Published:Updated:

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

வி.சிவக்குமார் ஜீ.கார்த்திகேயன், பழநி.

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

வி.சிவக்குமார் ஜீ.கார்த்திகேயன், பழநி.

Published:Updated:
##~##

என்னதான் விதவிதமா ஆடைகள் வந்தாலும் பட்டுக்கு இருக்கிற மதிப்பே தனிதான். இந்தப் பட்டு எப்படித் தயாராகி வருகிறது? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விசிட் அடித்தோம்.

பழநியில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான கிராமம் பூலாம்பட்டி. இங்கே பட்டுப்பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார் சிவக்குமார் அங்கிள்.

''நான் ஆறு வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். பட்டுப்புழுக்களைப் பராமரிப்பதில் ரொம்பவே கவனம் தேவை. பூச்சிகள், சிறிய எறும்புகளால்கூட ஆபத்து ஏற்படும். அதனால் ஊசி மாத்திரையைப் பயன்படுத்துவோம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதைத் தண்ணீரில் கரைத்து வைக்கும்போது, அவற்றால் ஈர்க்கப்படும் பூச்சிகள் அதில் விழுந்து இறந்துவிடும்.'' என்றார்.

''பட்டுப்பூச்சிகளுக்கு வளர்ச்சியில் பல பருவங்கள் இருக்காமே?''

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

''ஆமாம்! பட்டுப்புழுக்களை அவற்றின் வளர்ச்சி பொருத்து, ஐந்து பருவங்களாகப் பிரிப்பார்கள். ஒரு பட்டுப்புழு முட்டையைப் பொரித்து வெளியே வர ஆறு நாட்கள் ஆகும். இது முதல் பருவம். அதுவரை ஜாக்கி எனப்படும் இளம் பட்டுப்புழு பராமரிப்பு மையங்களில் அவை இருக்கும். பின்பு ஏழாவது நாளில் எங்களைப் போன்ற விவசாயிகள் அவற்றை வாங்கி வருவோம். பட்டுப்புழுக்களை நோய்க் கிருமிகள் தாக்காமல் இருக்க, சுண்ணாம்புத்துகள் என்ற கலவையை சுற்றிலும் தெளிப்போம். அன்றைக்குக் காலையில் மட்டும் சிறிதளவு உணவு வைப்போம்'' என்றார்.

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

''என்ன மாதிரி உணவு?''

''பட்டுப்புழுக்கள் மல்பெரி என்ற செடியின் இலையை மட்டுமே உண்ணும். இந்த மல்பெரிச் செடியை நாங்களே தோட்டத்தில் விளைவிக்கிறோம். ஒரு முறை விதைத்து முறையாகப் பராமரித்தால், 30 வருடங்கள் பயன் அளிக்கும். எட்டாவது நாளில் பட்டுப்புழுவின் இரண்டாம் பருவம் தொடங்கும். அன்று தோலுரிக்கும். அப்படித் தோலுரிக்கும் நாட்களில் உணவைச் சாப்பிடாது.''

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

''தோலுரிப்பது என்றால் என்ன?''

'' 'பாம்பு சட்டையை உரிக்குது’ என்று சொல்வார்களே அப்படித்தான். இப்படித் தோலை உரிக்க உரிக்கத்தான் பட்டுப்புழுக்கள் சீராக வளர முடியும். 12-ம் நாள் மீண்டும் தோலுரித்து மூன்றாவது பருவம் தொடங்கும். இப்படியே 16-ம் நாளில் நான்காம் பருவம், 18-ம் நாளில் நான்காவது முறையாக தோலுரிப்பு எனத் தொடரும். 24-ம் நாளில் ஒரு சாக்பீஸ் நீளத்துக்கு வளர்ந்துவிடும். 25-வது நாள் கூடு கட்டத் தொடங்கும். அன்றுதான் பட்டுப்புழுவுக்கு ஐந்தாம் பருவம் தொடங்கும்'' என்றார்.

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !

புழுக்கள் கூடு கட்டிக்கொண்டு இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். ''இப்படி ஒவ்வொரு புழுவும் தன்னைச் சுற்றிக் கூடு கட்டத் துவங்கும். இந்தக் கூடு 30-வது நாளில் முடிவுறும். இவற்றைச் சந்தைக்கு எடுத்துச் செல்வோம். வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சுடு தண்ணீரில் போடுவார்கள். புழுக்கள் இறந்த பின், புழுவில் உள்ள நூலை உருக்கி பட்டு நூல் தயாரிக்கும் இடத்துக்கு அனுப்புவார்கள். பட்டுகளில் இரண்டு வகை முக்கியமானது. ஒன்று வெண்பட்டு, அடுத்து மஞ்சள் பட்டு. இதில் மஞ்சள்பட்டு பராமரிப்பு சுலபம். ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நீங்க இங்கே பார்த்தது வெண்பட்டு. இதன் பராமரிப்பு கொஞ்சம் கடினமானது. ஒரு கிலோ 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கான மார்க்கெட்டுகளில் கோவை, தருமபுரி, சேலம், பென்னாகரம் சந்தைகள் பிரசித்தி பெற்றவை. முக்கியமான பட்டு தயாரிக்கும் இடம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகில் இருக்கும் ராம் நகர். சில்க் சிட்டி எனப்படும் இந்த இடம், ஆசியாவிலேயே பெரிய பட்டுச் சந்தை நகரம்'' என்றார் சிவக்குமார் அங்கிள்.

நாம் பண்டிகை நாட்களில் பளபள என்று போட்டுக்கொண்டு வலம்வரும் பட்டு ஆடையை உருவாக்குவதில் புழுக்கள் தங்களையே தியாகம் செய்கின்றன!

தத்தித் தத்தி வரும் பட்டுப் புழுக்கள் !