சாந்தினி படிப்பதிலும் கெட்டிக்காரி. யாருக்காவது பாடம் புரியவில்லை என்றால், அவர்களுக்குப் புரியும்  விதத்தில் சொல்லிக்கொடுப்பாள். எப்போதும் சக மாணவிகளோடு சேர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுவாள். 'ஜூனியர் ரெட் கிராஸ்’ அமைப்பில் இருக்கிறாள். அதில், தான் தெரிந்துகொண்ட முதலுதவி முறைகளை மற்றவர்களுக்கும் செய்துகாட்டி பயிற்சி கொடுப்பாள். மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அங்கே தவறாமல் ஆஜராகி உதவி செய்வாள்.''

உள்ளம் கவர் சாந்தினி

கிறிஸ்டி அமரா (தமிழ் ஆசிரியை): ''பணிவாகவும் இனிமையாகவும் பேசிப் பழகுறது எப்படிங்கிறதை சாந்தினிக்கிட்டே இருந்துதான் கத்துக்கணும். யாரோட மனசையும் நோகடிக்காம நடந்துக்குவா. கோபமான சுபாவம் உள்ளவங்களையும் அவளோட கனிவான பேச்சு மாத்திடும். அதேமாதிரி சோகமான சூழலில் ஏதாவது டைமிங்கா ஜோக்ஸ் சொல்லி ஜாலியாக்கிடுவா.''

-அ.சாதிக் பாட்ஷா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

அன்புக்குரிய அன்பழகி டீச்சர் !

மயிலாடுதுறை அருகே உள்ளது அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. 'உங்களுக்குப் பிடிச்ச டீச்சர் யார்?’ என்று பள்ளியின் மாணவ, மாணவிகளிடம் கேட்டோம். பலரும் சட்டெனச் சொன்னது 'அன்பழகி டீச்சர்.’

பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் இவர், ஏழாவது மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குத் தமிழ் ஆசிரியை. 'அன்பழகி டீச்சர் பத்தி நாங்கதான் சொல்வோம்’ என்று போட்டி போட்டுக்கொண்டு சுட்டிகள் சிலர் சொன்னார்கள்.

உள்ளம் கவர் சாந்தினி

தீபிகா: ''தலைமை ஆசிரியரா இருந்தாலும் எங்கக்கூட ரொம்ப நெருங்கிப் பழகுவாங்க. எங்க ஸ்கூலுக்கு ரொம்ப வசதி குறைந்த கிராமப் பகுதியில் இருந்துதான் மாணவர்கள் வர்றாங்க. சிலர் அவசரத்துல சாப்பிடாமலேயே வந்துடுவாங்க. அந்தப் பசங்களால மதிய சத்துணவு நேரம் வரைக்கும் காத்திருக்க முடியாது. அதனால, அவங்களுக்கு அன்பழகி டீச்சர்தான் பிஸ்கட், சாப்பாடு வாங்கித் தருவாங்க. இப்ப எல்லாம் யாராவது சாப்பிடாம வந்தா அவங்களுக்கு நாங்களே சாப்பாடு வாங்கித் தர்றோம். இந்தப் பழக்கம் எங்க டீச்சர்கிட்ட இருந்துதான் வந்துச்சு.''

சூர்யா: ''அன்பழகி டீச்சர் தமிழ் நடத்தும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும். புராணக் கதைகள் நிறைய சொல்வாங்க. கூடவே இப்ப உள்ளச் சூழலில் நடக்கிற சம்பவங்களையும் நகைச்சுவையோடு சொல்வாங்க. அதனால, ஜாலியா இருக்கும். சில நேரங்களில் நாங்களே டீச்சருக்குக் கதை சொல்வோம். எங்களைச் சொந்தமாகக் கதைச் சொல்லச் சொல்லி உற்சாகப்படுத்துறது ரொம்பப் பிடிக்கும்.''

உள்ளம் கவர் சாந்தினி

கீர்த்தனா: ''மத்த ஸ்கூல்போல இங்கே அதிகமான போட்டிகள், விழாக்கள் நடக்காது. ஆனால், வேறு பள்ளிக் கூடங்களில் நடக்கும் போட்டிகளுக்கு எங்களைத் தவறாம அனுப்புவாங்க. எந்தப் போட்டியா இருந்தாலும் அதில் வெற்றிபெற நிறைய யோசனைகளை அன்பழகி டீச்சர் சொல்வாங்க. அவங்களை மாதிரி யாராலயும் என்கரேஜ் பண்ண முடியாது. எங்க ஒவ்வொருத்தரோட தனித் திறமைகளை வளர்க்கிறதுக்கு நிறைய உதவிசெய்வாங்க.''

அருண்குமார்: அன்பழகி டீச்சர் ரொம்பக் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, யாரையும் அடிக்கவோ திட்டவோ மாட்டாங்க. அன்பாலயே திருத்துவாங்க. ஏழாவது, எட்டாவது க்ளாஸ்ல எல்லாருக்குமே கம்ப்யூட்டர்ல தமிழ்லயே டைப் பண்ணத் தெரியும். அந்த அளவுக்கு எங்களுக்குக் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்ததே அன்பழகி டீச்சர்தான்.''

- மா.நந்தினி
படங்கள் : ஜெ.ராம்குமார்