Published:Updated:

கொடுத்து மகிழ்வோம் !

கே.யுவராஜன் ,எஸ்.தேவராஜன்

கொடுத்து மகிழ்வோம் !

கே.யுவராஜன் ,எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நீங்க எப்போ எல்லாம் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க? அப்பா, அம்மாவோடு பிடிச்ச இடங்களுக்குப் போகும்போது... பிடிச்ச கார்ட்டூன் சேனல் அல்லது சினிமா பார்க்கும்போது... நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது...

இது எல்லாவற்றையும்விடக் நிச்சயமா இன்னொரு சமயத்தில் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவீங்க. வகுப்பிலோ, வெளியிலோ உங்க நண்பனுக்கோ அல்லது தெரியாத ஒரு நபருக்கோ திடீர்னு ஒரு பொருள் தேவைப்பட்டு இருக்கும். அது ஒரு பேனாவோ, பென்சிலோகூட இருக்கலாம். நீங்க கொடுத்து இருப்பீங்க. அவங்க அதைப் பயன்படுத்திட்டு திருப்பிக் கொடுக்கிறப்ப 'ரொம்ப தேங்க்ஸ்’னு சொல்லி இருப்பாங்க. அப்போது ஏற்பட்ட சந்தோஷம் நினைவுக்கு வருதா? கொஞ்சம் நேரம் கொடுத்ததுக்கே சந்தோஷம் ஏற்படுதே, அந்தப் பேனாவை 'நீயே வெச்சுக்க’ என்று சொன்னால், இன்னும் எவ்வளவு சந்தோஷம் ஏற்படும்? இந்த மகிழ்ச்சியை எல்லோரும் அனுபவிக்க உருவானதுதான் 'ஜாய் ஆஃப் கிவிங் வீக்’ (Joy of Giving Week).

'அப்படிக் கொடுத்து மகிழ நாங்க ரெடி!’ என்றார்கள் கடலூர், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி சுட்டிகள். அவர்களுடன் சேர்ந்து சுட்டி விகடன் மூலமாக ஜாய் ஆஃப் கிவிங் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம். பரிசு தேவைப்படுகிறவர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், பரிசுக் கொடுக்க நினைப்பவர்களுக்குப் பச்சை நிறத்திலும் அழகான அட்டைகளை தயார்செய்துகொண்டு சென்றோம்.

கொடுத்து மகிழ்வோம் !

''வாங்க... வாங்க... பசங்க ரொம்ப ஆர்வத்தோடு காத்திருக்காங்க. மரமும் பசங்களுக்காக காத்திருக்கு'' என்று வரவேற்றார் பள்ளி முதல்வர் இரா.நடராசன். பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தை, கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சகமாக மாற்றி இருந்தார்கள்.

தேவை இருப்பவர்களுக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்படும். அதில் அவர்கள் தங்களது பெயர், வகுப்பு ஆகியவற்றை எழுதி, என்ன தேவை என்பதையும் குறிப்பிட வேண்டும். பிறகு, அந்த அட்டையை மரத்தில் கட்ட வேண்டும். அட்டையில் கேட்கப்பட்டு இருக்கும் பொருளைத் தன்னால் கொடுக்க முடியும் என நினைக்கும் ஒரு மாணவன், அங்கே வைக்கப்பட்டு இருக்கும் பச்சை நிற அட்டையில் தன் பெயர், வகுப்பு ஆகியவற்றை எழுதி, 'நான் உனக்குக் கொடுக்கிறேன்’ என்று குறிப்பிட்டு, கோரிக்கை அட்டையை (மஞ்சள்)எடுத்துவிட்டு கொடுக்கும் அட்டையை (பச்சை) மரத்தில் கட்ட வேண்டும்.

கொடுத்து மகிழ்வோம் !

அதன்படி, ஒவ்வொரு வகுப்பாக சென்று மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. சுட்டிகள் உற்சாகத்துடன் பூர்த்திசெய்ய ஆரம்பித்தார்கள். ''டீச்சர்... என்னை அப்பா தினமும் பைக்ல கூட்டிட்டு வர்றார். எனக்கு காரில் வரணும்னு ஆசை. அதனால, எனக்கு கார் வேணும்னு எழுதட்டுமா?'' என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்தான் ஒரு மாணவன்.

கொடுத்து மகிழ்வோம் !

''உனக்குக் கொடுக்கப் போகிறவனும் உன்னை மாதிரி ஒரு பையனோ, பொண்ணோதான். நீ உன்னோட பாக்கெட் மணியில் இருந்து என்ன வாங்கிக் கொடுக்க முடியும்? அந்த மாதிரிதான் நீ கேட்கும் பொருளும் இருக்கணும்'' என்றார் ஆசிரியை. பிறகு சுட்டிகள் வரிசையாக வந்து, மரத்தில் அட்டைகளைக் கட்ட ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் அந்த மரம் மஞ்சள் நிற அட்டைகளால் நிரம்பியது. உணவு இடைவேளைக்குப் பிறகு அங்கே வந்த வேறு சுட்டிகள், அவற்றை ஆர்வத்துடன் படித்தனர். அங்கே இருந்த பச்சை நிற அட்டைகளை எடுத்து எழுத ஆரம்பித்தார்கள். நேரம் செல்லச் செல்ல, அந்தப் பசுமையான மரம் பச்சை அட்டைகளால் மேலும் பசுமை ஆனது.

மாலையில் மாணவர்களுடன் பள்ளி முதல்வரும் சில ஆசிரியர்களும் வந்து மரத்தில் இருந்த அட்டைகளைப் படித்துப் பார்த்தார்கள். ''ஆறாம் வகுப்பு 'பி’ செக்ஷன் அபிஷேக் கேட்டு இருக்கிற ஜெல் பேனாவைக் கொடுக்க, ஏழாம் வகுப்பு 'சி’ செக்ஷன் ரஞ்சித் சம்மதித்திருக்கிறான்'' என்றார் ஓர் ஆசிரியர்.

ரஞ்சித் பேனாவைக் கொடுக்க, அபிஷேக் பெற்றுக்கொண்டான். இப்படி ஒவ்வொருவரும் பரிசுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் முகங்களில் அவ்வளவு மகிழ்ச்சி.

''இன்னிக்கே கொடுக்க முடியாதவங்க, நாளையோ, அடுத்த நாளோ கொடுக்கலாம். அதுவரை இந்தக் கற்பக விருட்சம் உங்களுக்காக அட்டைகளுடன் காத்திருக்கும். இந்த வயதில் உங்கள் மனங்களில் விதைக்கப்படும் நல்ல விஷயங்கள்தான் பெரியவர்கள் ஆனதும் விருட்சமாக மாறும். அதனால், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தையும் குணத்தையும் இன்று முதல் ஆரம்பியுங்கள். அப்படிச் செய்தால், இந்த உலகில் வாழும் சந்தோஷமான மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்'' என்றார் பள்ளி முதல்வர் இரா. நடராசன்.

கொடுத்து மகிழ்வோம் !

சுட்டிகள் அனைவரும் சென்ற பிறகும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருந்தது அந்த மரம்!

 விஷ் ட்ரீ !

இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் ''கொடுக்கும் திருவிழா''வில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். தொண்டு நிறுவனங்கள், பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும் தங்கள் பகுதியில் முடிந்த உதவிகளைச் செய்யும். கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்களின் பங்களிப்போடும் நாடு முழுவதும் 1,700 பள்ளி மற்றும் கல்லூரிகளின் துணையுடனும் 700-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உதவிகள் ஒரே வாரத்தில் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ல் தொடங்கி 8ஆம் தேதி வரை 'கொடுத்து மகிழ்வோம் வாரம்’ கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு 'Wish Tree'  எனப்படும் மரத்தின் மூலம் பலரது சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றலாம்.

கொடுத்து மகிழ்வோம் !