Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
##~##

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கழூய்ரோ வாட்டனாபே (Kazhuiro watanabe) ஒரு ஃபேஷன் டிசைனர். சமீபத்தில் இவர், தன் தலைமுடியைச் செங்குத்தாக நிற்கவைத்து 2013-ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். செங்குத்தாக இருக்கும் தலைமுடியின் உயரம் 113.5 செ.மீ. இப்படி நிற்கவைப்பதற்காகத் தலைமுடியை 15 வருடங்களாக வளர்த்து வந்தார் வாட்டனாபே. இவரின் தலைமுடியை நிற்கவைக்க ஒரு டீமே செயல்பட்டது. இதற்காக மூன்று கேன்கள் ஹேர் ஸ்ப்ரேவும் ஒரு ஜார் ஜெல்லும் உபயோகித்து, இரண்டு மணி நேர உழைப்புக்குப் பின் தலைமுடியை இப்படி நிற்கவைத்தார்கள்.    

பென் டிரைவ் !

பொதுவாக, நூலகத்தின் உள்ளேதான் புத்தகங்களை அடுக்கிவைத்து இருப்பார்கள். ஆனால், அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரின் ஒரு வீதிக்குச் சென்றால், பிரமாண்டமான புத்தக அடுக்குகளை வெளியிலேயே பார்க்கலாம். மக்களிடம் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த, இங்கே இருக்கும் நூலகத்தின் கட்டடத்தைப் புத்தக வடிவில் கட்டி இருக்கிறார்கள். வரிசையாக 22 புத்தக வடிவங்களைக்கொண்ட நூலக அறைகள் ஒவ்வொன்றும் 25 அடி உயரமும் 9 அடி அகலமும் கொண்டவை. இந்தக் கட்டடத்துக்கு, 'புக் ஷெல்ஃப்’ என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள். இங்கே படிக்க வரும் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த அழகிய கட்டடம்!

பென் டிரைவ் !

அய்யய்யோ... ரயிலின் உள்ளே கடல் தண்ணீர் வந்துவிட்டதோ என்றுதானே யோசிக்கிறீர்கள்? அப்படிப் பதற வேண்டியது இல்லை.

பார்ப்பதற்கு உண்மையான தண்ணீர் போலவே தெரியும் இது, ஓவியமே. தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஒரு நிறுவனம், விளம்பரத்துக்காக ரயில்களில் இப்படி வரைந்து இருக்கிறார்கள். முதல் முறையாக இந்த ரயிலில் ஏறுபவர்கள் இதைப் பார்த்ததும், ஒரு கணம் பதறிக் கால்களைப் பின்னால் இழுத்துக்கொள்ளும் தமாஷ் நடப்பது உண்டு.

பென் டிரைவ் !

 கணினியில் பயன்படுத்தப்படும் 'ஐகான்’கள் பற்றித் தெரியும்தானே? நட்சத்திரம், நிலா, அம்புக்குறி எனப் பல விதமான குறியீடுகள் இருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த 52 வயது கிராஃபிக் டிசைனர் திருமாறன், விநாயகர் ஐகான்களை உருவாக்கி, அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கிராஃபிக் டிசைனிங்கில் ஒரே மையப் பொருளைவைத்து அதிகபட்சமாக சுமார் 200 வடிவங்களைத்தான் உருவாக்க முடியும். ஆனால், திருமாறன் உருவாக்கி இருக்கும் விநாயகர் வடிவங்களின் எண்ணிக்கை 3,500.

ஏ, பி, சி, டி எழுத்துகள் தொடங்கி, பல வகை விநாயகர் உருவங்களை உருவாக்க சுமார் ஐந்து ஆண்டு உழைப்புத் தேவைப்பட்டு இருக்கிறது. ''இந்த உருவங்களை நகைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் செய்யவும், காலண்டர் மற்றும் திருமண அழைப்பிதழ்களிலும் பயன்படுத்தலாம். டி ஷர்ட்டில்கூட பதிந்து வலம் வரலாம்'' என்கிறார் திருமாறன். இந்தச் சாதனையை கின்னஸில் பதிவுசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

பென் டிரைவ் !

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பள்ளி, ' மிக அதிக மாணவர்கள் படிக்கும் உலகின் மிகப் பெரிய பள்ளிக்கூடம்’ என்ற சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. 'சிட்டி மான்டிசோரி ஸ்கூல்’ என்ற அந்தப் பள்ளியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். உலக அளவில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இதுவே மிகப் பெரிய பள்ளி.

கடந்த 1959-ல் வெறும் ஐந்து மாணவர்களுடன் ஒற்றை அறையில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று உலக சாதனை படைத்து இருப்பதற்குத் தங்களது சிறப்பானக் கல்விப் பணியே காரணம் என்று பெருமிதத்துடன் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.